Saturday, October 8, 2016

vaigundam enga irukku tamilstory

வைகுண்டம் எங்கே இருக்கிறது?

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவனுக்கு திடீர் சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. நாள்தோறும் தான் வணங்கும் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் வைகுண்டம் எங்கே இருக்கிறது என்பதுதான் அவனது சந்தேகம்.

அரசவைப் புலவர்கள் எல்லோரிடமும் அது பற்றிக் கேட்டான்.

எல்லோரும் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.

அதே நேரம், "பெரியதாசர் என்ற அடியவருக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது." என்றனர்.

உடனே, பெரியதாசரை அழைத்து வர உத்தரவிட்டான் அரசன்.

பெரியதாசர் அரசன் முன் வந்து நின்றார்.

அவரைச் சிறப்பாக வரவேற்ற அரசன், அவரை உயரிய இருக்கையில் அமர வைத்து பெருமைப் படுத்தினான்.

தனது தீராத சந்தேகமான வைகுண்டம் எங்கே இருக்கிறது? என்பதை அவரிடம் அரசன் கேட்டான்.

"அரசே! எனக்குத் தெரிந்ததெல்லாம் நம்மூர் பெருமாள் கோவில் மட்டும்தான். வைகுண்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது தெரியாது. கண்களால் பார்ப்பவற்றை மட்டுமே நாம் நம்புகிறோம். மற்றவற்றை அனுமானத்தின் வாயிலாகவே உணர்ந்து கொள்கிறோம். அந்த பூமியில், கஜேந்திரன் என்ற யானை, ஆதிமூலமே...! என்று குரல் கொடுத்தபோது, இறைவன் வைகுண்டத்தில் இருந்து வந்து காப்பாற்றி இருக்கிறார். அப்படியென்றால், இங்கிருந்து கூப்பிடும் தூரத்தில்தான் வைகுண்டம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது." என்றார் பெரியதாசர்.

இந்த விளக்கத்தைக் கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்தான். வைகுண்டம் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்தான்.

No comments:

Post a Comment