Thursday, September 29, 2016

kanaamal ponavan tamil story

காணாமல் போனவன்

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில வித்து வந்தார் தாத்தா. ஒரு நாள் மதியம் ரொம்ப களச்சு போய் சாப்பிட உக்காந்தார். பாட்டி அவருக்கு
கேழ்வரகு களி கொடுத்து அனுப்பி இருந்தாங்க.
களிய கையில எடுத்ததும் களி
தவறி கீழ விழுந்து உருண்டு ஓடிடுச்சு. பாவம் தாத்தா, அந்த தள்ளாத வயசுல களிய துரத்திட்டு ஓடினார்.

களி ஒரு பொந்துக்குள்ள விழுந்துடுச்சு. அது எலி பொந்து போல இருந்துச்சு.அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார்.நல்ல பசி வேற. அப்ப திடீர்னு ஒரு அழகான எலி எட்டி பாத்து..”மிக்க நன்றி தாத்தா” அப்படின்னு சொல்லுச்சு.அட எலி பேசுதேன்னு பாத்தாரு.”நல்லா சாப்பிடுங்க எலி. அழகா இருக்கீங்களே” ன்னு சொன்னாரு. எலி சிரிச்சிட்டு..”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?”ன்னு கேட்டுச்சு.

“இந்த சின்ன பொந்துக்குள்ள நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழ உக்கார்ந்துகிட்டாரு. கால் வலி இருந்துச்சு போல. “என் வாலை பிடிச்சிக்கோங்க தாத்தா.கண்ணை மூடிக்கோங்க” ன்னு சொல்லுச்சு எலி. வாலை பிடிச்சிகிட்டார்.கண்ணை மூடிக்கிட்டார்.

எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு தாத்தாவுக்கு. “தாத்தா வாங்க வாங்க” அப்படி சத்தம் கேட்டு கண்ணை த் தொறந்தார் தாத்தா. எலிக்களோட அரண்மனை தான் அது.நிறைய தங்கம் இருந்தது. எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தது. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிட்டு இருந்துச்சு. சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்துட்டு வந்துச்சு. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு.

பெண் எலி ஒன்னு வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு இருந்துச்சு..

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

தாத்தா பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டார். ராஜா போல இருந்த எலி ஒன்னு தாத்தாவுக்கு மூட்டை நிறைய தங்கம் கொடுத்து அனுப்பிச்சாம்.மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.

வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சொன்னாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு.பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் கேட்டான். அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

எலிகள் பாடும் சத்தம்.அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சாம். இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு யோசிச்சான்.பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல.கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல.

எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல.இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல. தான் செய்த தவறை நினைத்து வருந்தினான்.

appavin manam tamil story

ஒரு செல்வச் செழிப்பான ஒரு மனிதரும் அவருக்கு ஒரே மகனும் இருந்தார்கள். இருவருக்குமே ஆபூர்வமான கலைப்பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். பிக்காசோவில் இருந்து ரஃபேல் வரையிலும் அனைத்துக் கலைஞர்களின் படைப்புக்களும் அவர்கள் வசமிருந்தன. அவர்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து கலை உலகின் உன்னதப் படைப்புகளைப் புகழுவார்கள்.
அந்த சமயத்தில் வியட்நாம் போர் வெடித்தது. மகன் யுத்தத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டான். அந்த யுத்தத்தில் தன்னுடைய சக வீரன் இன்னொருவனைக் காக்க முயலும் போது குண்டடிபட்டு உயிர் துறந்தான். ஒரே மகனைப் பறிகொடுத்த வேதனை அந்தத் தகப்பன் பல நாட்கள் துக்கித்து இருந்தார்.
ஒரு மாதம் கழிந்து கிறிஸ்துமஸுக்கு முன் அவரது வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். வெளியே ஒரு இளைஞன் கையில் ஒரு பெரிய மூட்டையுடன் நின்று கொண்டிருந்தான்.
பேசத் தொடங்கினான்,
"ஐயா ! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்கள் மகனுடன் பணியாற்றியவன். உங்கள் மகன் என்னையும் , என்னைப் போன்ற பலரையும் காப்பாற்றும்போதுதான் குண்டு பட்டு இறந்து போனான். அவன் அடிக்கடி உங்களைப் பற்றியும் , நீங்கள் ஓவியங்களின் மீது கொண்டுள்ள நேசத்தைப் பற்றியுமே பேசுவான்" என்றபடி தன் கையில் இருந்த மூட்டையைப் பிரித்தான்.
"ஐயா, நான் ஒரு சிறப்பான ஓவியனல்ல. இருந்தாலும், எங்கள் உயிரைக் காப்பாற்ற உங்கள் மகன் குதிரையில் வீரமாய் சண்டையிட்ட காட்சி மனதில் பதிந்து விட்டது. அதுவே என்னை ஓவியனாக்கி விட்டது " என்றபடி ஒரு ஓவியத்தை அவரிடம் கொடுத்து விட்டு அழுதான்.
படம் அத்தனை நேர்த்தியில்லைதான். அவரிடம் இருந்த வான்கோ, பிக்காஸோ ஓவியங்கள் போன்ற கலைநயமும் அதில் இல்லை. இருந்தாலும் மகனை நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வில் தகப்பன் அழுதார்.
"உங்கள் செய்த தியாகத்திற்குக் கைமாறு செய்ய என்னால் இயலாது. என்னாலானது இதுதான் " என்று கூறிக் கண்ணீருடன் விடைபெற்றான்.
தகப்பன் அதனை வீட்டின் முக்கியமான இடத்தில் தொங்கவிட்டு, வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் தன்னுடைய மற்ற புகழ் பெற்ற ஓவியங்களுடன், தன் மகனின் படத்தையும் காண்பிக்கத் தொடங்கினார்.
கொஞ்ச காலத்தில் அவரும் இறத்து போனார். வாரிசு இல்லாததால் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் படைப்புகள் எல்லாம் ஏலத்துக்கு வந்தது . அரிய ஓவியங்கள் என்பதால் ஏலம் எடுக்கக் கூட்டம் அலைமோதியது. அதில் மகனின் ஓவியமும் இருந்தது.
ஏலதாரர் முதலில் மகனின் ஓவியத்தை எடுத்தார்.
" இதற்கு முதலில் யார் விலை கேட்கப் போகிறீர்கள்" என்றார் . பிக்காஸோவையும் , லியோனர் டோ டாவின்ஸியையும் எதிர்பார்த்து வந்த கூட்டம் , இதைப் பார்த்ததும் முகம் சுளித்தது . யாருமே ஏலம் கேட்கவில்லை.
ஏலதாரர் சொன்னார் ,
" இதற்கு நானே விலை வைக்கிறேன்" என்று சொல்லி ஆரம்பித்தார்.
"பத்தாயிரம் , பத்தாயிரம் " . யாருமே ஏலம் கேட்கவில்லை . இப்போது தொகையைப் பாதியாகக் குறைத்து ஐயாயிரமாக்கினார். இப்போதும் பதிலில்லை. கூட்டத்தில் ஒருவர் சொன்னார் , " ஐயா , ஏலதாரரே! இதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வேறு நல்ல ஓவியத்தை எடுங்கள். எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் " என்றார். ஏலதாரரோ ,
"இந்த ஓவியத்தை ஏலம் விட்ட பிறகுதான் மற்றவற்றை ஏலம் விட முடியும் " என்று மறுத்துவிட்டார்.
"மகனின் ஓவியம் . ரூபாய் ஆயிரம் . யாருக்காவது வேண்டுமா? " அப்போது ஒரு ஏழைத் தோட்டக்காரர் வாய் திறந்தார்.
" ஐயா. எங்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்குது. மகனின் ஓவியத்தை எனக்குத் தருவீர்களா ?"
"முன்னூறு ஒரு தரம் . இரண்டாம் தரம் . மூன்றாம் தரம் " ஏலம் முடிந்தது.
இப்போது ஒருவர் கேட்டார் ,
"அதான் மகனின் ஓவியம் ஏலம் போய் விட்டதே . மற்ற ஓவியங்களை ஏலம் விடலாமே " என்றார் . ஏலதாரர் சொன்னார் ,
" ஏலம் முடிந்துவிட்டது. இந்தப் படங்களின் சொந்தக்காரர்
ஒரு உயிலையும் எழுதி வைத்திருக்கிறார். மகனின் ஓவியத்தை விரும்பி ஏலம் எடுக்கும் ஒருவருக்கு , தம்முடைய மற்ற ஓவியங்களும் , வீடும் , தோட்டமும் சொந்தம் என்று. இனி எல்லாமே சட்டப்படி அவருக்குத்தான் . நீங்களெல்லாம் கிளம்பலாம் " என்றார்.
பிதாவானவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை 2000 ஆண்டுகளுக்கு முன்பாய் , நமக்காகக் கோர சிலுவையில் பலியாகும்படி ஒப்புக் கொடுத்தார்.
அந்த ஏலதாரரைப் போலவே இன்று உங்களிடம் கேட்கின்றார் ,
" இதோ குமாரன்.யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும்? " என்று உங்களை நோக்கிக் கேட்கிறார்.
நீ குமாரனை சொந்தமாக்கிக் கொள்வாயா? நீ உன்னுடைய சொந்த இரட்சகராய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது உனக்குக் கிடைக்கும் வெகுமதிகள் உலகிலுள்ள எதனையும் விட மேலானதாய் , நீ கற்பனையில் கூடக் காண முடியாததாக இருக்கும். ஏசுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகப் பெரிய வெகுமதிகளை அடைவார்கள்.
"அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் "
சங்கீதம் 2 :12

thalmaiye menmai tamil story

மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார். அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?, என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு
செய்யுங்கள் அமைச்சரே,
என்றார். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.
எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள்
நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
அன்றுதான் அவன் ஒரு புலியை
வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள் என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்.
ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர். கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான். மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார். "அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால்
அதுதான் ஞான வாயிலின் முதல் படி! என்றார்.
தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்...
*நீதி:-*
*_பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை_*

