Saturday, September 24, 2016

kinaru vitra kathai tamil story

கிணறு விற்ற கதை

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு” என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

1 comment: