Thursday, October 27, 2016

urchagamaga ulliam seivom tamil story

ஒரு செழிப்பான நாடு இருந்தது. நல்ல இயற்கை வளமும் , செழிப்பான மண்வளமும் அந்நாட்டின் மிகப் பெரிய வலிமையாக இருந்தன. அந்த நாட்டின் அரசர் மிகவும் நல்லவர்.
இவ்வளவு இருந்தும் அங்கே ஒரு பிரச்சனை அடிக்கடி நடந்து வந்தது . கள்வர்கள் கூட்டம் ஒன்று திடீர் திடீரென்று வந்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்தது. அது மட்டுமின்றிப் பக்கத்தில் இருந்த காட்டில் இருந்து அபாயகரமான மிருகங்களும் உள்ளே நுழைந்து கால்நடைகளை இழுத்துச் சென்றன.
காடுகளும் , மலைகளும் சூழ்ந்திருந்ததால் எந்த வழியாக ஆபத்து வரும் என்று காவலாளர்கள் கணிக்க முடியவில்லை. எனவே அந்நாட்டின் அரசர் ஒரு முடிவுக்கு வந்தார் . மக்களையெல்லாம் அழைத்துப் பேசினார்.
" மக்களே , நமக்கு இத்தனை வளமிக்க நாட்டைக் கடவுள் அருளியிருந்தும் நம்மால் இங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. எந்த வழியிலிருந்து ஆபத்து வரும் என்பதையும் நம்மால் கனிக்கமுடியவில்லை. எனவே இப்போது நாம் ஒரு காரியம் செய்யப் போகிறோம் . நம்மைச் சுற்றிலும் உள்ள மலைகளில் இருந்து பாறைகளை எடுத்து வந்து செதுக்கி நம்முடைய நாட்டைச் சுற்றிலும் உயரமான கோட்டைச் சுவர் எழுப்புவோம். இரண்டு இடங்களில் மட்டும் வலிமையான கதவுகள் பொருத்தி அங்கே எப்போதும் வீரர்களைக் காவல் நிறுத்துவோம் . அதற்குப் பிறகு நமக்கு ஒரு ஆபத்தும் நேராது. நீங்கள் எல்லாரும் ஒத்துழைப்புக் கொடுத்தால் இந்த வாரத்திலேயே பணிகளைத் துவங்கலாம் " என்றார் .
மக்கள் எல்லோரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மன்னர் மேலும் சொன்னார் ,
" இந்தப் பணியில் ஈடுபடுபவர் ஒவ்வொருவருக்கும் நல்ல சன்மானம் வழங்கப்படும் . அது மட்டுமன்றி முழு வலிமையுடன் சிறப்பாக வேலை செய்யும் குழுவுக்கு ஏராளமான பொன்னும் , வைரமும்
பரிசளிக்கப்படும் ". இப்போது இன்னும் அதிகமான ஆரவாரம் .
ஊரே பரபரப்பானது. இளைஞர்களும் , பலசாலிகளும் , கட்டுமஸ்தான உடல் கொண்டவர்களும் அணி திரண்டனர். மலைகளைப் பெயர்த்துப், பாறைகளைக் கோட்டைக்குத் தக்க கற்களாக செதுக்கி , அவற்றைத் தூக்கி வந்து அடுக்குவது மிகப் பெரிய வேலையல்லவா ?
அந்த வாரத்திலேயே வேலை துவங்கி விட்டது. பாறைகள் ஒரே வடிவமான கற்களாக செதுக்கப்பட்டன. ஒரு கூட்டம் இளைஞர்கள் அவற்றைக் கயிற்றில் கட்டியும் , சக்கரங்களில் ஏற்றியும் இடமாற்றம் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கூட்டத்தினர் அஸ்திவாரம் இடத்துவங்கினர்.
உற்சாகமாய் வேலை துவங்கும்போது அங்கே திடீரென்று வந்து நின்ற இருவரைப் பார்த்து அவர்கள் எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.
ஏனென்றால் அவர்களில் ஒருவர் கால் ஊனமுற்றவர். மற்றொருவரோ நடக்கவே தடுமாறும் ஒரு குள்ளர்.
" யோவ் , எங்க வந்திங்க ரெண்டு பேரும் ? இங்க நடக்குறது ஒன்னும் பூப்பறிக்கிற வேலை இல்லைய்யா . பெரிய பெரிய பலசாலிங்களே செய்றதுக்கு திணர்ற வேலை. பாறை கீறைல மோதிக்காம சீக்கிரம் எடத்த காலி பண்ணுங்க " என்றான் ஒரு இளைஞன். அவன் சொன்னதைக் கேட்டு எல்லாரும் இன்னும் அதிகமாகச் சிரித்தார்கள்.
வந்தவர்களோ கோபப்படவில்லை . அதில் குள்ளமானவர் சொன்னார்.
" நீங்கள் செய்யத் துவங்கி இருப்பது நம் நாட்டுக்கான மிகப் பெரிய சேவை. இதில் உங்களைப் போல எங்களால் பத்தில் ஒரு பங்கு கூட செய்ய இயலாது. இருந்தாலும் எங்களால் இயன்றதை செய்ய எங்களை அனுமதியுங்கள் ". அவருடைய பேச்சு அவர்களுக்கு ஞாயமானதாகத் தோன்றியது.
கால் ஊனமானவரும் சொன்னார் ,
" எங்களுக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் . எல்லாரும் நாட்டுக்காக உழைக்கும்போது நாங்கள் மட்டும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்விலிருந்து விடுபட்டால் அதுவே எங்களுக்குப் போதும் . நாளை முதல் வேலைக்கு வருகிறோம் " என்று சொல்லிவிட்டு , மற்றவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
சொன்னபடியே அவர்கள் வந்து விட்டார்கள். குள்ளர் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டார். தண்ணீர் கேட்டு யாரேனும் கரம் உயர்த்தினால் ஓடிப்போய்த் தண்ணீர் கொடுப்பதுடன் ,
இனிமையாகப் பாடவும் செய்தார். இது அவர்கள் களைப்பில்லாமல் உற்சாகமாய் வேலை செய்ய உதவியது. அது மட்டுமல்லாமல் அவருக்கு நகைச்சுவையாகப் பேசும் திறமையும் இருந்ததால் எல்லாருக்குமே அவரைப் பிடித்து விட்டது. நாளடைவில் அவரைப் பார்த்தாலே வேலையாட்கள் அனைவரும் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தனர் . பாறைகளையெல்லாம் பஞ்சு மெத்தைகள் போலத் தூக்கிச் சென்றனர்.
கால் ஊனமானவர் வைத்தியத்தில் தேர்ந்தவராக இருந்ததால் அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் காயங்கள் , சுளுக்கு , மயக்கம் போன்றவற்றுக்கு அருகிலேயே இருந்து உடனடி சிகிச்சை அளித்தார். கொடிய விஷ ஜந்துக்களின் கடிக்குக் கூட அவரிடம் மருந்து இருந்தது. அவரும் அவர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அனைவரின் உற்சாகமான உழைப்பில் ஓரிரு மாதங்களிலே வலிமையான மதில் உருவாகிவிட்டது. இனிமேல் எந்த பயமும் இல்லையென்று மக்களெல்லாரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் ராஜா ஏராளமான சன்மானங்களை அள்ளி வழங்கினார்.
அவர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களுக்குக் கிடைத்த சன்மானத்திலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அவர்களை உற்சாகப்படுத்திய அந்த இரண்டு ஊனமுற்றவர்களுக்கும் கொடுக்க முடிவு செய்தார்கள். இருந்தாலும் முழு பலத்துடன் சிறப்பாக உழைத்தவர்களுக்கான சிறப்புப் பரிசு யாருக்கு என்பதில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.
மலைகளைப் பெயர்த்து அடுக்கிய குழுவினர் தங்களுக்குத்தான் சிறப்புப் பரிசு என்று நினைத்தார்கள். அதைக் கற்களாக செதுக்கியவர்களும் தங்களுக்குத்தான் பரிசு என்று நினைத்தார்கள். அவற்றை சுமந்து கொண்டுபோன குழுவினர் , அஸ்திவாரமிட்டு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிய குழுவினர் , சுண்ணாம்பும் , காரையும் அரைத்துப் பூச்சுப் பூசிய குழுவினர் அனைவருமே தங்களது உழைப்புதான் பரிசுக்குரியது என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.
அரசர் முடிவை அறிவிக்க வந்தார். கூட்டத்தில் எதிர்பார்ப்பும் சலசலப்பும் உண்டாயிற்று. அரசர் சொன்னார்.
" மலையைப் பெயர்ப்பதும் , அதை ஒரே வடிவமுள்ள கற்களாய் செதுக்குவதும், செதுக்கிய கற்களைக் கட்டித் தூக்கி வருவதும் , அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்றி மதிலாக அடுக்குவதும் மற்றும் இது தொடர்பாக நீங்கள் செய்திருக்கும் எல்லா வேலைகளுமே கடினமானவைதான். அத்துடன் அர்ப்பணிப்பும் , புத்தி சாதுர்யமும் இல்லாமல் இவற்றையெல்லாம் செய்வது இயலாத காரியந்தான். எனவே இதிலுள்ள ஒவ்வொரு குழுவுமே பரிசுக்குரியதுதான் " மன்னர் சற்று நிறுத்தியபோது கூட்டத்தில் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது.
மன்னர் தொடர்ந்தார்.
" நீங்களெல்லாம் திடகாத்திரமானவர்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த ஆரோக்கியமான சரீரத்தைக் கொண்டு இதைவிட இன்னும் அதிகமாவும் உங்களால் சாதிக்க முடியும். ஆனால் இந்தத் தகுதி எதுவுமே இல்லாமல் , நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்ற பார்த்துடன் , தங்களால் முடியுமா என்று கூட சிந்திக்காமல் உங்களோடு சேர்ந்து உழைத்த அந்த இரண்டு பலசாலிகளை அழைக்கிறேன் " என்றார்.
உடனே ஒரு சிலர் ஓடிப்போய் ஊனமுற்றவர்கள் இருவரையும் தூக்கி வந்தார்கள் .
" இவர்கள்தான் மாபெரும் பலசாலிகள் . தங்கள் குறைபாடுகளைவிட நாட்டுக்காக ஏதேனும் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணந்தான் இவர்கள் மனதில் இருந்தது. இந்த உடலை வைத்துக் கொண்டு நாம் என்ன பெரிதாக சாதித்து விட முடியும் என்று நினைத்து முடங்கிவிடாமல் , தங்களுக்கு இதனால் என்ன கிடைக்கும் என்று எண்ணி விடாமல் தங்களிடம் இருப்பதைக் கொண்டு இந்தப் பணிக்குப் பெரிய தொண்டு செய்த இவர்களையே முழுபலத்துடன் தொண்டு செய்தவர்கள் என்று அறிவிக்கிறேன் " மன்னர் அவர்கள் இருவரையும் ஆரத்தழுவி சிறப்புப் பரிசுகளை அள்ளி வழங்கினார் . மன்னரின் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

எப்படிப்பட்ட உடல்நிலையில், எப்படிப்பட்ட பொருளாதார சூழ்நிலையில் அல்லது எத்தனை நஷ்டப்பட்ட நிலையில் இருந்து நாம் ஊழியம் செய்கிறோம் என்பதை அல்ல , அப்படிப்பட்ட சூழலிலும் நாம் எத்தனை உற்சாகமாய் ஊழியம் செய்கிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார். உலகம் உன் நிலையைக் கண்டு உன்னை உதாசீனப் படுத்தலாம். ஆனால் உன்னதமான தேவன் நீ அவருக்காகச் செய்யும் சிறிய செயல்களுக்குக் கூடப் பெரிதாகப் பரிசளிக்கக் காத்திருக்கிறார். உற்சாகமாய் செயல்படு.

"அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்"
2 கொரிந்தியர் 9 :7

Wednesday, October 26, 2016

IRANDU ELIGAL TAMIL STORY

இரண்டு எலிகள்

பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன.
அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அந்தப் பானை உயரமானதாக இருந்ததால் பாலைக் குடிக்க முடியாமல் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது என்றும், அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:
"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மேலே இருந்த எலி மிரண்டு போய் பால் பானைக்குள் விழுந்து விட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் இந்தப் பானையிலிருக்கும் பால் அனைத்தும்" என்று நினைத்தது.
பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
பால் பானைக்குள் விழுந்த எலி மேலே ஏறி வர முடியாமல் உயிரை விட்டது.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.பிரசங்கி 4:9-10
இப்படித்தான் துன்பத்திலிருந்து விடுபட ஒருவருக்குப் பிறரின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. ஆனால் அது சரியாக இல்லா விட்டால் இருவருக்குமே ஆபத்தாகி விடுகிறது.

POONAI ILLAMAL PAADAMA TAMIL STORY

பூனை இல்லாமல் பாடமா?

உடனே அந்த பூனையை பிடித்து பக்கத்தில் உள்ள மரத்தில் கட்டிவைக்குமாறு குரு உத்தரவிட்டார்.

பூனை கட்டப்பட்டதும் குரு தொடர்ந்து பாடம் நடத்தலானார். மறு நாள் குரு பாடம் கற்பிக்கும் வேளை பூனை மீண்டும் தனது விளையாட்டை ஆரம்பித்தது.

மீண்டும் பூனையை கட்டி வைக்குமாறு உத்தரவிட்டார் குரு. இவ்வாறு பூனை தொடர்ந்து தொல்லை பண்ணியதால் பூனையை பாடம் ஆரம்பிப்பதற்க்கு முன்னர் கட்டி வைப்பதும் பாடம் முடிந்ததும் அவிழ்த்து விடுவதும் வழக்கமாகிப் போனது.

சில காலத்தில் குரு இறந்து போனார். அந்த குருகுலத்தின் தலைமை சீடன் குருவாக மாறினார். வழக்கம் போல் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பூனை தொடர்ச்சியாக கட்டபட்டு வந்தது.

ஒரு நாள் பாடம் நடத்த வந்த குரு பூனை கட்டப்படும் மரத்தில் பூனை கட்டபடாதை கண்டு கோபங்கொண்டு சீடர்களை பார்த்து, "முட்டாள்களே பூனையை ஏன் கட்டவில்லை?" என்று கத்தினார்.

அப்போது சீடர்கள் சொன்னார்கள். "குருவே அந்த பூனை இறந்து விட்டது. அதுதான் பூனை கட்டவில்லை" என்றார்கள்.

உடனே குரு, முட்டாள்களே பூனை கட்டாமல் எப்படி பாடம் கற்பிப்பது? நமது குரு பூனை கட்டி வைத்து அல்லவா பாடம் நடத்துவார். இப்போது பூனை இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது? .உடனடியாக அடுப்பங்கறைக்குப் போய் அங்கே இருக்கும் பூனை ஒன்றை கொண்டு வந்து இங்கே கட்டுங்கள்" என்று உத்தரவிட்டார்.

பின் பூனை கட்டப்பட்டது பாடம் கற்பிக்கப்பட்டது.

இப்படித்தான் உண்மை அறியாமல் மூடநம்பிக்கைகள் முன்னோரால் கடைப்பிடிக்கப்பட்டது என்று தொடர்ந்து விடுகிறது.

VANJAGA NARIYIN THANTHIRAM TAMILSTORY

ஒரு கிராமத்தில் பெரிய பண்ணை ஒன்று இருந்தது. அதில் ஏராளமான ஆடுகளும் , கோழிகளும் , மாடுகளும் வளர்க்கப்பட்டன. அதில் ஒரு கொழுத்த எருதும், ஒரு நாயும் கூட இருந்தன.
எருதும் , நாயும் முதலாளியின் செல்லப் பிள்ளைகள் போல இருந்தன. சிறு வயது முதலாகவே இரண்டுமே நல்ல நண்பர்கள். பண்ணையின் எந்த இடத்திலும் சுற்றித்திரிய அவற்றுக்கு உரிமை அளிக்கப் பட்டிருந்தது. முதலாளி சில நாட்களில் இரவு நேரங்களில் , முயல் வேட்டைக்கோ அல்லது காவலர்களைக் கண்காணிப்பதற்கோ செல்லும்போது மட்டும் நாயை உடன் அழைத்துச் செல்வார் . மற்ற நேரங்களிலெல்லாம் எருதும் , நாயும் ஒன்றாய் விளையாடும்.
ஒரு நாள் முதலாளி , கடலைத் தோட்டத்தை சேதப்படுத்தும் முயல்களையும் , காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடுவதற்காக நாயை அழைத்துச் சென்றார். எருது மட்டும் தனியாக இருந்தது. மற்ற பிராணிகளெல்லாம் அதனதன் இடங்களில் அடைக்கப்பட்டிருந்தன.
அப்போது ஒரு திருட்டு நரி கோழியையாவது , ஆட்டுக்குட்டியையாவது பிடித்துச் செல்லலாமென்று எண்ணி வேலிக்கு அடியில் பள்ளம் பறித்து பண்ணைக்கு உள்ளே வந்து விட்டது. பண்ணை முழுக்க சுற்றியும் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோழிகளும் , ஆடுகளும் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. நரி எவ்வளவோ முயற்சி செய்தும் உள்ளே நுழைய முடியவில்லை.
நரி பண்ணையையே சுற்றிச் சுற்றி வந்தது . ஒன்றுமே கிடைக்கவில்லை . நடந்து நடந்து எருது இருக்குமிடத்துக்கு வந்துவிட்டது. திடகாத்திரமான உடலுடனும் , அச்சுறுத்தும் கொம்புகளுடனும் மலை மாதிரி நின்ற எருதைப்பார்த்து நரி ஒரு நொடி பயத்தில் ஆடிப் போய்விட்டது .
எருது இதுவரை நரிகளைப் பார்த்ததில்லை. எனவே நரியை வினோதமாகப் பார்த்தது .
" யார் நீ , இதுவரை உன்ன நான் இங்க பாத்ததே இல்லையே ? " என்றது. எருதின் பேச்சில் தொனித்த சிநேகம் நரிக்கு தைரியத்தைக் கொடுத்தது.
" நான் நரிங்க. காட்டுக்குள்ளேருந்து வந்துருக்கேன். இந்த இடத்துல ஒரு பெரிய பலசாலி இருக்குறதா கேள்விப்பட்டேன் . அதனாலதான் உள்ள வந்தேன். நான் கேள்விப் பட்டதை விட நீங்க பெரிய பலசாலியாதான் இருக்கீங்க " என்றது .
எருதுக்கு பெருமை தாளவில்லை.
" என்னப் பாக்குறதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே ? " என்றது சந்தோஷமாய் .
" ஆமாம் , ராஜா . அதுக்காக மட்டுந்தான் வந்தேன் " என்றது நரி. இப்போது அதன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது .
எருதுக்கு , " ராஜா " என்ற வார்த்தையைக் கேட்டது ஆனந்தமாக இருந்தது.
" என்னை ராஜான்னா சொன்னே ? "
என்றது.
" ஆமாம் ராஜா . உங்க பெருமை உங்களுக்கே தெரியலை . இப்ப நான் காட்டுக்குப் போய்ட்டு வந்து நாளைக்கு எல்லாம் விவரமா சொல்றேன் . என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது.
அந்த இரவு முழுதும் எருதுக்குத் தூக்கம் வரவில்லை. மனசெல்லாம் இனம் புரியாத சந்தோஷம் . நரி தன்னைப் பற்றி சொன்ன ,
" பலசாலி , ராஜா " என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதுக்குக்குள் அசை போட்டு மகிழ்ந்தது. அடுத்த நாள் இரவுக்காகக் காத்திருக்கத் தொடங்கியது .
********
காட்டுக்குச் சென்ற நரிக்கு ஒரே குதூகலம். எவ்வளவோ காட்டு விலங்குகளை அது சாப்பிட்டதுண்டு. ஆனால் ஒரு முறை கூட இப்படி ஒரு கொழுத்த எருதை ருசி பார்த்ததில்லை. தான் மட்டும் தனியாக எருதிடம் மோதினால் ஐந்தே நிமிஷத்தில் எருது குடலை உருவி விடும் என்று நரிக்கு நன்றாகவே தெரியும். எனவே அது வேறொரு திட்டம் தீட்டியது.
பகல் முழுவதும் காட்டுக்குள் அலைந்து , காட்டிலேயே சுவையான பழங்கள் , கிழங்குகள் , காய்கள் , மான்கள் விரும்பி உண்ணும் தாவரங்கள் போன்றவற்றை சேகரித்து மூட்டை கட்டியது.
அந்த நாளிலும் முதலாளிக்கு வேட்டை இருந்ததால் அன்று இரவிலும் நாய் அவருடனேயே வயலில் தங்கிவிட்டது. நரி சொன்னபடியே இரவில் எருதிடம் வந்துவிட்டது. தரை மட்டும் குனிந்து எருதை வணங்கி ,
" வணக்கம் மகாராஜா ! இது அடிமையோட காணிக்கை .
ஏத்துக்குங்க " . கொண்டு வந்த பொருட்களையெல்லாம் எருதின் காலடியில் வைத்து வணங்கியது .
எருதுக்குத் தலைகால் பிடிபடவில்லை.
" என்னப்பா , என்னென்னமோ சொல்ற , ஏதேதோ செய்ற ?" என்றது குதூகலமாய் .
" எல்லாம் பிறகு சொல்றேன் மகாராஜா. முதல்ல இந்தக் காணிக்கையை ஏத்துக்குங்க " .
நரி கொடுத்த மூட்டையை எருது பிரித்துப் பார்த்தது. அடடா , மனதைத் கவரும் மணம் மிக்க உணவுப் பொருட்கள். ஒவ்வொன்றாய் ருசித்து மகிழ்ந்தது. இத்தனை வருட வாழ்க்கையில் கண்டிராத அருமையான சுவை . நரியின் அன்பில் எருதுக்குக் கண்ணீரே வந்து விட்டது.
" ஆஹா என்ன ருசி ! என்ன ருசி ! உன்னோட அன்பும் , மரியாதையும் என்னைத் திணற அடிக்குது . உனக்கு நான் என்ன செய்யணும் ? " என்று கேட்டது.
இதற்காகத்தானே நரியும் காத்திருந்தது ? கண்களில் கண்ணீரோடு ஆரம்பித்தது .
" மகாராஜா ! இத்தனை பலசாலியா, கம்பீரமா இருக்குற நீங்க இப்படி கிடைக்கிறத தின்னுகிட்டு , வேலிக்குள்ள சிறைப்பட்டு அடிமை வாழ்க்கை வாழலாமா ? என்னோட காட்டுக்கு வந்துடுங்க. அங்க ராஜாவா இருக்குற சிங்கத்தை அடிச்சு விரட்டிட்டு நீங்களே ராஜாவாயிடுங்க. இப்ப நீங்க சாப்பிட்ட மாதிரி ஆயிரக்கணக்கான உணவு வகைகள் அங்க இருக்குது. காலமெல்லாம் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள்லாம் இருக்கோம் . உடனே புறப்படுங்க. உங்களை இப்படிப் பாக்க ரொம்ப வேதனையா இருக்கு ?" . கண்களைத் துடைத்துக் கொண்டது.
எருதும் அழுது விட்டது.
" நீ சொல்றது உண்மைதான். இனிமே நான் அடிமையா வாழ மாட்டேன். என்னோட நண்பன் நாய் வந்தது சொல்லிட்டு நாளைக்கு ராத்திரி உன்னோட வர்றேன். ஆனா சிங்கம்னா எப்படி இருக்கும் ? நான் பாத்ததே இல்லையே ? " என்றது
தன்னுடைய திட்டம் நிறைவேற ஆரம்பித்ததைக் கண்டு நரி மனதுக்குள் சந்தோஷப்பட்டது .
" சிங்கம்ங்கறது ஒன்னுமேயில்லை மகாராஜா. நீங்க பூனை பாத்துருக்கீங்க இல்லையா ? அதுலயே கொஞ்சம் பெரிய பூனை . அவ்வளதான் என்றது.
எருதுக்குப் பூனையென்றால் நன்றாகவே தெரியும். மூக்கால் ஒரு சீறு சீறிக் கழுத்தைத் தாழ்த்திக் கொம்பை முட்ட வருவதுபோல் அசைத்தால் அரண்டு ஓடிப்போகும் பூனைகள் அதன் நினைவுக்கு வந்தது .
" ஓ !சிங்கம்னா இவ்வளவுதானா? அப்பன்னா இனிமே காட்டுக்கு ராஜா நான்தான் " . எருதின் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
" சரிங்க மகாராஜா , நீங்க ஆயத்தமா இருங்க . நாளைக்கு ராத்திரி கிளம்புவோம். அடுத்த நாள்லேர்ந்து நீங்கதான் காட்டுக்கு ராஜா. யார் எது சொன்னாலும் காதுல வாங்கிக்காதிங்க. பொறாமைல ஏதாவது சொல்லி உங்கள தடுக்கப் பாப்பாங்க .
ஏமாந்துடாதிங்க ". சொல்லிவிட்டு மீண்டும் எருதை விழுந்து வணங்கிவிட்டு
வெளியேறியது நரி .
**********
எதிர்பார்த்தது போலவே நாய் , காலையிலேயே வந்துவிட்டது. சுற்றி வளைக்காமல் விஷயத்தை சொல்லிவிட்டது எருது. நாய்க்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
" நண்பா , எனக்கென்னவோ இது பெரிய ஏமாற்று வேலையாய்ப் படுது. இங்க உனக்குக் கிடைக்கிற பாதுகாப்பு வேற எங்கயுமே கிடைக்காது. என்னை மாதிரி அன்பான நண்பர்களை விட்டுப் போக நினைக்காதே " என்றது.
எருது இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் உடனே பதில் சொன்னது .
" எது ஏமாற்று வேலை ? இத்தன வருஷமா என்னை முன்னேற விடாம அடைச்சு வச்சு , ஒவ்வொரு தேவைக்கும் உங்க கையை எதிர்பாக்க வச்சு அடிமையாவே வளத்ததுதான் ஏமாத்து வேலை . இப்ப நான் ராஜாவாகப் போறேன். சுதந்திரமான வாழ்க்கை , விதவிதமான உணவு வகைகள். எனக்கு வேண்டியத இனி நானே தேர்தெடுப்பேன் . மத்தவங்க குடுப்பாங்கன்னு காத்திருக்க வேண்டாம். தயவு செஞ்சு என் வழியில் என்னை விட்டுடு" என்றது.
அதற்கு மேல் நாய் ஒன்றும் பேசவில்லை. எருது இரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
************
எருது எதிர்பார்த்திருந்தபடியே நரி நள்ளிரவில் வந்து சேர்ந்தது. எருது விட்ட ஒரே உதையில் கதவு திறந்து கொண்டது. நரியைப் பின் தொடர்ந்து ஓடியது .
" நான் இனிமேல் ராஜா " என்று உற்சாகமாய் மனதுக்குள் சொல்லியபடி ஓடியது. விடிந்த போது இரண்டும் காட்டுக்குள் வந்துவிட்டன . பச்சைப் பசேலென்ற தாவரங்களும் , பாறைகள் வழியாய் ஓடி வந்த நீரும் எருதுக்குப் பரவசத்தை உண்டாக்கின.
" எங்க அந்த சிங்கம் ? அதை உதைச்சு விரட்டிட்டு நான் சீக்கிரம் ராஜாவாகணும் " என்றது. நரி
" இதோ நெருங்கிட்டோம் மகாராஜா " என்றது. சற்று நேரத்திலேயே சிங்கத்தின் குகை வந்து விட்டது.
நரி வாசலில் நின்று அழைத்தது ,
" மகாராஜா , காணிக்கை கொண்டு வந்துருக்கேன் . ஏத்துக்குங்க . என்னையும் கொஞ்சம்
கவனிச்சுக்குங்க " என்று சத்தமிட்டது.
எருதுக்கு ஒன்றுமே புரியவில்லை.
" நரியின் கையில் ஒன்றுமே இல்லை. ஆனால் காணிக்கை கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறது. ஒரு வேளை சிங்கத்தை ஏமாற்றி வெளியே கொண்டு வர நரி செய்யும் தந்திரமாக இருக்கலாம் . வரட்டும் அந்த சிங்கம் . ஒரு கை பார்த்து விடுவோம் " . எருது தயாராக நின்று கொண்டது.
ஈரல் குலையை நடுங்க வைக்கும் உறுமலோடு சிங்கம் வெளியே வந்தது. அதன் கண்கள் நெருப்புத் துண்டங்களாய்ப் பிரகாசித்தது.
" இதுவா சிங்கம் ? என்ன பயங்கரம் ! பெரிய அளவில் உள்ள பூனையென்று நரி சொன்னதெல்லாம் ? "
நரியின் முகத்தைப் பார்த்தது. நரி வாய் நிறையப் பல்லாக ,
" மகாராஜா, அருமையான உணவு கொண்டு வந்துருக்கேன். எனக்கும் ரொம்ப பசிக்குது. வேண்டியத எடுத்துக் கிட்டு அடிமைக்கும் ரெண்டு துண்டு வீசுங்க " என்றது.
என்ன நடக்கிறது என்று எருது புரிந்து கொள்வதற்குள் சிங்கத்தின் வலுவான நகங்களும் , பற்களும் எருதைக் கிழித்து எருதின் உயிரைக் குடித்தன. ராஜாவாகும் ஆசையில் வந்த எருது சிங்கத்துக்கும் , வஞ்சக நரிக்கும் உணவாகிப் போனது.

இன்று இது போன்ற வஞ்சக நரிகள் எழும்பி தேவபிள்ளைகளுக்கு வீணான இச்சைகளைக் காட்டிக், கர்த்தரின் பரிசுத்த ஐக்கியத்திலிருந்து அவர்களை திசை திருப்பி அவர்களை எளிதாகப் பட்சிக்க ஆரம்பித்து விட்டன. விரும்பியதையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற வாக்குறுதி எங்கிருக்கிறதோ அதற்குப்பின் சத்துரு பட்சிக்கும்படி வாய் பிளந்து அமர்ந்திருக்கிறானென்று உணர்ந்து கொள்.

" நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்..."
எபேசியர் 4 :14

GNANAMULLA MANIDHAN TAMIL STORY

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.
மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார் .
" இளைஞர்களே! இதுவரை உங்களுடைய பராக்கிரமத்தால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி . இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் . பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும் . இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும் , மீன்களும் போதுமானதாக இருக்கும். ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான் அவர்களுக்குப் பசி அடங்கும்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.
அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான் ,
" தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.
தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .
இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.
கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.
அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.
" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை.
" உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ,
" தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான்.
தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி " என்றார்.

கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.
" உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார் " லூக்கா 8 :18

MUYALIN AASAI TAMIL STORY

யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் தனி உற்சாகம் வந்துவிடுகிறது முயல் மிக்குவுக்கு. வழக்கம் போல இந்த முறையும் தன்னைக் கடந்து சென்ற யானைக் கூட்டத்தை வைத்த கண் வாங்காமல் அவை போய் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தது.
யானைகளின் கம்பீரமும் , பாதையில் தடங்கலாக நிற்கிற எதையும் முறித்து எறிந்துவிட்டு முன்னேறும் வலிமையும் , எவ்வளவு பயங்கரமான மிருகம் எதிர்ப்பட்டாலும் தயங்காமல் தூக்கி வீசும் தைரியமும் சிறு வயது முதலாகவே முயலுக்குப் பிடிக்கும்.
இப்போதெல்லாம் மிக்குவுக்கு இந்த ஏக்கம் அதிகமாகி விட்டது . இன்று காலையில் கூட அது தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து சுவையான புற்களை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நரி வந்துவிட்டது . அவ்வளவுதான் கேவலமாய் அரக்கப் பரக்க ஓடி ஆளுக்கொரு புதரைத் தேடி ஒளிந்துகொண்டன . உயிர் போய் உயிர் வந்தது.
இதையெல்லாம் நினைக்கும்போது அதற்கு இன்னும் அவமானமும் , வேதனையும் அதிகரித்தது. " ம்ம். நான் மட்டும் ஒரு யானையா பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் ? " . இந்த ஏக்கம் அதற்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. இப்போதெல்லாம் அதற்குத் தன்னுடைய கூட்டத்தைப் பார்த்தாலே வெறுப்பு வந்து விட்டது.
ஒரு நாள் அது திட்டவட்டமான ஒரு முடிவெடுத்தது. அதைத் தன் கூட்டத்தாரிடமும் சொன்னது .
" என் ஜனமே , எனக்கு உங்களோடு சேர்ந்து வாழ விருப்பமில்லை. ஒரு சின்ன சலசலப்பைக் கேட்டாலும் , சாதாரணமான நரியைப் பார்த்தாலும் கூட ஓடி ஒளியும் உங்களோடு வாழ எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே பலசாலியான யானைகளின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளப் போகிறேன். அதற்குப் பிறகு எனக்குக் கிடைக்கப் போகும் மரியாதையே தனிதான். நீங்கள் மட்டுமல்ல, இந்தக் காடே என்னைக் கண்டு பயந்து வழிவிடும் " என்றது.
அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை மற்ற முயல்களுக்கு .
வயதான ஒரு முயல் சொன்னது ,
" மிக்கு , கடவுள் நம்மை நன்றாகத்தான் படைத்திருக்கிறார். காடு எப்போதுமே ஆபத்து நிறைந்ததுதான் . ஆனாலும் கடவுள் நமக்குக் கொடுத்திக்கிற அபரிமிதமான வேகமும் , ஆபத்தில் பதுங்கிக் கொள்ள நமக்குக் கிடைத்திருக்கிற ஏராளமான புதர்களும் , வளைகளும் நம்மைப் பாதுகாப்பதற்காகவே உண்டாக்கப் பட்டவை அல்லவா ? யானைகளின் பழக்க வழக்கங்களும் நம்முடைய வாழ்க்கை முறையும் எதிலுமே ஒத்துப் போகாதே. வெறும் பராக்கிரமத்தை மட்டுமே பார்த்து ஒரு கூட்டத்தோடு இணைந்து கொள்வது முட்டாள்தனம் அல்லவா ? " என்றது.
மிக்கு சுருக்கமாக பதிலளித்தது.
" உங்களில் ஒருவன் உங்களை விடப் பெரியவனாவது உங்களுக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லி நடையைக் கட்டியது. வயதான முயல் சொன்னது,
" விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப்போய்த்
தண்டிக்கப்படுகிறார்கள் .ஹ்ம்ம்ம். வேதம் நீதிமொழிகள் 27 :12 டில் தெளிவாகத்தான் சொல்கிறது . அதற்குக் கீழ்ப்படியாதவனை என்ன செய்ய ? " . முயல்களெல்லாம் திரும்பிப் போயின.
மிக்கு உற்சாகமாய் யானைளைத் தேடிப்புறப்பட்டது .
மிக்கு ஒரு அழகான பூவைப் பறித்துக் கொண்டு காடெல்லாம் சுற்றி வந்தது. மதியத்திற்குள் யானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து விட்டது. உற்சாகத்தோடு யானைகளின் தலைவனிடம் ஓடிப்போய்த் தன் கையில் இருந்த பூவைக் கொடுத்தது.
" தலைவா , வலிமையற்ற பயந்தாங்கொள்ளிகளின் கூட்டத்தில் வாழ்ந்து வெறுத்துப் போனேன். கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் உங்களை மாதிரி பலசாலிகள் கூட்டத்தில் வாழவேண்டும் என்ற கனவுடன் வந்திருக்கிறேன். என்னையும் உங்கள் கூட்டத்தில் சேர்ந்து வாழ அனுமதிப்பீர்களா ? " என்றது .
யானைகளின் தலைவனுக்குப் பெருமை தாளவில்லை. முயலின் அழகும், முகஸ்துதியான வார்த்தைகளும் அதற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன. தும்பிக்கையினால் அதைத் தூக்கி எடுத்துத் தன் கூட்டத்தாரிடம் சொன்னது.
" எல்லாரும் பார்த்துக் கொள்ளுங்கள் , இவன் இனி நம்மில் ஒருவன். இனி எப்போதும் நம்முடைய கூட்டத்துடனேயே இருப்பான் ".
மற்ற யானைகளெல்லாம் சத்தமாய் பிளிறி உற்சாகத்தைத் தெரிவித்தன. விரும்பி வந்த காரியம் இவ்வளவு எளிதாய் முடிந்ததில் முயலுக்கு ஒரே சந்தோஷம்.
யானைக் கூட்டம் புறப்பட்டது. முயலும் அவற்றுடன் சேர்ந்து ஓடியது. உற்சாமாய்த் துள்ளித் துள்ளி ஓடும் முயலைப் பார்த்து யானைகளுக்கும் வேகம் வந்துவிட்டது. அவைகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓடத்துவங்கின. ஒன்றை ஒன்று மிஞ்சும்படி கண்மண் தெரியாமல் ஓடியதில் முயல் ஒரு யானையின் காலில் மிதிபட்டது. அடுத்து வேகமாய் வந்த யானையின் பாதத்தின் கீழ் அது கூழானது. முயலின் ஆகாத ஆசை அதன் உயிரையே வாங்கிவிட்டது.