aduthavarai azhika ninaithal tamil story

ஒரு வீட்டில் நிறைய கோழிகள் இருந்தன . தினமும் அவை அந்த வீட்டிலிருந்த பெரிய தோட்டத்தில் மேய்ந்து விட்டு, மாலை நேரத்தில் பாதுகாப்பாய் ஒரு பெரிய மூங்கில் கூண்டுக்குள் வந்து அடைந்து விடும்.
அந்தக் கோழிகளிலேயே கருப்பு என்ற கோழியை அங்குள்ள எல்லாக் கோழிகளுக்கும் பிடிக்கும். ஏனென்றால் அது எல்லாக் கோழிகளோடும் அன்பாகப் பழகும் . ஏதாவது ஒரு கோழிக்கு உடல் சுகமில்லையென்றால் அதனுடன் பரிவாகப் பேசி தைரியப் படுத்தும். அதற்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தானே கொண்டு வந்து கொடுக்கும். தீவனம் இடப்படும்போது முதலில் பலவீனமான கோழிகளையும் , வயதில் மூத்த கோழிகளையும் சாப்பிட வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் மற்ற கோழிகளை சாப்பிட அனுமதிக்கும்.
கருப்புக் கோழிக்கு இருந்த மரியாதையைக் கண்டு வெள்ளை என்ற கோழிக்கு எரிச்சலும் , பொறாமையுமாக இருந்தது. வெள்ளையும் ஏதாவது செய்து நல்ல பெயரெடுக்க முயற்சி செய்துதான் பார்த்தது. ஆனாலும் அதன் இயல்பான சிடுசிடுத்த குணமும் , எதற்கெடுத்தாலும் சண்டை வளர்க்கும் தன்மையும் , யாருக்குமே மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்ளும் விதமும் அதற்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது.
தன்னால் கருப்புக் கோழிபோல் பணிவாக நடந்து நல்ல பெயர் எடுக்க முடியாது என்று வெள்ளை உறுதியாக நினைத்தது. அந்த எண்ணம் கருப்பின் மேல் பொறாமையாக மாறிவிட்டது. ஏதாவது சூழ்ச்சி செய்து கருப்பை ஒழித்து விடத்திட்டமிட்டது . அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.
ஒரு நாள் மாலை வெள்ளைக் கோழி , பழிவாங்கும் எண்ணத்தோடு திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததில் கூட்டுக்குள் சென்று அடைந்து கொள்ள மறந்து விட்டது . எஜமானரும் இதை கவனியாமல் கூட்டை இழுத்துப் பூட்டி விட்டார். இரவு முழுவதும் தோட்டத்திலேயே நின்று கொண்டிருந்தது.
வேலிக்கு வெளியே யாரோ மூச்சு விடுகிற சத்தம் கேட்டது . அடர்த்தியாக வேயப்பட்டிருந்த வேலியில் இருந்த சிறிய இடைவளி வழியாய்ப் பார்த்து அது ஒரு நரி என்று தெரிந்து கொண்டது. அதன் மனதில் ஒரு திட்டம் உதித்தது.
" யாருப்பா அது, நரிதானே ?" என்றது.
நரி திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னது.
" ஆமாம் ஆமாம். தூக்கம் வரலை. அதான் இந்தப் பக்கம் வந்தேன். வெளிய வாயேன் . பேசிக்கிட்டு இருப்போம் " என்றது .
வெள்ளை சிரித்து விட்டது.
" உன்னப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்றதைக் கேட்டா நாளைக்கு உனக்கு ஒரு கோழி கிடைக்கிற மாதிரி செய்வேன் " என்றது.
நரி ஆசையுடன் ,
" கோழி கிடைக்கிறதா இருந்தா எதை வேணாலும் செய்றேன் சொல்லு "
என்றது.
" நீ பெருசா ஒன்னும் செய்ய வேண்டாம் . நாளைக்கு இதே நேரம் இந்த இடத்துக்கு வந்துடு. நான் ஒரு கோழியை வேலிக்கு வெளியே அனுப்புவேன் . அதை லபக்குன்னு பிடிச்சிக்கிட்டு போயிடு " என்றது.
நரி கேட்டது,
" எனக்கு இது நல்ல சேதிதான். ஆனாலும் ஒரு சந்தேகம் . உங்க ஆளையே நீ எதுக்கு மாட்டி விடுறே ?"
என்றது. வெள்ளை சொன்னது ,
" எல்லாருக்கும் அவனைத்தான் பிடிக்குது. என்னை யாருமே மதிக்கிறதில்லை . அதனாலதான் ".
" என்னை விட பெரிய ஆளுதான் நீ. எப்படியோ , எனக்கு நல்ல விருந்து கிடைச்சா சரிதான் " என்றபடி நரி நகர்ந்தது . மறுநாள் என்ன சதி செய்து கருப்பை ஒழிக்கலாம் என்ற சிந்தனையில் இரவு ஓடிப்போனது. ஒரு நல்ல யோசனையும் உதயமானது.
காலையில் எல்லாக் கோழிகளும் திறந்துவிடப்பட்டன. மற்ற கோழிகளெல்லாம் உற்சாகமாக உள்ளிருந்து வெளியே ஓடி வருகையில் , வெள்ளை மட்டும் தடுமாறித் தடுமாறி உள்ளே போய் நின்றபடி உறங்க ஆரம்பித்தது. எந்தக் கோழியும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கருப்பு மட்டும் அதனருகில் ஓடி வந்தது.
" என்ன ஆச்சு உடம்புக்கு ? ஏன் சோர்வா இருக்கே ? ராத்திரி கூட நீ கூட்டுல அடைஞ்ச மாதிரி தெரியலையே ? " என்று கருப்பு கேட்டதும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது வெள்ளைக் கோழிக்கு . பலவீனமாய் சொல்ல ஆரம்பித்தது ,
" என் தாய்க்கு இருந்த நெஞ்சு வலி எனக்கும் வந்துவிட்டது. நடக்கக்கூட முடியவில்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நாள் நான் உறங்கிக்கிட்டு இருந்தா எஜமான் என்னை அறுக்க சொல்லிடுவாரே . சரி விடு அது என் தலையெழுத்து . பாவம் உன் மனசையும் கஷ்டப் படுத்துறேன். நீ போய் உன் வேலையைப் பாரு " என்றது.
கருப்பு சொன்னது ,
" உன்னை இந்த நிலைல விட்டுட்டு நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா ? இப்படியெல்லாம் பேசாதே " . இந்த வார்த்தைக்காகவே காத்திருந்த வெள்ளை சொன்னது ,
" அதுக்காக உன்னை நான் பூனைக்காலி இலையைக் கொண்டு வரச் சொல்ல முடியுமா ? அது மட்டுந்தான் இதுக்கு ஒரே மருந்து. எங்கம்மா அதை சாப்பிட்டுதான் பிழைச்சாங்க . அது ராத்திரியில மட்டுந்தான் கண்ணுல படும் . நீல நிறத்துல வெளிச்சமா தெரியும் .நான் நேத்து ராத்திரி பூரா கொல்ல முழுக்கத் தேடிட்டேன். ஒரு இலை கூடக் கிடைக்கலை . ஆனா வேலிக்கு வெளியே அந்த இலையோட நீல வெளிச்சம் தெரியறதைப் பாத்தேன் . ஆனா இந்த உடல் நிலைல என்னால தாண்டிப் போக முடியலை . என்ன செய்ய ? இப்படியே கிடந்து முதலாளி கையாலயோ இல்லி நெஞ்சு வலியிலயோ சாக வேண்டியதுதான் " .
கருப்பு பதிலுக்கு ,
" இந்த மாதிரியெல்லாம் பேசாதே . உனக்கு ஒன்னுன்னா அது எனக்கு வந்த மாதிரிதான். நீ இன்னிக்கு ராத்திரி அந்த இலை இருக்கும் இடத்தை மாத்திரம் காட்டு. நானே கொண்டு வறேன் " என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. சந்தோஷத்தில் இப்போதே எழுந்து திங்கு திங்கென்று குதிக்க வேண்டுமென்று தோன்றியது வெள்ளைக்கு. இருந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு பலவீனமாகக் காட்டிக் கொண்டது.
இரவு வந்தது. திட்டப்படியே இரண்டும் கூட்டுக்குள் அடையாமலேயே வெளியே தங்கிவிட்டன. நரியோடு முதல்நாள் பேசிய இடத்துக்குக் கருப்பை அழைத்துச் சென்றது வெள்ளை. அந்த முள்வேலியைத் தாண்டி ஒரு மரச்சட்டத்தால் ஆன வேலி இருந்தது. முள்வேலியை அப்புறப்படுத்திவிட்டுப் பலகைகளால் தோட்டத்தை அடைப்பதற்கான வேலையைத் துவங்குவதற்காக அது ஏற்படுத்தப் பட்டிருந்தது. கருப்புக் கோழி முள்வேலியைத் தாண்டி , அந்த உயரமான சட்டத்தின் மேல் அமர்ந்து கொண்டு எங்கேயாவது நீலநிற ஒளி வீசும் செடி தென்படுகிறதா என்று நோட்டமிட்டது .
முள்வேலிக்கு அடியில் நின்று கொண்டிருந்த வெள்ளைக் கோழிக்குக் கருப்பு எங்கே உட்கார்ந்து இருக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தது.
" ஒரு வேளை நரி வந்து சத்தம் போடாதபடி கருப்பின் குரல்வளையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயிடுச்சா ? இல்ல ஒருவேளை நரி , நான் சொன்னத நம்பாம வரவே இல்லையா ? " நிசப்தம் வெள்ளையின் பொறுமையை சோதித்தது . முள்வேலியில் இருந்த முள்ளைக் கொஞ்சம் விலக்கி இடைவெளி ஏற்படுத்தி எட்டிப்பார்த்தது .
அப்போதும் ஒன்றுமே தெரியவில்லை.
இப்போது இன்னும் வலிமையை உபயோகப் படுத்தி முட்களை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தது. அது எதிர்பார்த்தபடியேதான் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. கருப்பு மரசட்டத்தின் மேல் நின்றபடி எங்கேணும் பூனைக்காலி இலை தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது . சட்டத்துக்குக் கீழே நரி சத்தமில்லாமல் பாய ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தது .
ஒன்று , இரண்டு , மூன்று ... நரி ஒரே தாவாகத் தாவியது சட்டத்தின் மேல் உட்கார்ந்திருந்த கருப்பை நோக்கி . ஆனால் சட்டத்தின் உயரம் அதிகம் என்பதால் நரியால் அதை எட்டிப் பிடிக்க முடியவில்லை . அடுத்த வரிசையில் இருந்த சட்டத்தில் மோதிக் கீழே விழுந்தது. சத்தம் கேட்ட கருப்பு அடுத்த நொடியே முள்வேலிக்குத் தாவிக் , கொல்லைக்குள் ஓடிக் கூட்டின் கூரைமேல் உட்கார்ந்து கொண்டது.
வெள்ளைக் கோழிக்கு வந்தது கோபம்.
" முட்டாள் நரியே . உன்னுடைய அவசர புத்தியால என்னோட திட்டமும் பாழாப் போச்சு . உனக்குக் கிடைக்க வேண்டிய விருந்தும் போயிடிச்சு " என்றது.
நரி சிரித்தபடியே ,
" உன்னோட திட்டம் வீணாப் போனது என்னமோ உண்மைதான் . ஆனா எனக்குக் கிடைக்க வேண்டிய விருந்து கிடைச்சிடுச்சே " என்றபடி வெள்ளைக் கோழியின் குரல் வளையை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி மறைந்தது.
கர்த்தருடைய பிள்ளைக்கு எதிராய் துன்மார்க்கன் வைக்கும் கண்ணி அவன் கழுத்துக்கே சுருக்காக மாறிவிடும் .
" நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான் "
நீதிமொழிகள் 11 :8

ullathai payanpaduthuvom tamil story

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி . இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.
" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,
" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி " என்றார்.
கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.
" உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார் "

kilavar ketta kelvi tamil story

கிழவர் கேட்ட கேள்வி!

பாண்டிய நாட்டை ராசராசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் உடையவள்; சிறந்த அழகியும் கூட.

தனக்கிருந்த கொஞ்சநஞ்ச இசை ஞானத்தை வைத்துக் கொண்டே மிகுந்த பெருமையடைந்தாள் அரசியார். தன்னை மிஞ்சிய இசை ஞானமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது அவள் எண்ணம்.

அரசியைப் புகழ்ந்து அவளது சிறப்பை பாராட்டியே தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டது காக்கா கூட்டம் ஒன்று.

வருடா வருடம் கோயிலில் விழா நடைபெறும். அப்பொழுதெல்லாம் பாணபத்திரர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்து பாடுவாள்.

ராசராசன் பதவிக்கு வந்த பிறகு, அவனது மனைவியான அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


பாணபத்திரரின் மனைவி மிகுந்த வேதனை அடைந்தாள். "சரி! நமக்கு விதித்தது இவ்ளோதான்!' என சிலகாலம் ஒதுங்கி இருந்தாள்.

அந்த வருடமும் வழக்கம் போல் திருவிழா வந்தது. இறைவனை எப்படியாவது பாடித் துதிப்பது என்று முடிவு செய்தாள். வழக்கம் போல் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று ஜனங்கள் மெல்ல எழுந்து செல்ல ஆரம்பித்தனர். அதைக் கண்டதும் மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கச் சொன்னான்.

கோயிலில் ஒரு மூலையில் அமர்ந்து பாணபத்திரரின் மனைவி இறைவனைத் துதித்து பாடிக் கொண்டிருந்தாள். மக்கள் அவளது இசையில் மயங்கி அங்கே சென்றனர். இதைக் கேள்விபட்ட அரசியார் கொதித்துப் போனார்.

""அன்பே! என்னை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவள் இப்படி நடந்துக் கொண்டாள். இவளுக்கு சரியான தண்டனை கொடுங்கள்!'' என்றாள்.

பாணபத்திரரின் குடும்பத்திற்கு தன் தந்தையார் காலத்தில் கொடுக்கப்பட்ட மரியாதையை மன்னன் அறிவான். எனவே, அக்குடும்பத்திற்கு எதிராக செயல்பட பயந்தான். இருப்பினும் தன் மனைவியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக பாணபத்திரரின் மனைவியை பழிவாங்க நினைத்தான்.

அச்சமயத்தில் ஈழநாட்டு பெண் ஒருத்தி இசைக் கலையில் பெரும்புகழ் பெற்றிருந்தாள். எனவே, அவளை அழைத்து வந்து நாட்டில் இசைக்கச்சேரி வைத்தான். கச்சேரி முடிவில், ""என்னுடன் போட்டியிட யார் தயார்?'' என்றாள்.

அப்படி கேட்க வைத்ததும் மன்னர் தான். உடனே மன்னன் பாணபத்திரரின் மனைவியைப் பார்த்து, ""அம்மையீர்! நீங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும்!'' என்றான்.

""பணம், புகழுக்காக இல்லை. நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன்!'' என்றார்.

உடனே போட்டியின் திட்டங்களை மன்னன் அறிவித்தான்.

""மூன்று நாட்கள் போட்டி நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. ஈழநங்கை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராக்கப்படுவார். பாணபத்திரரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவார்...'' என்றான்.

முதல் நாள் போட்டி துவங்கியது. ஈழ மங்கையின் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் அரசரின் கட்டளைப்படி அவளே சிறந்த இசை வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளும் தீர்ப்பு இப்படியே வழங்கப்பட்டது.

பாணபத்திரரின் மனைவி, மன்னன் தனக்கெதிராக
போட்டுள்ள சதித்திட்டம் என்பதை புரிந்து கொண்டு இறைவனிடம் கூறி அழுதாள்.

" "இறைவா நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!'' என்று முறையிட்டாள்.

மூன்றாவது நாள் போட்டி துவங்கியது. திட்டமிட்டபடியே ஈழத்து மங்கை தான் சிறப்பாக இசைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து முதியவர் ஒருவர் எழுந்து நின்றார்.

""மன்னா! இந்த எளியவன் சில வார்த்தைகள் பேசலாமா?'' என்றார்.

""பேசுங்கள்!'' என்றான் மன்னன்.

""நடுவர்களே... எந்த அடிப்படையில் ஈழமங்கையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்?'' என்றார்.

திடுக்கிட்டனர் நடுவர்கள். முதியவர் ஈழத்து நங்கையின் இசையையும், பாணபத்திரரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் உள்ள சிறப்புகளையும், குறைகளையும் புட்டு புட்டு வைத்தார்.

""பாணபத்திரரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று சொன்னீர்கள்?'' என்றார் முதியவர்.

மன்னரின் முகத்தை பார்த்தனர் நடுவர்கள். ""நீங்கள் எல்லாம் என்ன நடுவர்கள். மனசாட்சி படி தீர்ப்பு வழங்காமல் பொய் தீர்ப்பு அளிக்கிறீர்களே...?இது எந்த விதத்தில் நியாயம்?'' என்றார் முதியவர்.

""நடுவர்களே... இசைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள். இசைப்பட வாழ்ந்த பாண்டிய மன்னர்கள் எங்கே? வசைபட வாழ்ந்து முன்னோர் பெயருக்கு அவப்பெயரை கொண்டு வரும் இந்தப் பாண்டியன் எங்கே?'' என்றார் கிழவர்.

கடும் சினம் கொண்ட மன்னன், ""என்னையே குற்றம் சாட்டும் அளவிற்கு உங்களுக்கு என்ன துணிச்சல்? பிடித்து இந்தக் கிழவரை கட்டுங்கள்,''
என்றான்.

கிழவரைத் தொட்ட காவலர்கள் மின்சாரத்தை தொட்டதுபோல் கீழே விழுந்தனர்.

மறுநிமிடம் கிழவரைக் காணவில்லை. கோயில் கிடுகிடுவென நடுங்கியது. அனைவரும் திடுக்கிட்டனர். கிழவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

அதிர்ச்சியடைந்த ராசராசன் தரையில் விழுந்தான். தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.

""நீதி தவறி செயல்பட்ட நான் இனி அரியணையில் அமருவதற்கு தகுதி இல்லை. இந்தக்கணமே நான் அரச வாழ்வை துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்
கிறேன்!'' என்றான்.

தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டான் மன்னன்.

Saturday, September 24, 2016

VEEDUM NERUPPUM TAMIL STORY

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.
அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்

ANBUM PAADAMUM TAMIL STORY

ஓர் உணவுவிடுதியில் ஒரு வயதான தகப்பனும் இளம் வயது மகனும் உணவருந்த வந்தனர்!
தந்தைக்கு வயதானதால் அவரால் கைநடுக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை! இதனால் உணவை எடுத்து சாப்பிட இயலவில்லை! அதனால் மகன் ஊட்டி விட முயற்சித்தான்! அதையும் அவர் அனுமதிக்கவில்லை!
தானே சாப்பிட முற்பட்டு உணவை மேலேயும் கீழேயும் சிந்திக்கொண்டு அந்த பகுதியையே அசுத்தப்படுத்திக்கொண்டு இருந்தார்! வாயில் ஜொள் வேறு! ஆனால் அந்த மகனோ சற்றும் அருவெறுப்பு இன்றி பொறுமையை இழக்காமல் அவரது வாயை, உடையை எல்லாம் சுத்தம் செய்ததும் இல்லாமல் கழிவறைக்கும் பொறுப்பாக கூட்டி சென்று சுத்தம் செய்து அழைத்து வந்தான்!
இதையெல்லாம் அங்கிருந்த கூட்டம் அருவெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததும் இல்லாமல் சிலர் வெளிப்படையாக முணுமுணுக்கவும் செய்தனர்! சிலரோ அந்த பையனை கேலியுடன் பார்த்து சிரித்தவாறு இருந்தனர்!
இதையெல்லாம் பொருட்படுத்தாத பையன் பில் தொகையை செலுத்திவிட்டு கிளம்பினான்! வாசல் வரை வந்த போது ஒரு கணீரென்ற குரல் தடுத்து நிறுத்தியது!
"தம்பி! நீ சிலவற்றை இங்கே விட்டு செல்கிறாய்!"
என்று
ஒரு நடுத்தர வயதை தாண்டிய ஒரு நபர் தான் அவ்வாறு அழைத்தது!
பையனோ குழப்பத்துடன் சொன்னான்!
"நான் எதுவும் விட்ட மாதிரி தெரியலையே!"
அதற்கு அவர் சொன்னார்!
"இரண்டு விசயங்களை நீ விட்டு செல்கிறாய்!
முதலாவது இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு படிப்பினை!
இரண்டாவது இங்கே இருக்கும் என்னை போன்றவர்களுக்கு நம்பிக்கை! "
அங்கிருந்த அத்தனை பேரும் வாயடைத்து நின்றனர்!