பராக்கிரமத்தையும் , வசதி வாய்ப்புகளையும் கொண்டிருப்பதை மாத்திரமே தகுதிகளாக எண்ணி உறவுமுறைகளை ஏற்படுத்தினால் மிக்குவை விட மோசமான நிலை கூட ஏற்படலாம்.நீதிமொழிகள் 10 :17 சொல்வது போல
" கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான் " என்பது எத்தனை உண்மை ?
"மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்".

MATRAVARUDAN POTTI PODATHE TAMILSTORY

புகழ் பெற்ற உணவகம் ஒன்று இருந்தது. அது தோசைக்குப் புகழ் பெற்றது. அங்கே கிடைக்கும் தோசையையும் , சாம்பாரையும் ஒரு முறை ருசித்தவர்கள் மீண்டும் மீண்டும் வந்துவிடுவார்கள். அதனால் எப்போதும் அங்கே நல்ல கூட்டம் இருக்கும் .
அந்த உணவகத்தில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் இரண்டு உபகரணங்கள் இருந்தன . ஒன்று தோசைக் கரண்டி இன்னொன்று சாம்பார் கரண்டி . இரண்டுக்குமே எப்போதும் ஆகாது . ஒன்றின் மேல் ஒன்று எப்போதும் பொறாமைப்படும் . பார்க்கும் போதெல்லாம் வாக்குவாதம் செய்து கொள்ளும் .
தோசைக் கரண்டியுடைய ஆதங்கம், தான் மட்டும் இருக்கிற இடத்திலேயே கிடப்பதும் , சாம்பார்க் கரண்டி மட்டும் சந்தோஷமாய் வெளியில் சுற்றி வருவதும்தான். சாம்பார்க் கரண்டிக்கோ , தோசைக் கரண்டி சும்மா இரண்டு திருப்பு திருப்பி விட்டு ஹாயாக ஓய்வெடுத்துக் கொள்ளும்போது தான் மட்டும் வெளியே சென்று ஒவ்வொரு தடவையும் வாளிக்குள் முங்கி முங்கி உழைக்க வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கம் .
தோசைக் கரண்டி நினைத்தது ,
" இத்தனை உறுதியாக வடிவமைக்கப் பட்ட என்னால் அந்த சாம்பார்க் கரண்டி போல வேலை செய்ய முடியாதா
என்ன ? " .
சாம்பார்க் கரண்டியோ ,
" இவ்வளவு வாகான கைப்பிடியுடன் உருவாக்கப்பட்ட என்னால் அந்த ஒல்லிக் கைப்பிடிக்காரன் மாதிரி செயல் பட முடியாதா ? " என்று நினைத்தது .
ஒரு நாள் இந்தப் பஞ்சாயத்தை சமையல்காரரிடமே கொட்டித்தீர்த்து விட்டன . அவருக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர் சொன்னார் ,
" சரி , நீங்கள் செய்யும் வேலையை ஒரு பதினைந்து நிமிடம் மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள் . பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் " என்றார். இரண்டுக்குமே அவர் சொன்னது சரியென்று பட்டது . ஒப்புக் கொண்டன.
தோசைக்கல்லின் மேல் ஓய்வெடுப்பது சாம்பார்க் கரண்டிக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. தோசைக் கரண்டிக்கும் , சாம்பார் வாளிக்குள் இருந்தபடி வெளியில் வந்து வாடிக்கையாளர்களைப் பார்ப்பது ஆனந்தமாக இருந்தது. நெடுநாள் கனவு நிறைவேறுவதில் இரண்டுமே சந்தோஷப்பட்டன .
சமையற்காரர் ஒரு தோசையை ஊற்றிவிட்டு சாம்பார்க் கரண்டியிடம் சொன்னார் ,
" இதை அப்படியே திருப்பிப் போடு " .
அதற்காகவே காத்திருந்த சாம்பார்க் கரண்டி ,
" இதோ செய்றேன் " என்று செயலில் இறங்கியது .
அது எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை . கல்லில் இருந்த தோசை துண்டு துண்டானதுதான் மிச்சம் . இப்போது தோசை கருகவும் ஆரம்பித்து விட்டது. சமையற்காரர் கேட்டார் ,
" என்ன , முடிஞ்சுதா ?" .
சாம்பார்க் கரண்டிக்கு அழுகை அழுகையாக வந்தது. இது வரை, அவர் சொன்ன அடுத்த நொடியிலேயே எத்தனை பேருக்கு சாம்பார் ஊற்றியிருக்கும் ? இப்போது ஒரு தோசையைக் கூடத் திருப்பிப் போட முடியவில்லை. அவமானத்தால் குறுகிப் போனது .
ஆர்வமாய் வெளியே சென்ற தோசைக் கரண்டியிடம் பறிமாறுபவர் சொன்னார் ,
" கொஞ்சம் சாம்பார் அள்ளி ஊற்று ".
" கொஞ்சம் என்ன ? நிறையவே ஊத்திட்டா போச்சு ". சொல்லியபடியே அள்ளி அள்ளிப் பார்த்தது. அதன் தட்டையான முன்புற அமைப்பால் கொஞ்சம் கூட அள்ள முடியவில்லை. வெறும் கரண்டியாகத்தான் வெளியில் வந்தது. பறிமாறுபரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அதற்கில்லை. வாளிக்குள் முகம் புதைத்துக் கொண்டது.
சமையற்காரர் சொன்னார் ,
" கரண்டிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்யும்படிதான் வடிவமைக்கப் பட்டிருக்கிறீர்கள். இதில் எதுவும் தாழ்ந்த வேலையல்ல. சாம்பார்க் கரண்டி வேலை செய்யவில்லையென்றால் தோசைக்கரண்டியின் படைப்புக்கு மதிப்பில்லை. தோசைக் கரண்டி வேலை செய்யவில்லையென்றால் சாம்பார்க் கரண்டிக்கு வேலையே இல்லை. இனியாவது மற்றவரோடு ஒப்பிட்டு உங்கள் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதிருங்கள் " .

மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை நமக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்கள் கண்ணில் படவே செய்யாது அல்லவா ?

" மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? " .
ரோமர் 9 : 21

KAALATHAI PAYANPADUTHU TAMIL STORY

அப்பாவைப் பார்க்க வேண்டுமென்று நீலனுக்கு ரொம்ப ஆசையாக இருந்தது . அப்பா வயலுக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர் திரும்பி வர இன்னும் சில நாட்களாவது ஆகும் .
அப்பாவுக்கு அரண்மனையில் வேலை. ராஜாவுக்கு சொந்தமான வயலில் அறுவடை நடந்துகொண்டு இருந்தது. அப்பாதான் அதை மேற்பார்வையிட்டு , அங்கேயே கூடாரமிட்டுத் தங்கியிருந்து இரவு பகலாய் ஆட்களைக் கொண்டு அறுத்து, போரடித்து , மூட்டைகட்டிக் களஞ்சியத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
வீட்டிலிருந்து வேகமாக நடந்தால் இரண்டு மூன்று மணி நேரங்களில் அப்பா இருக்கும் வயலை அடைந்து விடலாம். இருந்தாலும் அப்பா இது போன்ற சமயங்களில் வேலையை முடிக்காமல் வீட்டுக்கு வரமாட்டார்.
தான் அப்பாவைப் பார்க்கப் போக விரும்புவதை அம்மாவிடம் சொன்னான் நீலன் . அம்மாவும் ,
" காலைல பொழுது விடிஞ்சதும் சாப்பிட்டுக் கிளம்பிடு . வழியில பசி எடுத்தா சாப்பிட அடையும் சுட்டுத்தரேன்.
அப்பா காட்டுல சரியா சாப்பிடாம , கிடைச்சதை சாப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. நான் சூடா அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச தேங்காப்பால் பாயசம் செஞ்சுதரேன் . அப்பாகிட்ட குடுத்திடு " என்றார்.
நீலன் அம்மா சொன்னபடியே விடிகாலையிலேயே எழுந்து உணவருந்தி , அம்மா கொடுத்தவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
" இப்ப மணி ஆறு. வேகமா நடையைப் போட்டா ஒன்பது மணிக்குள்ள போய் சேந்துடலாம் " என்று கணக்குப் போட்டபடி வேகமாக நடைபோட்டான்.
போகும்போதுதான் தெரிந்தது அன்று மாத சந்தை . விதவிதமான பொருட்கள் , திண்பண்டங்கள் என்று சந்தை கோலாகமாகக் காட்சியளித்தது . ஆவென்று வாய்பிளந்தபடி வேடிக்கை பார்த்தான். அரை மணி நேரம் கழித்து சுயவுணர்வடைந்தான். மீண்டும் வேகமாக நடந்தான்.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு கூட்டத்தைப் பார்த்தான். அங்கே ஒரு குரங்காட்டி , குரங்கை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். குரங்குக்கு அவர் அழகாய் ஆடை அணிவித்திருந்த விதமே சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது.
குரங்காட்டி குரங்கிடம் ,
" உன் அத்தை மகளைப் பாத்தா என்ன பண்ணுவே " என்றார் . குரங்கு கண்ணடித்துக் காட்டியது. கூட்டம் சிரித்தது .
" உன் மாமியார் தண்ணி கேக்குறா. கொண்டு வா " என்றார். குரங்கு குடத்தை எடுத்துக் கொண்டு நடந்தது .
" சரி. உன் மாமியார் ஒனக்கு பொண்ணு குடுக்கலைன்னா என்ன பண்ணுவ ?"
என்றார் . இப்போது குரங்கு , குரங்காட்டியின் காலில் விழுந்து வணங்கி , அவரைப் பார்த்துப் பல்லை இளித்தது. கூட்டமே வயிறு வலிக்க சிரித்தபடி காசு போட்டது. நீலன் ,
" ஐயய்யோ, நேரம் போகுதே " என்றபடி அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.
கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தும் கொஞ்ச தூரத்தைத் தான் கடந்திருந்தான். அன்று ஊர்க் கண்மாயில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாகவே, மீன் பிடிப்பதை வேடிக்கை பார்ப்பது நீலனுக்கு மிகவும் பிரியம். மீனவர்கள் வலையை இழுக்கும்போது துடித்த விதவிதமான மீன்களைப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது . கரைக்கு வந்தும் சில பெரிய மீன்கள் நெளிந்தபடி தண்ணீருக்கு ஓட முயன்றன.
" எங்க ஓடுற ? " என்றபடி மீனவர்கள் அவற்றைப் பிடித்துக் கூடையில் போட்டுக் கொள்வதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
வயிறு பசித்தது . அம்மா கொடுத்த அடையைப் பிரித்து சாப்பிடத் தொடங்கும்போதுதான் நேரம் ஓடியது தெரிந்தது . மதியம் ஆகிவிட்டது. வேகமாய் ஓடினான். இன்னும் பாதிதூரம்
இருந்தது. இனிமேல் எங்குமே நிற்கக்கூடாது என்று முடிவெடுத்து ஓடினான்.
வயலை அடைய இன்னும் சிறிது நேரமே இருந்தது. மூச்சு வாங்க ஒரு இடத்தில் நின்றான். அவன் நின்ற இடத்துக்கு அருகில் ஒரு வீட்டு வாசலில் ஒரே கூட்டம் . என்னவென்று எட்டிப் பார்த்து , கூட்டத்தில் இருந்த ஒரு பையனிடம் விசாரித்தான் . அந்தப் பையன் ,
" அங்க பாரு " என்று அந்த வீட்டின் வாசல் படியை சுட்டிக் காட்டினான். அதைப் பார்த்து நீலன் அதிர்ச்சியில் அலறிவிட்டான்.
அங்கே இருந்த ஒரு துளையில் தடிமனான ஒரு பாம்பின் வால் பகுதி அசைந்து கொண்டிருந்தது . அப்போது அவனுக்குப் புரிந்தது. பாம்பு அந்த பொந்துக்குள் நுழைய முயன்றிருக்கிறது. அதன் ஆழம் போதாததால் முழுவதும் உள்ளே போக முடியவில்லை. ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொன்னார்கள். கேட்கவே சுவாரஸ்யமாக இருந்தது. அதற்குள் பாம்புப் பிடாரன் வந்து விட்டார்.
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் வகையில் அனைவரும் அமைதியாகி அவர் செய்வதை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினார்கள். பிடாரன் பொந்துக்கு அருகே உட்கார்ந்தார். பாம்பின் வாலைப் பிடித்துக் கயிறு போலக் கொஞ்சம் கொஞ்சமாய்க் ஒரு கையில் சுற்றிக் கொண்டே வந்தார். இன்னொரு கையில் மொத்தமான கோல் ஒன்று வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட ஐந்தடி தூரம் மெதுவாக இழுத்தபின் பாம்பின் தலை சீறிக் கொண்டு வெளிவந்தது. கூட்டமே பயந்து அலறிப் பின் வாங்கியது. பிடாரன் லாவகமாகக் கோலால் அதன் தலையை அழுத்திக் கொண்டே அதைக் கையில் பிடித்துக் கொண்டார். அப்பாடி. பெரிய பாம்பு.
பாம்பைக் கையில் பிடித்தபடி பிடாரன் கேட்டார் ,
" யாராச்சும் இவனுக்கு முத்தம் குடுக்க விரும்புறிங்களா ? இல்லன்னாலும் பரவாயில்ல. இவங்கிட்ட முத்தம் வாங்கிக்கிறீங்களா ? " கேட்டதுடன் நில்லாமல் அவர்கள் மேல் பாம்பைத் தூக்கி வீசுவதுபோல் பாவனை செய்தார். அவ்வளவுதான் பாதிப்பேரைக் காணவில்லை.
பிடாரன் பாம்பைத் , தான் கொண்டு வந்த பையில் கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். கூட்டத்தினர் ஆளாளுக்குத் தங்கள் வீட்டுக்குப் பாம்பு வந்த அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு நின்றார்கள். வாயைப் பிறந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தான் நீலன் .
நீலன் மீண்டும் உணர்வடையும்போது வெயில் தாழ்ந்து கொண்டிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடினான். கொஞ்ச நேரத்தில் வயலுக்கு வந்து அப்பாவைப் பார்த்துவிட்டான்.
" அப்பா " என்று ஓடிப்போய் அணைத்துக் கொண்டான் . அப்பாவுக்கும் அவனைப் பார்த்ததில் மிகுந்த சந்தோவும். அவரும் அவனை அரவணைத்து முத்தமிட்டார். வீட்டாரை நலம் விசாரித்தார்.
" இதென்னடா பை? " என்று அப்பா கேட்டபோதுதான் அவனுக்கு நினைவு வந்தது.
" உங்களுக்குப் பிடிச்ச தேங்காப்பால் பாயசம்ப்பா " என்று வாளியை அவர் கையில் கொடுத்தான்.
" அடடா, சாப்பிட்டு எத்தனை நாளாச்சு ?" ஆர்வமாய் மூடியைத் திறந்த அவரது முகம் அருவெறுத்து சுருங்கியது.
" என்னடா இது ? " அவன் கையில் வாளியைக் கொடுத்தார் . வயிற்றை குமட்டும் நாற்றத்தில் நீலனும் அதிர்ந்தான்.
பாயசம் ஊசிப்போய் நாற்றமெடுத்திருந்தது. அப்பா முகத்தில் ஏமாற்றத்தின் வேதனை. நீலன் அழுதுவிட்டான்.
" அப்பா , தப்பு எம்மேலதாம்ப்பா . நாந்தாம்ப்பா அங்கயும் இங்கயும் வேடிக்கை பாத்து நேரத்தை வீணடிச்சிட்டேன் . கிளம்பின வேகத்திலயே வந்திருந்தா உங்களுக்கு அருமையான பாயசம் கிடைச்சிருக்குமேப்பா " என்று கதறினான்.
அப்பா சொன்னார் ,
" அப்பாவுக்கு சூடான பாயசம் கொடுக்கணும்ங்கற உணர்வு உனக்கு இருந்திருந்தா இப்படி நேரத்தை வீணான விஷயங்கள்ல தள்ளிப்போட்டு பாயசத்தையும் வீணாக்கி நீயும் உன்னை நீயே நொந்துகிட்டு புலம்புற நிலைமை வந்திருக்காது ".

உலகம் முழுக்க வேடிக்கைக்கும் , கேளிக்கைக்கும் என்றுமே குறைவில்லை. ஒவ்வொன்றிலும் மனதைப் பறிகொடுத்து உறைந்து போய் நின்று காலம் தாழ்த்தினால் ,வயதும் போய் , அவயங்கள் பழுதுபட்டு எதற்குமே உபயோகமற்றுப் போக நேரிடும். கர்த்தருக்கு உன்னைக் கொடுக்க விரும்பினால் நல்ல நிலையில் இருக்கும்போதே , காலத்தை வீணடிக்காமல் கொடுத்துவிடு. ஊசிப்போன பாயசம் ஒன்றுக்கும் உதவாது.
" உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் "
2 கொரிந்தியர் 9 :7

Tuesday, October 25, 2016

KOLIYIN THAPPU KANAKKU TAMIL STORY

ஒரு வீட்டில் நிறைய கோழிகள் இருந்தன . தினமும் அவை அந்த வீட்டிலிருந்த பெரிய தோட்டத்தில் மேய்ந்து விட்டு, மாலை நேரத்தில் பாதுகாப்பாய் ஒரு பெரிய மூங்கில் கூண்டுக்குள் வந்து அடைந்து விடும்.
அந்தக் கோழிகளிலேயே கருப்பு என்ற கோழியை அங்குள்ள எல்லாக் கோழிகளுக்கும் பிடிக்கும். ஏனென்றால் அது எல்லாக் கோழிகளோடும் அன்பாகப் பழகும் . ஏதாவது ஒரு கோழிக்கு உடல் சுகமில்லையென்றால் அதனுடன் பரிவாகப் பேசி தைரியப் படுத்தும். அதற்கு வேண்டிய உணவுப் பொருட்களைத் தானே கொண்டு வந்து கொடுக்கும். தீவனம் இடப்படும்போது முதலில் பலவீனமான கோழிகளையும் , வயதில் மூத்த கோழிகளையும் சாப்பிட வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் மற்ற கோழிகளை சாப்பிட அனுமதிக்கும்.
கருப்புக் கோழிக்கு இருந்த மரியாதையைக் கண்டு வெள்ளை என்ற கோழிக்கு எரிச்சலும் , பொறாமையுமாக இருந்தது. வெள்ளையும் ஏதாவது செய்து நல்ல பெயரெடுக்க முயற்சி செய்துதான் பார்த்தது. ஆனாலும் அதன் இயல்பான சிடுசிடுத்த குணமும் , எதற்கெடுத்தாலும் சண்டை வளர்க்கும் தன்மையும் , யாருக்குமே மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்ளும் விதமும் அதற்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுத்தது.
தன்னால் கருப்புக் கோழிபோல் பணிவாக நடந்து நல்ல பெயர் எடுக்க முடியாது என்று வெள்ளை உறுதியாக நினைத்தது. அந்த எண்ணம் கருப்பின் மேல் பொறாமையாக மாறிவிட்டது. ஏதாவது சூழ்ச்சி செய்து கருப்பை ஒழித்து விடத்திட்டமிட்டது . அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.
ஒரு நாள் மாலை வெள்ளைக் கோழி , பழிவாங்கும் எண்ணத்தோடு திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததில் கூட்டுக்குள் சென்று அடைந்து கொள்ள மறந்து விட்டது . எஜமானரும் இதை கவனியாமல் கூட்டை இழுத்துப் பூட்டி விட்டார். இரவு முழுவதும் தோட்டத்திலேயே நின்று கொண்டிருந்தது.
வேலிக்கு வெளியே யாரோ மூச்சு விடுகிற சத்தம் கேட்டது . அடர்த்தியாக வேயப்பட்டிருந்த வேலியில் இருந்த சிறிய இடைவளி வழியாய்ப் பார்த்து அது ஒரு நரி என்று தெரிந்து கொண்டது. அதன் மனதில் ஒரு திட்டம் உதித்தது.
" யாருப்பா அது, நரிதானே ?" என்றது.
நரி திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னது.
" ஆமாம் ஆமாம். தூக்கம் வரலை. அதான் இந்தப் பக்கம் வந்தேன். வெளிய வாயேன் . பேசிக்கிட்டு இருப்போம் " என்றது .
வெள்ளை சிரித்து விட்டது.
" உன்னப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்றதைக் கேட்டா நாளைக்கு உனக்கு ஒரு கோழி கிடைக்கிற மாதிரி செய்வேன் " என்றது.
நரி ஆசையுடன் ,
" கோழி கிடைக்கிறதா இருந்தா எதை வேணாலும் செய்றேன் சொல்லு "
என்றது.
" நீ பெருசா ஒன்னும் செய்ய வேண்டாம் . நாளைக்கு இதே நேரம் இந்த இடத்துக்கு வந்துடு. நான் ஒரு கோழியை வேலிக்கு வெளியே அனுப்புவேன் . அதை லபக்குன்னு பிடிச்சிக்கிட்டு போயிடு " என்றது.
நரி கேட்டது,
" எனக்கு இது நல்ல சேதிதான். ஆனாலும் ஒரு சந்தேகம் . உங்க ஆளையே நீ எதுக்கு மாட்டி விடுறே ?"
என்றது. வெள்ளை சொன்னது ,
" எல்லாருக்கும் அவனைத்தான் பிடிக்குது. என்னை யாருமே மதிக்கிறதில்லை . அதனாலதான் ".
" என்னை விட பெரிய ஆளுதான் நீ. எப்படியோ , எனக்கு நல்ல விருந்து கிடைச்சா சரிதான் " என்றபடி நரி நகர்ந்தது . மறுநாள் என்ன சதி செய்து கருப்பை ஒழிக்கலாம் என்ற சிந்தனையில் இரவு ஓடிப்போனது. ஒரு நல்ல யோசனையும் உதயமானது.
காலையில் எல்லாக் கோழிகளும் திறந்துவிடப்பட்டன. மற்ற கோழிகளெல்லாம் உற்சாகமாக உள்ளிருந்து வெளியே ஓடி வருகையில் , வெள்ளை மட்டும் தடுமாறித் தடுமாறி உள்ளே போய் நின்றபடி உறங்க ஆரம்பித்தது. எந்தக் கோழியும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கருப்பு மட்டும் அதனருகில் ஓடி வந்தது.
" என்ன ஆச்சு உடம்புக்கு ? ஏன் சோர்வா இருக்கே ? ராத்திரி கூட நீ கூட்டுல அடைஞ்ச மாதிரி தெரியலையே ? " என்று கருப்பு கேட்டதும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது வெள்ளைக் கோழிக்கு . பலவீனமாய் சொல்ல ஆரம்பித்தது ,
" என் தாய்க்கு இருந்த நெஞ்சு வலி எனக்கும் வந்துவிட்டது. நடக்கக்கூட முடியவில்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நாள் நான் உறங்கிக்கிட்டு இருந்தா எஜமான் என்னை அறுக்க சொல்லிடுவாரே . சரி விடு அது என் தலையெழுத்து . பாவம் உன் மனசையும் கஷ்டப் படுத்துறேன். நீ போய் உன் வேலையைப் பாரு " என்றது.
கருப்பு சொன்னது ,
" உன்னை இந்த நிலைல விட்டுட்டு நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா ? இப்படியெல்லாம் பேசாதே " . இந்த வார்த்தைக்காகவே காத்திருந்த வெள்ளை சொன்னது ,
" அதுக்காக உன்னை நான் பூனைக்காலி இலையைக் கொண்டு வரச் சொல்ல முடியுமா ? அது மட்டுந்தான் இதுக்கு ஒரே மருந்து. எங்கம்மா அதை சாப்பிட்டுதான் பிழைச்சாங்க . அது ராத்திரியில மட்டுந்தான் கண்ணுல படும் . நீல நிறத்துல வெளிச்சமா தெரியும் .நான் நேத்து ராத்திரி பூரா கொல்ல முழுக்கத் தேடிட்டேன். ஒரு இலை கூடக் கிடைக்கலை . ஆனா வேலிக்கு வெளியே அந்த இலையோட நீல வெளிச்சம் தெரியறதைப் பாத்தேன் . ஆனா இந்த உடல் நிலைல என்னால தாண்டிப் போக முடியலை . என்ன செய்ய ? இப்படியே கிடந்து முதலாளி கையாலயோ இல்லி நெஞ்சு வலியிலயோ சாக வேண்டியதுதான் " .
கருப்பு பதிலுக்கு ,
" இந்த மாதிரியெல்லாம் பேசாதே . உனக்கு ஒன்னுன்னா அது எனக்கு வந்த மாதிரிதான். நீ இன்னிக்கு ராத்திரி அந்த இலை இருக்கும் இடத்தை மாத்திரம் காட்டு. நானே கொண்டு வறேன் " என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது. சந்தோஷத்தில் இப்போதே எழுந்து திங்கு திங்கென்று குதிக்க வேண்டுமென்று தோன்றியது வெள்ளைக்கு. இருந்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு பலவீனமாகக் காட்டிக் கொண்டது.
இரவு வந்தது. திட்டப்படியே இரண்டும் கூட்டுக்குள் அடையாமலேயே வெளியே தங்கிவிட்டன. நரியோடு முதல்நாள் பேசிய இடத்துக்குக் கருப்பை அழைத்துச் சென்றது வெள்ளை. அந்த முள்வேலியைத் தாண்டி ஒரு மரச்சட்டத்தால் ஆன வேலி இருந்தது. முள்வேலியை அப்புறப்படுத்திவிட்டுப் பலகைகளால் தோட்டத்தை அடைப்பதற்கான வேலையைத் துவங்குவதற்காக அது ஏற்படுத்தப் பட்டிருந்தது. கருப்புக் கோழி முள்வேலியைத் தாண்டி , அந்த உயரமான சட்டத்தின் மேல் அமர்ந்து கொண்டு எங்கேயாவது நீலநிற ஒளி வீசும் செடி தென்படுகிறதா என்று நோட்டமிட்டது .
முள்வேலிக்கு அடியில் நின்று கொண்டிருந்த வெள்ளைக் கோழிக்குக் கருப்பு எங்கே உட்கார்ந்து இருக்கிறது என்பது தெரியவில்லை. கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தது.
" ஒரு வேளை நரி வந்து சத்தம் போடாதபடி கருப்பின் குரல்வளையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போயிடுச்சா ? இல்ல ஒருவேளை நரி , நான் சொன்னத நம்பாம வரவே இல்லையா ? " நிசப்தம் வெள்ளையின் பொறுமையை சோதித்தது . முள்வேலியில் இருந்த முள்ளைக் கொஞ்சம் விலக்கி இடைவெளி ஏற்படுத்தி எட்டிப்பார்த்தது .
அப்போதும் ஒன்றுமே தெரியவில்லை.
இப்போது இன்னும் வலிமையை உபயோகப் படுத்தி முட்களை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தது. அது எதிர்பார்த்தபடியேதான் எல்லாமே நடந்து கொண்டிருந்தது. கருப்பு மரசட்டத்தின் மேல் நின்றபடி எங்கேணும் பூனைக்காலி இலை தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது . சட்டத்துக்குக் கீழே நரி சத்தமில்லாமல் பாய ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தது .
ஒன்று , இரண்டு , மூன்று ... நரி ஒரே தாவாகத் தாவியது சட்டத்தின் மேல் உட்கார்ந்திருந்த கருப்பை நோக்கி . ஆனால் சட்டத்தின் உயரம் அதிகம் என்பதால் நரியால் அதை எட்டிப் பிடிக்க முடியவில்லை . அடுத்த வரிசையில் இருந்த சட்டத்தில் மோதிக் கீழே விழுந்தது. சத்தம் கேட்ட கருப்பு அடுத்த நொடியே முள்வேலிக்குத் தாவிக் , கொல்லைக்குள் ஓடிக் கூட்டின் கூரைமேல் உட்கார்ந்து கொண்டது.
வெள்ளைக் கோழிக்கு வந்தது கோபம்.
" முட்டாள் நரியே . உன்னுடைய அவசர புத்தியால என்னோட திட்டமும் பாழாப் போச்சு . உனக்குக் கிடைக்க வேண்டிய விருந்தும் போயிடிச்சு " என்றது.
நரி சிரித்தபடியே ,
" உன்னோட திட்டம் வீணாப் போனது என்னமோ உண்மைதான் . ஆனா எனக்குக் கிடைக்க வேண்டிய விருந்து கிடைச்சிடுச்சே " என்றபடி வெள்ளைக் கோழியின் குரல் வளையை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி மறைந்தது.