MATRAVAR MANATHAI PURIVOM TAMIL STORY

ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை"
அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்.
பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார் "தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?
சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா" என்றான்.
பெரியவர் சொன்னார் "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன்
வெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்."
சர்வர் "சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க?" என்று கேட்டான்.
பெரியவர் "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது." என்றார்.
சர்வர் "சரி.தருகிறேன். ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா?" என்றான்.
பெரியவர் 'சரி' என சம்மதித்தார்.
சர்வர் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்.
சர்வர் மேலும் கோபம் ஆனான். "யோவ் இந்தாதானேயா 50 ரூபாய் வச்சுயிருக்க. 45 ரூபாய் தான் இருக்கு'னு சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்." என்று மீதியை கொடுத்தான்.
பெரியவர் சொன்னார் "வேண்டாம் தம்பி அது உனக்குத் தான். உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை."
சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்.
சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.
அன்பு நண்பர்களே...
யார் எந்த சூழ்நிலையில் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு..!!

ethai devanukku kodukka vendum tamil story

மனிதன் பல ஆன்மீக செயல்களை சிந்திக்காமலே செய்துகொண்டிருபதால் அவைகள் மாறாத உண்மைகள் என நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவெளிப்பாடு வரும்போது தவறுகள் வெட்டவெளிச்சமாகின்றன. உண்மை என்ற ஒளியின்
முன் நிற்க முடியாமல் இருள் விலகி ஓடுவதுபோல் தவறுகள் ஓடி ஒழிந்துவிடும்.
ஒரு பானை செய்பவரை சந்திக்க குரு சென்றார். பானைகளை செய்து கொண்டிருந்தார் குயவர். பக்கத்தில் ஒரு காட்டுஆட்டை கட்டி போட்டிருந்தார். குரு எதற்கு அந்த ஆட்டை கட்டி போட்டிருக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு குயவன் இது காட்டு ஆடு, இதை கடவுளுக்கு பலி குடுக்க போகிறேன் என்றான். உடனே குரு அவன் செய்த பானைகளில் இருந்து இரண்டை அவன் முன் போட்டு உடைத்தார். இதை பார்த்த குயவனுக்கு கோவம் வந்துவிட்டது.
எதற்கு பித்துபிடித்ததை போல உடைக்கிறீர் என்று கேட்டான்.அதற்கு குரு உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாகியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டான். அதற்கு குரு ஆண்டவன் கஷ்ட பட்டு படைத்த உயிரை அவன் முன்னால் கொல்கிறாயே அது மட்டும் எப்படி ஆண்டவனுக்கு பிடிக்கும் என்று கேட்டார்.
அவன் ஆட்டை கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டான். ஆண்டவன் படைத்ததை அவனுக்கே குடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல எண்ணங்களை கொடுங்கள்.அன்பை கொடுங்கள். இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். ஆண்டவன் மகிழ்ச்சி அடைவான்.

kutty meenin arivu tamil story

குட்டி மீனின் அறிவு 


 ஒரு காலத்தில் பல மீன்கள் ஒரு குட்டையில் வசித்து வந்தன. தினமும் அவை காலையில் எழும்போதே மீனவனின் வலை குறித்த அச்சத்துடனே எழ வேண்டியிருந்தது. மீனவனும் நாள் தவறாமல் அங்கே வந்து வலை வீசினான். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவனுடைய வலையில் மீன்கள் சிக்கிக் கொண்டு தான் இருந்தன.
சில மீன்கள் வியப்பிலும் , சில மீன்கள் தூக்கக் கலக்கத்திலும் , சில மீன்கள் மற்ற மீன்களைப் போல ஒளிந்து கொள்ள இடம் கிடைக்காமலும் , மறைந்திருக்கும் அபாயத்தைப் பற்றி அறிந்திருந்த போதிலும் , சாவுக்கு ஏதுவான அந்த வலையில் சிக்கிக் கொண்டு தான் இருந்தன .
அந்த மீன்களுக்குள் நம்பிக்கை மிகுந்த இளைய மீன் ஒன்று இருந்தது. அது மீனவனின் வலையைப் பற்றிக் கவலைப் படாமல் , தப்பித்து வாழும் கலையைக் கற்றிருந்தது. அனைத்து மூத்த மீன்களும் இந்த சிறிய மீனின் ரகசியம் என்னவாயிருக்கும் என்று வியந்தன. இத்தனை ஞானத்தை சேகரித்து வைத்திருக்கும் தாங்களே தடுமாறும் போது , இந்த சிறிய மீன் மட்டும் தன்னை வலையிலிருந்து விடுவித்துக் கொள்வது எப்படி என்று வியந்தன.
ஆர்வத்தை அடக்க முடியாமல் , வலையிலிருந்து தப்பும் வித்தையைக் கற்றுக் கொள்ள , ஒரு மாலைப் பொழுதில் எல்லா மீன்களும் இந்த சிறிய மீனிடம் வந்தன.
" ஏ குட்டிப் பையா ! நாங்க எல்லாரும் உங்கிட்ட பேசறதுக்காக வந்துருக்கோம் " என்றன.
" ஏங்கிட்டேயா? " குட்டி மீன் கேட்டது.
"என்ன பேசணும்
ஏங்கிட்ட ?".
" இல்ல. நாங்க எதுக்கு வந்தோம்னா , நாளை காலைல மீனவன் வந்து வலையைப் போடுவானே , அதப் பத்தி உனக்கு பயமே இல்லையா? "
குட்டி மீன் புன்னகையுடன் சொன்னது
"இல்லை, ஒருக்காலும் நான் அதில் சிக்கிக் கொள்ள மாட்டேன்".
"அந்த தைரியத்தையும் , நம்பிக்கையின் ரகசியத்தையும் எங்க கிட்டேயும் கொஞ்சம் சொல்லேன்டா குட்டிப் பையா !". முதிய மீன்கள் ஒன்றாய்க் கேட்டன.
"அட அது ரொம்ப சின்ன விஷயந்தான்"
குட்டி மீன் சொன்னது.
" அவன் வலை வீசும் போது நான் அவனது காலடியில் பதுங்கிக் கொள்வேன் . அங்கே அவன் நினைத்தால் கூட வலை வீச முடியாது. எனவேதான் நான் சிக்கிக் கொள்வதே இல்லை "
எல்லா மீன்களும் இந்தக் குட்டி மீனின் அறிவைக் கண்டு வியந்தன.

NAMMAL MUDIYUM TAMIL STORY

நம்மால் முடியும்


ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் நேர்ந்த சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த
பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு...
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.
அதற்கு இவர், "எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? "
" 50 கோடி ரூபாய் "
" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வ ந்தரின் பெயரை சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின்னர் அந்த செல்வந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு
இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு
அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம்
கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த
வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில்
திணித்து விட்டு சென்று விட்டார்.
பின் அந்த
நிறுவனத்தின் தலைவர் வேகமாக தன் அலுவலகத்திலுள்ள தனது அறைக்குள் சென்று
அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது
உதவியாளரை அழைத்து அனைத்து ஊழியர்களையும் நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் வந்து
அமர்ந்திருந்தனர்.
கூட்டத்தில் வந்து அவர் பேச ஆரம்பித்தார்.
"நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால்
இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன்.
இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று
ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள்
அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிகச் சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு
மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியாக ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. அதிகப் பட்சமாக
550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள்
விடிகாலையில் அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக்
கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமெண் ட்
பெஞ்சில் அமர்ந்தார். காலை நேரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது.
சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும் அவருக்கு அருகில் அவரை
கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே
தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும்
வருகிறார் அந்த செல்வந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? "
அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? "
" இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"
" இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு
தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து
கையெழுத்திட்டு கொடுத்து விடுவார் "
மௌனம் ....
ஒரு
நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேச்சு வரவில்லை. நம்மால் முடியும் என்று
நினைத்தால் நிச்சயமாக முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது. அது
தான் நிதர்சனம் என்று நினைத்தார்.
- இதிலிருந்து நாம் தெரிந்து
கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று
முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற
முடியும்.

MANADHAI PURINTHUKOL TAMIL STORY

மனதைப் புரிந்து கொள்


மனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்
ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.
“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்
“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்
“அப்படியா சொல்கிறீர்கள்?“
“ஆமாம்!”
“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”
“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”
“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.
"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -
“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,
இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.
எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - endru அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.
துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.
“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

SIRUVANIN NAMBIKKAI TAMIL STORY

நம்பிக்கை


பணக்கார இளைஞன் ஒருவனின் விலை உயர்ந்த கார் அவன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த ஓர் ஏழைச்சிறுவன் அருகில் சென்று அந்த வண்டியை எட்டிப் பார்த்தான். பின் தொட்டுப் பார்த்தான். அதன் அழகு அவன் மனதைக் கட்டிப் போட்டது.
அதைப் பார்த்த இளைஞன் சிரித்துக்கொண்டே ""இது என் அண்ணன் எனக்குப் பரிசாகத் தந்தது'' என்றான்.
அதைக் கேட்ட சிறுவனின் முகத்தில் வியப்பு ஒட்டிக்கொண்டது. ""உனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என நீ ஆசைப்படுகிறாயா?'' என்றான் அந்த இளைஞன்.
அதற்கு சிறுவனோ சிறிதும் யோசிக்காமல், ""இல்லை அப்படி ஓர் அண்ணனாக நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றான். இதுதான் நம்பிக்கை.
அடுத்தவரிடம் கை ஏந்தாமல், தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் நல்ல நம்பிக்கை.

MANNANIN KAVALAI TAMIL STORY

மன்னனின் கவலை


 ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்... ??
பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா... கணக்கு பிள்ளை பதில் சொன்னார்.. மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ... என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்...??
இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்... ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை... ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்... மன்னா.. உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்..
அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான்..சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்... இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா.. உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்... மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்...
மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல... தன்னுடைய மகளிடம் " நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்... இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா... சிறுமியின் பதில்... உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்...
யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்... சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்.. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ... பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்...
இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது...

MAAVEERAN ALXANDER FUNERAL TAMIL STORY

மாவீரன் அலெக்ஸாண்டர்


மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்
தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்
அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!
தலைசிறந்த மருத்துவர்களால்கூடஎன்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கக !!
நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்கக.!!
எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!
நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!!!!

NEE NINAITHAL MAATRALAM TAMIL STORY

நீ நினைத்தால்


 ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts

kalvi tamil story

கல்வி

 குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?

kinaru vitra kathai tamil story

கிணறு விற்ற கதை

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு” என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

Thursday, September 22, 2016

fathers plan tamil story

ஒரு அழகான குடும்பம் இருந்தது. அப்பா, அம்மா ஒரு மகன்.
அப்பா தொலை தூரமுள்ள ஒரு ஊரில் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வந்து போவார்.
அப்பா அருகிலில்லை என்றாலும் , சில வியாபாரிகள் மூலமாக அவர்களுக்குத் தேவையான பணம் , பொருட்கள், ஆடைகள் போன்ற அனைத்தையும் ஏராளமாக அனுப்பி வைப்பார். மகனும் தனக்குத் தேவையான பொருட்களை அவர்களிடம் சொல்லி அனுப்புவான். அவர்கள் அப்பாவிடம் சொல்லி வாங்கி வருவார்கள்.
மகன் இளைஞனானான். அவனுக்கு ஒரு ஆசை வந்தது. அந்த ஊரின் பல இளைஞர்களிடம் Pony என்ற ஒரு வகையான மட்டக்குதிரைகள் இருந்தன . அதுவே அவர்களின் பெருமை. அவர்களைப் போலவே தனக்கும் ஒரு மட்டக்குதிரை வேண்டும் என்று விரும்பினான் .
அதனை அப்பாவிடமும் சொல்லி அனுப்பினான். அப்பா நிச்சயம் சீக்கிரமாகவே குதிரை வாங்கி அனுப்புவார்
என்று கற்பனை செய்து மகிழ்ந்தான்.
நாட்கள் ஓடின. குதிரை மட்டும் வரவில்லை. சோர்ந்து போனான். அப்போது அப்பாவிடமிருந்து
ஒரு ஆள் வந்தார்.
" ஆஹா! அப்பா எனக்கு குதிரை அனுப்பிட்டாங்க" சந்தோஷமாய் குதித்தபடி அவரிடம் சென்றான்.
வந்தவர் அவனிடம் குதிரை பற்றி எதுவுமே பேசவில்லை.
" தம்பி கிளம்பு. நீ ஒரு மாதம் என்னோடு இருக்கணும் " அவனை அழைத்துச் சென்றார். அவனும் அவர் குதிரை வாங்கத்தான் அழைக்கிறாரோ என்று எண்ணிக் கிளம்பினான்.
அவர் ஒரு மைதானத்திற்கு அவனை அழைத்துச் சென்று அவனை ஓடச் சொன்னார். அவன் ஒன்றும் புரியாமல் ஓடினான். இது ஒரு வாரம் தொடர்ந்தது. பிறகு வாள்சண்டை கற்றுக் கொடுத்தார். அவன் வெறுத்துப் போனாலும் கற்றுக் கொண்டான்.
ஒரு மாதம் முடிந்தது. குதிரை பற்றி எதுவுமே சொல்லாமல் போய் விட்டார். அவனுக்கோ அழுகை அழுகையாக வந்தது.
இன்னும் சில மாதங்கள் ஓடின. திடீரென வாசலில் குதிரை கனைக்கும்
சத்தம்.
"ஐ ! அப்பா குதிரை அனுப்பிட்டாங்க " தலைகால் புரியாமல் ஓடினான். அங்கே ஒரு மனிதர் குதிரையில் இருந்தபடி கேட்டார்,
" தம்பி போகலாமா?" .
சரி எங்காவது அழைத்துச் சென்று குதிரையை ஒப்படைப்பார் போலும் என்று நினைத்தபடி அவர் பின்னால் போனான்.
அவரோ இறங்கவேயில்லை. குதிரையோ வேகம் எடுத்தது. கால் கடுக்க இவனும் ஓடினான். நெடுந்தூரம் சென்று குதிரை காட்டுக்குள் நின்றது.
அவர் சொன்னார்
" தம்பி நீ ஒரு மாதம் என்னோடு இருக்கணும் " . சரி. இவராவது குதிரை கொடுத்தால் போதும் என்று எண்ணித் தலையசைத்தான்.
ஒரு மாதம் முழுக்க அவர் அவனுக்கு எலும்பு முறிவுக்கும் , தசைப்பிடிப்புக்கும் மருத்துவம் பார்ப்பதையும் , காயத்துக்கும் விஷக்கடிக்கும் பயன்படுத்தும் பச்சிலைகளையும் கற்பித்தார். குதிரையைத் தொடக்கூட விடவில்லை.
ஒரு மாதம் முடிந்தது. "சரி தம்பி நீ போகலாம் " என்று சொல்லிவிட்டுக் குதிரையுடன் போய்விட்டார் இதுவும் போச்சா ? அழுதுகொண்டே அப்பாவைக் குறை சொல்லிக் கொண்டே வீடு சென்றான்.
"இவரெல்லாம் ஒரு அப்பாவா? கேட்டதைக் கொடுக்காமல் என்னை நாய் மாதிரி அலையவிட்டு விட்டாரே !"
மற்றவர்கள் மட்டக் குதிரையில் போவதைப் பார்த்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். அப்பா மேல் வெறுப்பு பொங்கும். குதிரை ஆசையை மறந்தே போனான்.
சில மாதங்கள் கழித்து ஒரு நாள் வாசலில் குதிரை கனைக்கும் சத்தம். ஆர்வமில்லாமல் வெளியே சென்று பார்த்தான். அவன் கண்ட காட்சி அதிர வைத்தது. வெளியே நின்றிருந்தது அப்பா. அவருடன் அழகான ஒரு வெள்ளைக் குதிரை. அதுவும் அவன் கேட்ட மட்டக்குதிரை அல்ல. உயர்ந்த அரேபியக்குதிரை.
அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுதான். அவரிடம் கேட்டான்,
" இதை ஏம்ப்பா முதல்லேயே கொடுக்காம தேவையில்லாத காரியங்களால என்னை வெறுப்பேத்தினிங்க?"
அப்பா அவன் நெற்றியில் முத்தமிட்டு சொன்னார்,
" நீ கேட்டது மட்டக்குதிரை. நான் என் பிள்ளைக்குக் கொடுக்க விரும்பியது உயர்ஜாதிக்குதிரை . ஆனால் அதை வைத்து நிர்வகிக்க உனக்குப் பயிற்சி வேண்டும். குதிரை ஓடிப்போனால் ஓடிப் பிடிக்கவும், யாராவது குதிரையைக் கவர்ந்து கொள்ள உனக்கு ஆபத்து ஏற்படுத்தினால் தற்காத்துக் கொள்ளவும் முதல் நபரைக் கொண்டு பயிற்றுவித்தேன். அடுத்த பயிற்சியில், ஆளில்லாத இடத்தில் உனக்கோ , குதிரைக்கோ அடிபட்டு விட்டால் நீயே சமாளித்துக் கொள்ளும் திறமையைப் பெறவைத்தேன் . இப்போது நீ முற்றிலும் தகுதியுள்ளவன். நான் செய்ததில் எதாச்சும் தவறு உண்டா? " .
கண்ணீரோடு மகன் சொன்னான் ,
" இல்லப்பா. உங்க அன்பும், ஞானமும் ஈடில்லாதது. என்னுடைய சிந்தனைக்கு அது எட்டாதது"
செல்லமே! அழாதே. நீ கேட்டதை விட சிறப்பானதை அப்பா தருவார். அதற்கான பயிற்சிதான் இது. அவர் அனுப்பும் ஒவ்வொருவருமே உனக்கான பயிற்சியாளர்கள்தான். அவர் செய்யும் எதுவுமே உனக்கு சிறப்பானதைக் கொடுக்கத்தான்.
" நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார். தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? "
எபிரேயர் 12 :7

thalai ganam tami story

"தலைக்கனம் தலைக்குனிவைத் தரும்..."*
'தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்' என்று தலைக்கனம் பிடித்த பண்டிதர் ஒருவர் இருந்தார்.
அடர்த்தியான புருவம், பெரிய மீசை, அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம்...
வீதியில் அவரைக் கண்டு விட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...
ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார்.
இதில் சிலர் அழுது விடுவது கூட உண்டு...
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்...
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்தார்...
நாவிதரின் உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து, நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது...
இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது...
இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆக வேண்டுமென்று முடிவெடுத்து அவரை நெருங்கினார்...
"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்...
அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே,
"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை...
வேலையை ஆரம்பித்தார்...
'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்...
பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்...
"ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது...
உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?"
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி...
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்...
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா...?"
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார்...
"இதென்னப்பா, கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு... கோல் எங்கே போச்சு?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிமிருந்து.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..." என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.
கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
"எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற...
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..."
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்...
இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்.
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்... பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார்,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே, "ஆமாம்..." என்றார்...
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து,
"மீசை வேணுமுன்னிங்களே சாமி! இந்தாங்க..."
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய்...
அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்...
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்.
அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா...?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார்,
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்...
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்...
முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்...
அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது...
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு, விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்...
*"நம்முடைய அறிவும்...*
*புத்தியும்...*
*திறமையும்...*
*அதிகாரமும்...*
*அந்தஸ்தும்...*
*பொருளும்...*
*மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல..."*
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்...
*தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்...*
*இந்த பிரபஞ்சம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது...*
*அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே...*
*நாம் பெற வேண்டியது நல்ல அனுபவங்களை தவிர வேறோன்றுமில்லை...*
ஆகவே,
*இறைவனால் படைக்க பட்ட அனைத்து உயிர்களையும் நேசிப்போம்...*
*மதிப்போம்...*
*வாழ்வளிப்போம்...*
நாம் அனைவரும் நலமாக வாழ...🙏🏻

desire makes difference tamilstory

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.
அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.
அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாது போது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன்.
மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.
அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அவ் நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார்.
உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்!
ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.
அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான்.
உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?.
*ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றாள், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.*

rich man and swamy tamilstory

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார்
ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர்
பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட
அழைத்தார்.
“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்.
நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால்
கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை
அறிமுகப்படுத்தினார்.
சற்று யோசித்த பட்டிணதார் “ரொம்ப நல்லது.
அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய
வேண்டுமே!” என்று கேட்டார்.
“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல்
சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார்
பணக்காரர்.
தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டிணத்தார்,
அதை பணக்காரரிடம் நீட்டினார்.
“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய
வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.
“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும்
இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக்
கொடுத்தால் போதும்,” என்றார் பட்டிணத்தார்
“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர
முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.
அவரைப் பார்த்து சிரித்த பட்டிணத்தார் “இந்த உலகை
விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக
முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக
தற்பெருமை பேசுகிறீர்களே….
ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு
கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத்
தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து
உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,”
என்று அறிவுரைூறினார்.
பணக்காரரும் அவரது உபதேசத்தை ஏற்று தானம் செய்ய
ஆரம்பித்து விட்டார்.