கர்த்தருடைய பிள்ளைக்கு எதிராய் துன்மார்க்கன் வைக்கும் கண்ணி அவன் கழுத்துக்கே சுருக்காக மாறிவிடும் .
" நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்: அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான் "
நீதிமொழிகள் 11 :8

BAYAM THAN THOLVI TAMIL STORY

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.
அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால் எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.
பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்றபோது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.
உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.
எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.
புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.
அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து சொன்னான். அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று ,
" என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே ! உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.
" எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.
மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.
" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் . நான் உங்க தீவிர ரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? " என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.
"என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?"
இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.
போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர். அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.
" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே . என்னாச்சு உங்களுக்கு ? " என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . அவ்வளவுதான் . வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.
போட்டி துவங்கியது . அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை விழத்தள்ளிவிடுகிறது. பலவீனங்களை நோக்கிப் பார்க்கும்போது நாம் பலவீனப்பட்டுத்தான் போவோம். சகல வல்லமைக்கும் தேவனானவர் நம்முடன் இருப்பதை எண்ணினால் எந்த பலவீனமும் நம்மை வெல்ல முடியாது .
" பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக "
யோவேல் 3 :10

MUTTAL ERUMBU TAMIL STORY

நிறைய எறும்புகள் ஒரு வீட்டில் வசித்து வந்தன. அந்த வீட்டில் சிந்தப்படும் தானியங்களும் , உணவுப் பண்டங்களும் அவற்றின் பசி தீர்க்கவும் , சேமித்து வைக்கவும் போதுமானவையாக இருந்தன. அவை அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த ஒரு பொந்தில் சுகமாக வாழ்ந்து வந்தன .
அவற்றில் இரண்டு வாலிப எறும்புகளுக்கு அந்த வீட்டை முழுவதுமாக சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை வந்தது. எனவே இரண்டும் ஒவ்வொரு இடமாகத் திரிந்தன. பாத்திரங்கள் , கட்டில் , மேஜை , புத்தகங்கள் , துணிமணிகள் இப்படி ஒவ்வொன்றாய் வேடிக்கை பார்த்தன. புதிய இடங்களைப் பார்க்கப் பார்க்க அவற்றுக்கு ஒரே குதூலமாக இருந்தது. உற்சாகமாய்ப் பாடிக் கொண்டே ஓடி விளையாடின.
இப்போது விளக்குகளையும் , மின்விசிறியையும் பார்ப்பதற்காக சுவரில் ஏறி அவற்றையும் அருகில் சென்று பார்த்து ஆனந்தப் பட்டன. இதையெல்லாம் பார்க்காமல் இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமே என்று கொஞ்சம் வருத்தப் பட்டன. வீடு திரும்ப வேண்டுமென்ற உணர்வு வந்தது. திரும்பி நடந்தன.
அப்போது அவற்றின் கண்களில் , இது வரை பார்த்திராத ஒரு பொருள் பட்டது. அது ஒரு வித்தியாசமான உயிரினம். நீளமான உடலும் , கூரிய நகங்களை உடைய கால்களுமாய் இருந்த அந்தப் பிராணி எந்தவிதமான அசைவும் இல்லாமல் சுவரோடு சுவராக
ஒட்டிக் கொண்டிருந்தது.
ஒரு எறும்பு அதற்கு அருகில் சென்று பார்க்க விரும்பியது. அது மற்ற எறும்பையும் உடன் வரும்படி அழைத்தது.
" வேண்டாம் நண்பா , அது என்ன பிராணி என்பது நமக்குத் தெரியாது . தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் வீட்டுக்குப் போய்விடலாம் " என்றபடி கிளம்பியது மற்ற எறும்பு. இதைக் கேட்டதும் முதல் எறும்புக்குக் கோபம் வந்துவிட்டது .
" இவ்வளவு இடங்களுக்கு என் கூட வந்தாயே , உனக்கு என்ன ஆபத்து நேர்ந்து விட்டது ? அப்படியே வந்தாலும் அது எனக்கும்தானே வரும் ? எந்த அசைவுமில்லாத ஒரு பிராணியால் என்னதான் பெரிய ஆபத்து வந்துவிடப் போகிறது ? வீணான பயத்தால் ஒரு நல்ல அனுபவத்தை இழக்கப் போகிறாய். நீ வந்தால் என்ன , வராவிட்டால் என்ன ? நான் போகத்தான் போகிறேன். தொடை நடுங்கிகள் தானும் சந்தோஷமாக இருப்பதில்லை . மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை " .
சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்றது.
உண்மையாகவே அது ஒரு திகிலான சந்தோஷந்தான். அந்தப் பிராணியின் தலைமுதல் வால் வரை ஒரே மாதிரியான நிறம். கடுகு போன்ற கண்கள். சொரசொரப்பான உடல் . பார்வைக்கு பயங்கரமாகத் தெரிந்தாலும் அதன் அமைதி உற்சாகம் கொடுத்தது.
பெருமையுடன் திரும்பி அதன் நண்பனைப் பார்த்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதைக் காணவில்லை.
" முட்டாள் , முட்டாள் . வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை இழந்து விட்டான் " . விழுந்து விழுந்து சிரித்தது. இப்போது உடலில் ஏதோ பட்டது போலிருந்தது. என்ன இது ? எறும்பால் தன்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. அது பல்லியின் நாக்கில் ஒட்டியிருந்தது. கதறக் கூட நேரமில்லாமல் பல்லியின் நாக்குடன் அதன் வாய்க்குள் போய் மறைந்து விட்டது. பல்லியின் மெளனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள எறும்பு , தன் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது .

வேதத்துக்கு முரணாகத் தோன்றுகிற காரியங்களை வேடிக்கை பார்க்கக் கூட நெருங்கிப் போகாதே. மீளவே முடியாதபடி சிக்கிக் கொள்ள நேரிடலாம்.
" விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகளோ நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள் " நீதிமொழிகள் 27 :12

NILAIYILLA SANTHOSAM TAMIL STORY

பிரகாஷ் சோர்வாக நடந்து வருவதைப் பார்த்ததும் , தனக்கே முதல் பரிசு கிடைத்து விட்டது போல உணர்ந்தான் ரோஷன் . எப்படிப் பார்த்தாலும் பிரகாஷ் கால்நடையாய் , கிருபா மெட்ரிக்குலேஷன் பள்ளியை அடைய ஒரு மணி நேரம் ஆகும். இப்போதே மணி 9.20 ஆகிவிட்டது . 9.55 க்கு மேல் கேட்டை சாத்தி விடுவார்கள். இந்த சூழ்நிலையில் ரோஷன் நடந்து போய் , ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதெல்லாம் நடக்காத விஷயம். பிரகாஷ் சைக்கிளை சற்று வேகமாக மிதிக்க முற்பட்டான்.
அன்று மாநில அளவில் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி கிருபா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரகாஷும் , ரோஷனும் படிக்கும் திவ்ய தர்ஷினி பள்ளியில் இருந்து அவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்கள். ரோஷன் நன்றாக வரையக் கூடியவன்தான் . இருந்தாலும் பிரகாஷ் வண்ணங்களைக் கையாளும் விதம் அபாரமாக இருக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மற்ற பள்ளிகளில் இவர்கள் அளவிற்கு வரையக் கூடியவர்கள் இல்லை.
இப்போது பிரகாஷ் மட்டும் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டால் ரோஷன் வெற்றி பெற அதிகாக வாய்ப்பு இருந்தது. இந்த சூழ்நிலை ரோஷன் தாமதமாக நடத்து வருவதைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷாக இருந்தது ரோஷனுக்கு .
பிரகாஷ் கெஞ்சலாகக் கேட்டான் ,
" ரோஷன் , கிளம்பும் போது என் சைக்கிள் டயர் வெடிச்சிடிச்சி. சாயங்காலம்தான் ரெடியாகும். நீ கொஞ்சம் என்னையும் உங்கூட கூட்டிட்டுப் போயேன். லேட்டாயிடுச்சு " .
" ஐயய்யோ , ஏற்கனவே என் வண்டில டயர் ரொம்ப வீக்காருக்கு . இதுல டபுள்ஸ் போனா அவ்ளோதான் " சொல்லிவிட்டு பெடலை வேகமாய் மிதித்தான் ரோஷன்.
" இன்னும் இருபது நிமிஷத்துல ஸ்கூல் போயிடலாம். பிரகாஷ் அதுக்குள்ள அங்க வந்து சேர சான்ஸே இல்ல " மனசு சந்தோஷமாய்க் கூவியது. சந்தோஷம் நெடு நேரம் நிலைக்கவில்லை. திடிரென்று வீலில் காற்று குறைந்து போய் ரிம் டங்டங்கென்று அடிபட்டது . பதறிப் போய் சைக்கிளை நிறுத்தினான். முன் சக்கரம் காற்றில்லாமல் ஒட்டிப் போய்க்கிடந்தது. நல்ல வேளையாக அருகில் ஒரு சைக்கிள் கடை தென்பட்டது . அவசரமாய் அங்கு சைக்கிளைத் தள்ளிச் சென்றான்.
அங்கு இருந்த பெரியவர் சொன்னார் ,
" வண்டியை விட்டுட்டுப் போ தம்பி. கடைக்காரர் சாப்பிடப் போயிருக்கார். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவார் " என்றார்.
" அரை மணி நேரமா ? " . உயிரே போய்விட்டது ரோஷனுக்கு. இப்போது மணி 9.35. நடந்து போனால் இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். அதற்குள் கேட்டை மூடிவிடுவார்கள். அவனுக்கு அழுகையே வந்து விட்டது.
" இவ்ளோ கஷ்டப்பட்டு , பிரகாஷ் பயலைக் கழட்டி விட்டு வேகமா வந்தும் இப்படி ஆயிடிச்சே " மனசு கதறியது. உடைந்து போய் நின்றான் .
" டேய் என்னடா இங்க நிக்கிற ? டைம் ஆகலை ? " . குரல் பிரகாஷுடையது . யாரோ ஒரு மனிதருடன் பைக்கில் வந்து இறங்கினான்.
" டயர் பஞ்சர் " ரோஷனின் குரல் பலவீனமாக ஒலித்தது.
" பரவாயில்ல. கவலைப்படாதே . இது எங்க பக்கத்து வீட்டு மாமாதான். இந்தப் பக்கம் வந்துட்டிருந்தாங்க. நாந்தான் lift கேட்டு ஏறினேன் " . அவரிடம் சொன்னான் ,
" மாமா , இவன் என் friend தான் . இவனும் அங்கதான் வரணும் . இவனையும் ஏத்திக்கலாமே " என்றான்.
அவர் சிரித்தபடி ,
" மூனு பேரெல்லாம் போக முடியாது. நீ வேணும்னா நடந்து வா . இவனை ஏத்திட்டுப் போறேன் " என்றார் . பிரகாஷ் அடுத்த நொடியே ,
" ok மாமா. நீங்க இவனக் கூட்டிட்டுப் போங்க நான் நடந்து வரேன் " என்றான். மாமா சிரித்தபடி ,
" ரெண்டு பேரும் வந்து உக்காருங்கடா "
என்றார்.
போட்டியெல்லாம் முடிந்து , வெளியே வரும்போதும் ரோஷன் எதுவும் பேசாமல் தலை குனிந்தபடியே வந்தான்.
பிரகாஷ் கேட்டான் ,
" என்னடா ஒன்னுமே பேச மாட்ற ? " என்றான் . ரோஷன் தலைகுனிந்தபடியே கேட்டான் ,
" என் மேல உனக்குக் கோவமே வரலையா ? நீ நெனைச்சிருந்தா என்னை அம்போன்னு விட்டுட்டுப் போயிருக்கலாமே " .
பிரகாஷ் சிரித்தபடியே சொன்னான் ,
" உன்னைப் பழிவாங்கிருந்தா இன்னிக்கு ஒரு நாள் மட்டுந்தான் சந்தோஷமா இருந்திருப்பேன். ஆனா இப்ப வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்கலாம். ஏசப்பா மத்தேயு 5 :44 ல சொல்லிருக்காங்க,
" நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் ". அதனால மன்னிக்கிறதுதான் எனக்கு சந்தோஷம் .
ரோஷனுக்கு இப்போது பிரகாஷின் ரகசியம் புரிந்தது.
" இன்னும் கொஞ்சம் அவரைப் பத்தி சொல்லேன். கேக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குது " என்றான் .

மனசுல வன்மத்தை வச்சுக்கிட்டு பழிவாங்குனா கிடைக்கிறது நிலையில்லாத சந்தோஷம் .
ஏசப்பா வார்த்தைகளைக் கேட்டு நடந்தாத்தான் நிலையான சந்தோஷம் .
" நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு " ரோமர் 12 :21

RENDU ANILGAL TAMIL STORY

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஜெபித்து விட்டு செய்வதும் , ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .
" திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே
தேவையில்லை " என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை . உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் பட வில்லையென்றபோதிலும் , கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.
" பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி " என்றது .
இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது.
" கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் " என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.
பக்தியுள்ள அணில் சொன்னது ,
" கடவுளை நம்புற நாங்கள்லாம்
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
(2 கொரிந்தியர் 4/9) . அதனால கடவுள் எங்கள கீழே தள்ளிவிட்டாலும் அதுலயும் காரணம் இருக்கும் " என்றது.
" ஆமாமாம் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை " மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது , கண்களை மூடி விண்ணை நோக்கி ,
" கடவுளே , இந்த அவமானத்துக்கும் , வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க " என்றது.
அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது.
" டேய் , உன் பக்கத்துல பாம்புடா " என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .

சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய ஜீவனை மீட்பதற்காகக் கூட இருக்கலாம் . நமக்கு எது நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நன்மைக்கு ஏதுவாகவே அனுமதித்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமேது ?
" அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார் "
புலம்பல் 3 :32