The Crocodile tamil story

முதலை ஒன்று காட்டில் இருந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்தது. தினமும் அதன் பசிக்குத் தேவையான ஏதாவது ஒரு உணவு கிடைத்து வந்தது. இருந்தாலும் அதன் மனதில் ஒரு ஆசை இருந்தது. அந்த நதியை ஒட்டி ஒரு புல்வெளி இருந்தது . அதில் முயல்கள் கூட்டமாய் வந்து விளையாடும். அதில் ஒரு முயலையாவது ருசித்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. பெரிய பெரிய யானைகளும், சிங்கங்களும்கூட தண்ணீர் குடிக்க வந்து முதலைக்கு பலியானதுண்டு. ஆனால் இந்த முயல்கள் மட்டும் ஒரு முறை கூட நீர் பருக வந்ததே இல்லை. எப்படியாவது ஒரு முயலையாவது விழுங்கிவிடப் பல நாட்களாய்க் காத்திருந்தது. ஒரு நாள் ஒரு கொழுத்த முயல் குட்டி வேடிக்கை பார்ப்பதற்காக நதியின் கரையருகே வந்தது. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த வயதான முயல், " அடேய், அங்கே கொடிய முதலை ஒன்று இருக்கிறது. நீ போனால் உன்னை விழுங்கி விடும்" என்று எச்சரிக்கை செய்து அதைக் கையோடு இழுத்துச் சென்றது. ஆனால் இந்த எச்சரிக்கை குட்டி முயலின் ஆவலை மேலும் தூண்டிவிட்டது. மறுநாள் மற்ற முயல்கள் கவனிக்காத சமயத்தில் குண்டு முயல் மீண்டும் நதிக்கரைக்கு வந்தது. அங்கே அது கண்ட காட்சி அதை ஆச்சரியப்பட வைத்தது. முதலை ஆவென்று வாயைப் பிளந்தபடி அமைதியாகப் படுத்திருந்தது. ஒரு சிறிய பறவை அதன் வாய்க்குள் புகுந்து அதன் பல்லிடுக்கில் இருந்து எதையோ எடுத்து எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தது. முயலுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "இத்தனை நல்லவரும் , அமைதியானவருமாக இருக்கும் ஒருவரையா இந்தக் கிழட்டு முயல் கொலைகாரன் என்றது ? இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது " என்று எண்ணிக் கொண்டது. சற்று தைரியத்துடன் முதலையின் அருகே சென்றது. முயலின் வாசனை பட்டு முதலை கண்விழித்துப் பார்த்தது.
"அடடா! வா தம்பி. இந்த ஏழையின் வீட்டுக்கு உன்னை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தாராளமாகக் கேட்கலாம் " என்றது. முயலுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.
"ஆகா! எத்தனை உயர்வான மனது! "
"ஒன்றுமில்லை அண்ணா. இந்த அழகான இடத்தைப் பார்க்க எனக்கு நெடுநாள் ஆசை. ஆனால் என் கூட்டம் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி மிரட்டி வைத்து விட்டது. நீங்கள் பெரிய கொலைகாரர் என்று சொன்னது " என்றது.
முதலை சிரிசிரி என்று சிரித்தது. "சரி! அவங்க சொல்றது இருக்கட்டும். நீ என்னைப் பத்தி என்ன நினைக்கிறே?" என்றது.
" எனக்கு உங்களப் பாத்தா நல்லவராதான் தோணுது. இருந்தாலும் நீங்க பல மிருகங்களை தண்ணிக் குள்ள இழுத்துட்டுப் போனதா கேள்விப்பட்டிருக்கேனே" என்றது. முதலை மீண்டும் சிரித்தது.
" நீ சொன்னது உண்மைதான். நான் மிருகங்களை இழுத்துச் செல்வதும் உண்மைதான். ஆனால் அந்த மிருகங்கள் அக்கரைக்குப் போக என்னிடம் உதவி கேட்டதால்தான் அவற்றை சிரமம் பார்க்காமல் அங்கு கொண்டு போய் விட்டுட்டு வருவேன். அதை ஒரு சேவையாதான் செய்துகிட்டு வரேன். ஏன்னா இந்த ஆத்துக்குள்ள பெரிய சுழல் இருக்குது. எவ்வளவு பெரிய மிருகமா இருந்தாலும் முழுகடிச்சிடும். ஆனா இந்த இடத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு அது பெரிய விஷயமில்லை. அதனால தான் மிருகங்களை பத்திரமா கொண்டு சேக்குற வேலையை நானே செய்றேன். நான் கெட்டவனா இருந்திருந்தா இந்த சின்னப் பறவை என் வாயில் நுழைந்து இரை தேடுமா? நான் வாயில் விரலை விட்டால் கூடக் கடிக்கத் தெரியாத அப்பாவி தம்பி. அக்கரையில் இருக்கும் ருசியான கிழங்குகளை சாப்பிடத்தான் எல்லா மிருகமும் என்னோட உதவியைக் கேக்குது " என்றது.
கிழங்கு என்ற வார்த்தையை கேட்டதும் முயலுக்கு நாவில் நீர் சுரந்தது.
" இத்தனை நாளும் தெரியாம போச்சே! அண்ணே, என்னையும் அங்கே கொண்டு விடமுடியுமா?" என்றது.
"கொண்டு போய் விடுறது மட்டுமில்ல. மறுபடியும் பத்திரமா அழைச்சிட்டு வந்தும் விட்டுறேன். இந்தப் பறவை மாதிரியே நீயும் வந்து வாய்க்குள்ள பத்திரமா உக்கார்ந்துக்க" என்றது. முயலும் தயங்காமல் வாயில் நுழைந்தது.
" நிறைய கிழங்கு இருக்கும் இடமா பாத்து இறக்கி விடுங்கண்ணே. ரொம்ப பசிக்குது" என்றது.
முதலை சொன்னது,
" அட முட்டாளே! முதல்ல என்னோட பசி அடங்கட்டும்" என்று முயல் துடிக்கத் துடிக்க அதைக் கடித்து விழுங்கியது. முதலையும் , பறவையும் நெருக்கமாக இருந்ததைப் பார்த்து ஏமாந்த முயல் முதலைக்கே இரையாகிப் போனது.
சில வேளைகளில் பாவப்பழக்கங்களில் வாழும் சிலர் கேட்கிற கேள்வி நம்மைக்கூடத் தடுமாற வைக்கும்
"நான் நல்லாதானே இருக்கேன்? செத்தா போயிட்டேன்?" என்பார்கள். முதலை தனது பல்லை சுத்தம் செய்ய அந்தப் பறவையை விட்டு வைப்பது போலவே பிசாசும் தனக்கு சாட்சியாக சிலரை நன்றாக வைத்திருப்பான். இதையெல்லாம் நம்பி மோசம் போய் விடாதே. அவன் வார்த்தைகளை நம்பி விழுங்கப்பட்டு விடாதே.
" தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் ". 1 பேதுரு 5 :8

small frog tamil story

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்
கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது
சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது
அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”
உச்சியை தொட செவிடாய் இரு...

little horse tamil story

விவசாயி ஒருவன் தன் வீட்டின் கொல்லைப் புறத்தில் தண்ணீருக்காக கிணறு ஒன்றைத் தோண்டினான். பாதி தோண்டும்போதே இது வீண் வேலை என்பதும், தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் புரிந்து கொண்டு வேலையை பாதியிலேயே நிறுத்தி விட்டான்.
தோண்டிய குழியை மூடவும் நிறைய கூலி கொடுக்க வேண்டும் என்பதால் காசு வரும்போது மூடிக்கொள்ளலாம் என்று கருதி பள்ளத்தைச் சுற்றிலும் பாதுகாப்பாக ஒரு சிறிய வேலியை மட்டும் அமைத்தான்.
ஒரு நாள் அவன் வீட்டில் இருந்த குட்டிக்குதிரை கொல்லையில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக அந்தக் குழிக்குள் விழுந்து விட்டது. விவசாயி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். குட்டியை அத்தனை ஆழத்திலிருந்து தூக்கி எடுக்க வழி தெரியவில்லை. கூலியாட்களைக்
கொண்டு அதை வெளியே எடுக்கலாம் என்றால் குதிரைக் குட்டியின் விலையை விட, அதை வெளியில் எடுக்கும் செலவு அதிகம்.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே செய்தியைக் கேள்விப்பட்டு ஊரே திரண்டு வந்து விட்டது. கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. "குட்டியை அப்படியே விட்டு விட்டால் அது செத்துப் போய் பல நாட்களுக்கு நாற்றம் எடுக்கும். வந்திருக்கும் ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு ஒரு சட்டி மண்ணை அள்ளிப் போட்டால் குதிரைக்குட்டியும் சமாதியாகும் , கிணறும் மூடப்பட்டுவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்".
உடனே தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான். அனைவரும் ஒத்துக் கொண்டனர். நல்லா இருக்குற ஜீவன் மேல மண்ணை அள்ளிப் போடுறதுன்னாதான் எல்லாருக்கும் பிடிக்குமே. ரொம்ப உற்சாகமாக ஒவ்வொருவராய் மண்ணள்ளிப் போட்டார்கள்.
ஆனால் நடந்ததோ வேறொன்று. இவர்கள் குதிரைக் குட்டியின் மேல் மண்ணை அள்ளிப் போடப்போட அது தன் உடலை உதறிக்கொண்டு மண்ணையெல்லாம் கீழே தள்ளி அதன் மேல் ஏறி நின்றது. கடைசியில் எல்லாரும் கொட்டிய மண்ணில் கிணறே நிரம்பிவிட்டது.
கிணறு நிரம்பும் போது குதிரைக் குட்டி அழகாய் வெளியே வந்து விட்டது. சமாதிகட்டுவதற்காகக்
கொட்டிய மண்ணையே படிக்கற்களாக்கிக் கொண்டது.

செல்லமே! கர்த்தரை விசுவாசிக்கிற மக்களும் இப்படித்தான். தன் மேல் இறைக்கப் படுகிற மண்ணைக்கூட மேடையாக்கி அதுக்கு மேல ஏறி நின்னு கர்த்தரைத் துதிச்சு பிரசங்கம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
" தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம். இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம் "
1 கொரிந்தியர் 4 :13

mouse story tamil

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது . அவர்கள் வெளியே எடுத்தது ............
ஒரு...........
எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து
பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
“ஆ " எனக்கத்தினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்.
வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

pugal bothai tamil story

புகழ் போதை
மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள். கேசவன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் அவனை அனைவரும், “கலியுக கர்ணன்” என்று புகழ்வர். மாணிக்கம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான். அவனை அனைவரும், “சுயநலக்காரன்” என்று ஏசினர். மாணிக்கம், கேசவன் அடுத்தடுத்த காட்டை விலைக்கு வாங்கினர். கேசவன் தன் காட்டை அழித்து, கனிமரங்களை உருவாக்கினான். கிணறு வெட்டி அவற்றிற்கு நீர் பாய்ச்சினான். சில ஆண்டுகளுக்குப்பின் அந்த மரங்கள் கனிகளை வாரி வழங்கின. மாணிக்கம் தன் நண்பனைப் போல் காட்டை அழிக்காமல், மரங்களை நடாமல், அப்படியே விட்டு விட்டான். அதனால், அவனுடைய காட்டில் முள் புதர்கள் சேர்ந்து விட்டன. கேசவன் தன்னுடைய பழத்தோட்டத்திற்கு போக வேண்டுமென்றால் மாணிக்கத்தின் காட்டு வழியாகத்தான் போக வேண்டும். ஒருநாள், கேசவன் மாணிக்கத்தின் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது, அவன் காலில் நாலைந்து முட்கள், “ நறுக் நறுக்” என்று குத்தி ரத்தம் கொட்டியது. அதன் காரணமாக கோபம் கொண்ட கேசவன் மாணிக்கத்தைப் பார்த்து திட்டினான். அதனால், இருவருக்கும் சண்டை உண்டாகி நட்பு முறிந்தது. அதனால் அவர்கள் அன்று முதல் பேசிக் கொள்வதேயில்லை. நாட்கள் சென்றன- ஒருநாள் கேசவன் தன் தோட்டத்தில் விளைந்த பழங்களை எல்லாம் பறித்து, ஊரிலுள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கினான். மகிழ்ச்சி கொண்ட ஊர் மக்கள் அனைவரும் அவனை வாழ்த்தினர். இப்படியே ஊரிலுள்ளவர்கள் வாழ்த்த வாழ்த்த கேசவனுக்கு புகழ்வெறி பிடிக்கத் தொடங்கியது. கேசவன் ஊரையே அழைத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்தான். மக்களுக்கு தேவையானதை வாரி, வாரி இறைத்தான். மக்களும் அவன் வீட்டு வாசலில் குவிந்தனர். கேசவனும் புகழ் வெறியில், மக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்து வந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த மாணிக்கம் கூட்டத்தினரை நோக்கி, “ஊர்மக்களே! நீங்கள் யாருடைய பணத்தில் ஆட்டம் போடுகிறீர்கள் தெரியுமா?” என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். “இது என்னுடைய பணம் ”. கேசவன் தந்தை தன்னுடைய நிலங்களை எல்லாம், என் தந்தையிடம் விற்று பணம் வாங்கியிருந்தார். ஆனால், நட்பு காரணத்தால், கேசவன் தந்தையின் நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டார். என் தந்தை இறந்து போனபிறகு இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியவில்லை. இன்று நான் என் தந்தையின் பழைய பெட்டியை குடைந்தபோது அதில் கேசவன் தந்தை என் தந்தைக்கு எழுதிக் கொடுத்த கிரயப் பத்திரத்தைக் கண்டு எடுத்தேன். “அதனால்... இன்றுமுதல் கேசவனுடைய சொத்துக் கெல்லாம் நானே சட்டப் பூர்வமான சொந்தக்காரன். இதுவரை அவன் ஊருக் கெல்லாம் வாரி வழங்கினான். இனிமேல் நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் எல்லாரும் வீட்டிற்கு போங்கள் ,” என்று சொன்னான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கேசவனுக்கு தலைசுற்றியது. மயக்கம் வருவது போலிருந்தது. குழம்பிப் போய் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான். மாணிக்கம் பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். மக்களை நோக்கி, “போகாதீர்கள் போகாதீர்கள் !” என்று கத்தினான் கேசவன். அதற்கு அவர்கள்... “போய்யா! போ. இனியும் உன் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை. இனி நீயும் எங்களைப் போல் ஒரு ஏழைதான்,” என்று கூறிவிட்டு, “ வாருங்கள் போகலாம்!” என்று ஒருவன் கையசைக்க, அனைவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர். அனைவரும் சென்றவுடன் தன்னிந்தனியாக கவலையோடு ஒன்றும் புரியாமல் நின்றிருந்த கேசவன் தோளில் தட்டிய மாணிக்கம், “வா உள்ளே போகலாம்,” என்றான். கேசவன் எதிலும் விருப்பமின்றி, வெறுப்புடன் அவனுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும் மாணிக்கம் வயிறு வலிக்கச் சிரித்தான். ஒன்றும் புரியாதவனாய் கேசவன் விழிக்க, மாணிக்கம் கேசவனை நோக்கி, “அதிர்ந்து விட்டாயா? உன் தந்தை என் தந்தையிடம் நிலங்களை விற்கவும் இல்லை. என் தந்தை வாங்கவும் இல்லை. ” பிறகு நான் ஏன் பொய் சொன்னேன் என்று பார்க்கிறாயா? நீ இரக்கம் காரணமாக மக்களுக்கு கண்மூடித்தனமாக வாரி இரைத்தாய். உன்னைப் புகழின் உச்சியில் வைத்து மதுவை விட அதிகமான போதையை உண்டாக்கி உன்னால் லாபம் அடைந்து வந்தனர் மக்கள். “அவர்களை அடையாளம் காட்டவே, இனி உன் சொத்துக்கெல்லாம் நானே சொந்தக்காரன் என்று சொன்னேன். இதைக் கேட்டு நீ ஒன்றுமில்லாதவன் என்று தெரிந்த ஊர் மக்கள் நீர் இல்லாத குளத்தை விட்டு காக்கைகள் பறந்து செல்வதைப் போல், உன்னை விட்டு ஓடிவிட்டனர். இந்த நன்றி கெட்டவர்களிடம் இனி, நீ எப்படி நடக்க வேண்டாம்? ” என்றான் மாணிக்கம். “நண்பா! என்னை வஞ்சித்து வாழ்ந்தவர்களை உன்னால் அடையாளம் கண்டு கொண்டேன். இனி ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போடுவேன். புகழ் போதையில் மூழ்க இருந்த என்னை கைகொடுத்து தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய், உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை, ” என்று நா தழுதழுக்க கூறினான் கேசவன்.
நீதி: இரக்கம் காட்டலாம். ஆனால், ஏமாளியாகி விடக்கூடாது.

vaathu kudumbam tamil story

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு , அடைகாத்து குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அடர்ந்த , பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துருதுருப்பாகவும் இருந்தன. ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அடர்த்தியும், அழகும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது.
உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதன் தாய்கூட அதை வெறுத்து ஒதுக்கியது. அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.
அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது.
"நான் மட்டும் ஏன் இப்படி ஒரு அவலட்சணமா பிறந்தேன்?
முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே" என்று அழுது கதறியது.
நாட்கள் ஓடின. மற்ற வாத்துக் குஞ்சுகள் மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும், நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு அசிங்கமாகக் குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று. தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.
சில வேளைகளில் அன்பாய் சகோதரர்களையும் , அம்மாவையும் நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும்.
இன்னும் கொஞ்ச நாள் சென்றது. அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானது. தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன. அசிங்கமான வாத்துக்குஞ்சு இப்போது கண் கொள்ளா அழகுடன் காட்சியளித்தது.
அம்மா வாத்துக்கும் , மற்ற சகோதர வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதன் அருகில் நெருங்கக்கூட வெட்கப்பட்டன. நடந்தது என்னவென்றால், ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டை இட்டுச் சென்றுவிட்டது. இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து , குஞ்சு பொறித்து விட்டது. அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.
ஒரு நாள் வந்தது. அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றமளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது. படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள், வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள அன்னப்பறவை கம்பீரமாய் உயரஉயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.

உலகம் உன்னை வேதனைப் படுத்தலாம். ஆண்டவரின் நிமித்தமாக அவமானப் படுத்தலாம். ஆனாலும் நீயும், நானும் நம் கர்த்தரின் வருகையில் வெண்வஸ்திரம் தரித்தவர்களாய் பறந்து செல்லும்போது அவர்களெல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறத்தான் போகிறார்கள்.
" ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் "
ரோமர் 8 :18

yaar poor tamil story

யார் ஏழை...!!
ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!
சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!
இதில் யார்_பணக்காரர்...?!!

3 'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீ்ட்டு 6 மாத குழந்தையின் அம்மா,
ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார்,
அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தணியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்..!
ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,
டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...!!..
பணம் உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......!!!
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....!!!!
இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....!!!!
தொடக்கம் நாமாக இருப்போமே...!!!

kutty elephant tamil story

ஒரு குட்டி யானை பாகன் வெட்டி வைத்த குழியில் அகப்பட்டுக் கொண்டது. அவன் அதைக் கட்டி இழுத்துச் சென்று தன் வீட்டில் ஒரு தூணில் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்தான். யானைக்குட்டி தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவோ போராடிப் பார்த்தது. ஆனால் சங்கிலி அதன் காலை அறுத்துப் புண்ணாக்கிவிட்டது. பாகன் சிரித்தபடி சொன்னான் , " இனிமேல் நீ என் அடிமை. உன்னால் தப்பவே முடியாது ". குட்டி யானைக்கு அவன் சொன்னது உண்மையென்றே பட்டது.
தப்பிச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு அடிமை வாழ்வு வாழப் பழகியது. தினமும் பாகன் அந்த சங்கிலியை சுட்டிக்காட்டி, " நீ அடிமை. உன்னால் தப்பவே முடியாது " என்பதையே சொல்லி வந்தான். குட்டியும் அதை முழுமையாக நம்பியது. நாட்கள் ஓடின. குட்டி வளர்ந்து பெரிய யானையானது. அப்போதும் பாகன் அதே வார்த்தைகளை தினமும் சொல்ல அது இன்னும் அடிமையாகவே வாழ்ந்துவந்தது. தப்பிச் செல்ல முயலவே இல்லை.
ஒரு நாள் பாகன் வீட்டில் இல்லாத நேரம் ,கயிற்றை அறுத்துக் கொண்டு மாடு ஒன்று வேகமாக ஓடி வந்து யானை இருந்த இடத்திற்குள் புகுந்தது. நீண்ட தூரம் ஓடிவந்த களைப்பும், பசியும் அந்த மாட்டை வாட்டியது. ஏதாவது கிடைக்குமா என்று தேடி யானை கட்டிக் கிடந்த இடத்திற்கு வந்து விட்டது. யானைக்கு முன்பாகக் கிடந்த புற்களையும் , பச்சை ஓலைகளையும் ஏக்கமாய்ப் பார்த்தது. யானைக்கு அருகே செல்லவும் பயம். மாட்டின் முகத்தில் தெரிந்த பசியை யானை புரிந்துகொண்டது. "சும்மா பயப்படாம கிட்டே வா" என்று கூறி கொஞ்சம் ஓலைகளை அதற்கு முன்பாகப் போட்டது. மாடு வயிறார சாப்பிட்டது. நன்றியுடன் யானையைப் பார்த்துக் கேட்டது, " இவ்ளோ நல்லவனா இருக்கியே, நீ இங்கே என்ன பண்ற? காடுதானே உன் வீடு. அதை விட்டுட்டு இங்கே எதுக்காக இருக்கே? " என்றது.
இதைக் கேட்டதும் யானைக்கு அழுகை வந்துவிட்டது. அது இதுவரை அன்பான சொற்களைக் கேட்டதே இல்லை. காலில் கிடந்த சங்கிலியைக் காட்டிச் சொன்னது, " இந்த சங்கிலி என்னை எங்கேயுமே போக விடாது. இன்னிக்கு காலைல கூட பாகன், நீ ஒரு அடிமை , உன்னால் தப்பவே முடியாதுன்னு சொல்லிட்டுதான் வெளியே போனான். மீறி நான் இழுத்தால் ரத்தந்தான் வரும் " என்றது. இதைக் கேட்டதும் மாடு சிரித்து விட்டது.
"அட ஏமாளியே! இதுதானா உன் பிரச்சினை? என்னைப் பார். உன் உடம்புல பத்தில் ஒரு பங்கு கூட இருக்க மாட்டேன். ஆனா நானே இவ்வளவு மொத்தக் கயிற்றை அறுத்துக்கிட்டு ஓடி வந்துருக்கேன். நீ சின்ன வயசுல கட்டின தம்மாத்தூண்டு சங்கிலிக்கு பயப்படுறியே! நல்லாப் புடிச்சி ஒரு இழு இழு " என்றது. அதைக் கேட்டதும் யானைக்கு கொஞ்சம் பயம் தெளிந்தது. சரி, இழுத்துதான் பாப்போமே என்று இழுத்த அடுத்த நொடியே சங்கிலி நொறுங்கி விழுந்தது. அடடா விடுதலை! உற்சாகமாகக் காடு நோக்கி ஓடியது. அந்த நேரத்தில் வெளியே போயிருந்த பாகன் ஓடி வந்தான், " உன்னால தப்பிக்க முடியாது. நீ ஒரு அடிமை " என்று கத்தினான். அந்த வார்த்தை கேட்டதும் யானை உறைந்து போய் அப்படியே நின்றது. மாடு சொன்னது, " அவன் பொய்யன். அவன் வார்த்தையைக் கேட்காதே. நீ இனி யாருக்கும் அடிமையில்லை. ஓடு " என்றது. யானை ஓடியது. குறுக்கே வந்து தடுத்த பாகனைத் தூக்கி எறிந்து விட்டு ஓடிக் காட்டுக்குள் மறைந்து போனது.
செல்லமே! ஏசப்பாவின் ரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் பாவங்களுக்கும் , சாபங்களுக்கும் எப்போதோ நீங்கலாக்கப் பட்டு விட்டோம். ஆனாலும் பிசாசு நம் பழைய பாவங்களைச் சொல்லி நம்மை அடிமையாகவே வைத்திருக்கப் பார்ப்பான். புரிந்து கொள்.
ஏசப்பாவுக்கு நம் பாவங்கள் தெரியும். இருந்தாலும் அவர் நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார். பிசாசுக்கு நம் பெயர் தெரியும். இருந்தாலும் அவன் நம்முடைய பாவங்களைச் சொல்லி நம்மை அழைக்கிறான்.
" தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர், என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர் ". ஏசாயா 38 :17

nayin theerrnanam tamil story

நாய் போர்வை வாங்கிய கதை தெரியுமா உனக்கு ? தெருவில் வசிக்கும் நாய்கள் குளிர் காலத்தில் நடுங்கியபடி உடலை சுருட்டிக் கொண்டு நடுங்கியபடி படுத்திருப்பதைப் பார்த்திருப்பாய். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய் நினைக்குமாம் ,
" என்ன ஒரு குளிர்! காலைல பொழுது விடிஞ்ச உடனே முதல் வேலையா கடைக்குப் போய் ஒரு நல்ல போர்வை வாங்கணும். இந்த குளிர் பிரச்சினை இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு ராத்திரிலேர்ந்து ஐயா போர்வையை போத்திக்கிட்டு ராஜா மாதிரி தூங்கப் போறார் பாரு ". விடியும் வரை அடிக்கடி விழித்தெழுந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கும். காலை கண் விழித்து எழுந்ததும் சோம்பல் முறித்து சுற்றிலும் பார்க்கும்.
" வயித்துக்கு எதாவது போட்டுட்டு , நேரா போர்வை விக்கிற கடையிலதான் போய் நிக்கிறோம். நல்ல மொத்தமான போர்வையா பாத்து வாங்கி, இனிமே ராத்திரியில குளிரே இல்லாம கதகதப்பா தூங்குறோம்". சொல்லிக் கொண்டே குப்பைத் தொட்டிக்கு ஓடும். கிடைத்ததை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு வேற்றுத் தெருவில் உள்ள நாய், இதன் எல்லைக்குள் தென்படும்.
" எவன்டா அவன்? என் ஏரியாவுல என்று சொல்லி உறுமியபடியே அந்த நாயைத் துரத்தி, கடித்து, கடி பட்டு ஒரு வழியாக அதைத் துரத்தி விட்டு,
"யாரு கிட்ட? " என்றபடியே மீண்டும் குப்பைக்கு திரும்பும்.
" ஆஹா ! நல்ல சாப்பாடு. நல்ல ருசி "
சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மீண்டும் வேறொரு புதிய நாய் போட்டிக்கு வரும். மீண்டும் சண்டை, கடிகள். காலை, மதியம், மாலை எல்லாம் குப்பைத் தொட்டியிலும் , சண்டைகளிலும் கழிய , மீண்டும் இரவு வரும். குளிர் வாட்டும். மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொள்ளும்

" பொழுது விடிஞ்ச கையோட நல்ல போர்வை வாங்கணும். நாளைலேர்ந்து கதகதப்பா தூங்கணும் . என்ன முக்கியமான வேலையா இருந்தாலும் எல்லாமே போர்வை வாங்கினதுக்கு
அப்புறம்தான் " . மீண்டும் விடியும் குப்பைத் தொட்டி , சண்டை, கடி. மீண்டும் இரவு. அதே தீர்மானம்,
" நாளைக்கு காலைல பாரு. கண்டிப்பா. ......"
வசனம் வாசிக்கையில் , பிரசங்கம் கேட்கையில், இன்னும் சில ஆவிக்குரிய இடுகைகளைக் காணுகையில் தொடப்பட்டு சொல்லுவோமே ,
" ஆண்டவரே! இது எனக்குத்தான். இனி இப்படி செய்ய மாட்டேன், பேச மாட்டேன் , நடந்துக்க மாட்டேன்..... " எத்தனை தீர்மானங்கள் ?
பல சமயங்களில் இவையெல்லாம் அன்றாட வாழ்வுக்குள் நுழைந்ததும் போர்வை வாங்கிய நாயின் கதையாய் முடிவது ஏன்?
இனிமேல் தீர்மானங்களை வைராக்கியமாக நிறைவேற்றுவோமா ?

Alexander death tamilstory

மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்
தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்
அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!
தலைசிறந்த மருத்துவர்களால்கூடஎன்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கக !!
நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்கக.!!
எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!
நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!!!!

mirror tamil story

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர்.சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts

kalviyin menmai tamilstory

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம். ‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?

Saturday, September 17, 2016

mun kobam tamil story

முன் கோபம்!

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.