KING AND ARTIST TAMIL STORY

ஒரு ராஜாவுக்குத் தன்னை ஓவியமாய்ப் பார்க்க ஆசை வந்தது. எனவே நாட்டிலிருந்த ஓவியர்களையெல்லாம் வரவழைத்துத் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னார். அவர்களும் அரசரின் ஓவியத்தை வரைவதற்காக மகிழ்ச்சியோடும் , உற்சாகத்தோடும் வந்தார்கள்.
ஒரு கூடத்தில் திரைச்சீலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தற்காலிகமான தடுப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தப் பட்டன. அரசர் , எல்லா ஓவியர்களும் தன்னைப் பார்த்துப் பார்த்து வரைவதற்கு வசதியாக நடுவில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
ஓவியர்கள் வரையத் துவங்கினார்கள்.
இரண்டு நாட்களுக்குள் அனைவரும் வரைந்து முடித்துவிட்டனர். ராஜா ஒவ்வொரு ஓவியமாகப் பார்வையிட்டார். ஆரம்பமே அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஒரு ஓவியர் ராஜாவின் இயல்பான கருப்பு நிறத்தை மாற்றிப் பவழம் போன்ற சிவப்பு நிறமாக்கி அழகாய் வரைந்திருந்தார் . இன்னொருவர் சூரியன் , சந்திரன் , நட்சத்திரங்களெல்லாம் அரசரின் காலின் கீழ் அடங்கி இருப்பது போல் வரைந்திருந்தார். இன்னொரு ஓவியர் அரசருக்கு முன்னால் பல தேசத்து ராஜாக்களும் தங்கள் கிரீடங்களோடு முகம்குப்புற விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல வரைந்திருந்தார் . மற்றொருவர் இன்னும் ஒரு படி மேலே போய் அரசர் ஒரு சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பது போலவும் , அவருக்குப் பத்து விதமான ஆயுதங்களைப் பிடித்திருக்கும் பத்து கைகள் இருப்பது போலவும் , அவரது தலைக்குப் பின்னால் ஒரு பெரிய ஒளி வட்டம் சுழல்வது போலவும் வரைந்திருந்தார்.
மகிழ்ச்சியில் ராஜா திக்குமுக்காடிப் போனார். தலைகால் புரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அரசரை அதி மனிதராய்க் காண்பித்து இருந்தனர். அதே சந்தோஷத்தோடு , கடைசி ஓவியனின் ஓவியத்தையும் காண உள்ளே நுழைந்தார் . உள்ளே வரையப் பட்டிருந்த படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார் . கோபத்தில் அவருடைய கைகள் நடுங்கிக் கண்கள் சிவந்தன .
ஆம். அங்கிருந்த ஓவியர் அவரை வரைந்திருந்த விதமே அதற்குக் காரணம் . அவர் வரைந்த படத்தில் ராஜாவின் கீரீடம் ஒரு பக்கம் நசுங்கிப் போய் அசிங்கமாகக் காட்சியளித்தது. அவர் கண்களில் ஒன்று , பார்வையற்றவர் போல மூடியிருந்தது. அருடைய செங்கோல் வளைந்து , தரையைப் பார்ப்பது போல் வரையப் பட்டு இருந்தது. மன்னர்களுக்கெல்லாம் மன்னர் என்றும் , பிரபஞ்சத்துக்கே அதிபதி என்றும் , கடவுளுக்கே நிகரானவர் என்றும் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளிய ஓவியங்களையெல்லாம் பார்த்துவிட்டு இப்போது இப்படி ஒரு ஓவியத்தைப் பார்த்தில் அவரது ரத்தம் கொதித்தது.
" மதிகெட்டவனே, என்னை அவமானப் படுத்தும் எண்ணத்தோடு வந்தாயா ? என்ன படம் வரைந்திருக்கிறாய் ? " என்றபடி தமது உடைவாளில் கை வைத்தார் . நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட ஓவியர் பணிவாய் மன்னருக்கு முன் முழந்தாள்படியிட்டு சொன்னார் .
" மன்னா , நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுப்பதாக இருந்தாலும் அடியேன் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனாலும் நான் பேசி முடித்த பின்பு தங்கள் விருப்பப்படி செய்யலாம் " என்றார் . மன்னர் மெளனமாக இருக்க மேலும் தொடர்ந்தார் .
" இந்த நாளில் தாங்கள் பல தரப்பட்ட ஓவியர்களின் கைவண்ணத்தில் வரையப்பட்ட தங்களின் அருமையான ஓவியங்களைப் பார்த்திருப்பீர்கள் . பலரும், பலவிதங்களில் உங்களைப் புகழ்ந்தும் , பெருமைப் படுத்தியும் வரைந்திருப்பார்கள் . அதெல்லாம் நல்லதுதான் . ஆனாலும் மன்னா அவையெல்லாம் நூறு விழுக்காடு உண்மைதானா ? அவை உங்களின் உண்மையான நிலையை உணர்த்துபவைதானா ? " .
ஓவியர் எதையோ சொல்ல விரும்புவதை மன்னர் உணர்ந்து கொண்டு அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் .
" அரசே , நான் ஒரு நேர்மையான ஓவியன் . உள்ளதை உள்ளபடி சொல்வது என் கடமை . அதிலும் நான் உங்கள் ஆளுகையின் கீழ் குடியிருக்கும் உங்கள் குடிமகன். பொய்யான தோற்றத்தைக் காட்டி உங்களிடம் பரிசு பெறுவதைவிட , உண்மையை உணர்த்தி அதனால் தண்டனை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சிதான் ".
இப்போது அரசர் குறுக்கிட்டார் ,
" என் மணிமுடி சேதப்பட்டிருப்பது போல் வரைந்திருக்கிறாயே , இதனால் எனக்கு என்ன நன்மை செய்துவிட்டாய் ?"
ஓவியர் சொன்னார் ,
" அரசே , மணிமுடி என்பது உங்களின் அதிகாரத்தின் அடையாளமல்லவா ? அதற்குக் களங்கம் கற்பிக்கும்படி உங்கள் பிரதானிகள் சிலர் நடந்து வருகிறார்கள் . நீங்கள் மக்களுக்கு வழங்கும்படி அனுப்பும் பல நன்மைகளில் பாதிகூட மக்களைச் சென்று சேருவதில்லை. நீங்கள் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் தகுதியானவர்களுக்குப் போகாமல் , உயரதிகாரிகளின் உறவினர்களுக்கும் , பணம் கொடுக்கத் தயாராக உள்ளவர்களுக்கும் மட்டுமே போய்ச் சேருகின்றன. இப்படி வேலைக்குச் சேருபவர்களிடமிருந்து தரமான அரசுப் பணியை எப்படி எதிர்பார்க்க முடியும் ? தரமில்லாத அதிகாரிகளின் வழியாக நடக்கும் உங்கள் அதிகாரம் , அதன் அடையாளமாக அமைந்துள்ள மணிமுடி சிதிலமடையாமல் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும் ? " .
அரசரும் இதுபற்றி அரசல்புரசலாகக் கேள்விப்பட்டிருந்தார் . இருந்தாலும் மக்களிடமிருந்து புகார் வரும்போது கவனித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தார் .
" அது இருக்கட்டும் . எனக்கு ஒரு கண் மூடப்பட்டிருப்பதாக வரைந்திருக்கிறாயே , நான் என்ன பார்வையற்றவனா ? " என்றார் .
ஓவியர் மீண்டும் தலைவணங்கிச் சொன்னார் ,
" மன்னாதி மன்னவா , கோபம் வேண்டாம் . கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சில மோசமான குற்றங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. தங்கள் பிரியத்துக்குரிய மந்திரியாரின் மகனுடைய தலைமையில் அமைந்த ஒரு கூட்டந்தான் இதைச் செய்து வருகின்றனர் என்பது மக்களில் பலருக்குத் தெரியும் . தங்களுக்கும் அது நிச்சமாய்த் தெரிந்துதான் இருக்கும் . யார் குற்றம் செய்தாலும் ஞாயம் தீர்க்க வேண்டிய மஹாராஜா , குற்றவாளி யாரெனத் தெரிந்தும் தனது அன்பிற்குரியவர் என்பதால் கண்டும் காணாமல் இருக்கும்போது அதை இப்படித்தானே வரைந்து சுட்டிக் காட்ட முடியும் ? "
அரசர் பதில் பேசவில்லை . ஓவியர் தொடர்ந்தார் ,
" நேர்மையும் , திறமையும் அற்ற அரசு ஊழியர்களையும் , குற்றவாளியை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காத அரசரையும் கொண்டுள்ள தேசத்தில் நல்லாட்சி எப்படி நடக்கும் ? அதன் செங்கோல் எப்படித் தலைநிமிர்ந்து நிற்கும் " .
அரசர் மெளனம் கலையவில்லை .
" அரசே! இந்த நாட்டின் மேல் அக்கறையுள்ள குடிமகனாய்த் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். இது உண்மைதானா என்று தங்களது ஒற்றர்களை வைத்து உறுதி செய்து கொள்ளுங்கள் . எனக்கு அரசர் எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் " என்றார்.
அரசர் அந்த ஓவியரைத் தமது விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து விட்டுத் தமது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களை அனுப்பி ஓவியர் சொன்ன காரியங்களின் உண்மைத் தன்மையை அறிந்து வரச் சொன்னார் . அவர்கள் திரும்ப வந்து சொன்ன விஷயங்கள் ஓவியர் சொன்ன காரியங்களைவிட அச்சுறுத்துபவையாக இருந்தன.
ஓவியருக்கு சிறப்பான வெகுமதி அளித்ததுடன் , அந்த ஓவியத்தைத் தாம் தினந்தோறும் பார்க்கும்படி ராஜா தன்னுடைய அறையில் வைத்துக் கொண்டார் . குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுத்து , மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வு வரச் செய்தார் . உண்மையைச் சொன்ன ஓவியரால் அந்த நாட்டுக்குப் பொற்காலம் உதித்தது.

நம்மைக் குறித்த விமர்சனங்களைக் கடந்து போகும்போது ஆத்திரப்படாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தால் நம்மால் இன்னும் நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும். வேதம் சொல்கிறதல்லவா ?,
" வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும் "
நீதிமொழிகள் 25
எனவே மனதில் வைத்துக்கொள் ,
" புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான் . "
நீதிமொழிகள் 10 :17
வசனத்துக்கு வளைந்து கொடு
வாழ்வெல்லாம் இன்பமாகும்.
" ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு "
2 தீமோத்தேயு 4

ELIYUM NEI DABBAVUM TAMIL STORY

காட்டுக்கு சுற்றுலாப் பேருந்து ஒன்று வந்தது . பேருந்தில் இருந்தவர்கள் காட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டார்கள் . போகும்போது ஒரு நெய் டின்னைத் தவறுதலாக விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதில் கொஞ்சம் நெய் இருந்தது.
நெய் வாசனையைக் கண்ட ஒரு எலி அந்த டின்னுக்குள் நுழைய வழி தேடியது . டின்னின் மேற்புறத்தின் துளையின் வழியாக உள்ளே நுழைந்து விட்டது. காட்டிலேயே வளர்ந்து , அங்கு கிடைத்த உணவு வகைகளையே கொறித்துப் பழகிய எலிக்கு , நெய்யின் சுவை ஆனந்தமாக இருந்தது . உறைந்து போய்க்கிடந்த நெய்க் கட்டிகளை மகிழ்ச்சியுடன் சுவைத்து சாப்பிட்டது .
வயிறாற சாப்பிட்ட மயக்கத்தில் அதற்குள்ளேயே உறங்கிவிட்டது. எலி உறக்கம் தெளிந்து வெளியே போக முயற்சிக்கும்போது டின் தடதடவென்று சத்தம் எழுப்பிச் சாய்ந்து விழுந்தது. பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்று சத்தம் கேட்டு பயந்து போனது. அதற்கு முன் அது இது போன்ற , மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களைப் பார்த்ததில்லை . எனவே அதற்கு பயம் வந்துவிட்டது . நடுக்கத்துடன் ,
" யாரு நீங்க ? உங்க தோற்றமே ரொம்ப வித்தியாசமா இருக்கு. உங்க சத்தமும் பயங்கரமா இருக்கு ? " என்றது.
" அற்ப ஜந்துவான என்னப் பாத்து கூட பயப்பட ஆளு இருக்குதா ? " . எலிக்குப் பெருமையாக இருந்தது.
" இதை விட்டுடக் கூடாது . அப்புடியே மெய்ன்டெய்ன் பண்ணிக்கணும் " என்று எண்ணியபடி ,
" நான்தான்டா கடமுடாகண்டன் . நட்சத்திரத்துலேர்ந்து கீழே விழுந்துட்டேன் . இனிமே இங்கேதான் இருக்கப் போறேன் " என்றது. தகரத்தில் அதன் குரல் பட்டு எதிரொலித்ததால் கொஞ்சம் பயங்கரமாகவே ஒலித்தது .
பயந்து போன மான் சொன்னது ,
" ஐயா , தயவு செஞ்சு என்னை ஒன்னும் பண்ணிடாதிங்க . நீங்க என்ன கேட்டாலும் தரேன் " என்றது.
ஏற்கனவே தன்னைப் பார்த்தும் ஒரு ஜீவன் பயந்து நடுங்குவதைக் கண்டு பெருமையாய் இருந்த எலிக்கு இப்போது புதிய யோசனையும் கிடைத்துவிட்டது.
" நீ போய் எனக்கு ஒரு தேக்கு இலை நிறைய மூங்கில் அரிசி கொண்டு வா. இல்லன்னா உன்னை முழுங்கிடுவேன் " என்றது.மான் ,
" இதோ கொண்டு வரேன் ஐயா . என்று ஓடிப்போனது " .
மான் போகிற போக்கில் கண்ணில் பட்ட மிருகங்களிடமெல்லாம் கடமுடா கண்டன் பற்றி பயமுறுத்திக் கொண்டே சென்றது. எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கின . எதையுமே நம்பாத நரி கூட இதைக் கேட்டு பயந்து போனது. ஏனென்றால் மனிதர்கள் இது போன்ற கைகாலில்லாத மிருகங்களைப் பல இடங்களில் வீசித் தன் சொந்த இனத்தாரையே அழிப்பார்கள் என்று அதன் தாத்தா சொல்லியிருந்தது. பெரியபெரிய கட்டடங்கள் மற்றும் மனிதர்களின் உடலெல்லாம் கூட சிதறிப் போய்விடுமாம் . நரிக்கு வேர்த்துப் போய்விட்டது.
சற்று நேரத்திலேயே எல்லா மிருகங்களும் ' கடமுடா கண்டனுக்கு ' முன்பாக மரியாதையாய் நின்றன . இந்த மரியாதை எலிக்கு சந்தோஷமாக இருந்தது. அன்று முதல் எலிக்கு ராஜ மரியாதைதான் . நன்றாய் சாப்பிடுவதும் , இரவில் டின்னை விட்டு வெளியே வந்து உலவுவதும் அதன் வாழ்க்கை முறையாகிவிட்டது. மிருகங்களை மிரட்ட அதில் டின்னுக்குள் குதித்தால் ஏற்படும் சத்தமே போதுமானதாக இருந்தது .
நாட்கள் ஓடின . எலி, காட்டு மிருகங்களை ஏமாற்றி சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தது. எந்த மிருகமும் கடமுடாகண்டனைப் பற்றி எதிராக எண்ணத் துணியவில்லை, ஒரு குட்டி நரியைத் தவிர . அதற்கு என்ன சந்தேகம் என்றால் கடமுடாகண்டன் ஒரு பயங்கரமான மிருகம் , எதையுமே அழிக்கக்கூடிய சக்தி அதற்கு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது சாப்பிடக் கேட்பதெல்லாம் சிறிதளவு பழமும் , தானியங்களும் , பருப்பு வகைகளுந்தான் .
இத்தனை பெரிய பலசாலி இவ்வளவு கேவலமான அளவிலா சாப்பிடுவான் ? அவன் கேட்கும் பொருட்களும் கூட ஏதோ சிறிய பிராணி உண்ணுகின்றவாகத்தான் இருக்கிறது . அது மட்டுமல்லாமல் , வைக்கப்படும் உணவை அவன் சாப்பிடுவதை இதுவரை யாருமே பார்த்ததில்லை . அவன் அந்த இடம் விட்டு அசைந்ததாகவும் ஞாபகமில்லை. எங்கோ தவறு நடப்பதைக் குட்டி நரி புரிந்து கொண்டது. அதை மற்ற மிருகங்களிடமும் சொன்னது.
எந்த மிருகமும் குட்டி நரி சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை . மாறாக அதைக் கடிந்து கொண்டன. குட்டி நரியின் பேச்சைக் கேட்டு ஏதாவது செய்யப் போய்க் கடைசியில் கடமுடாகண்டன் கோபத்தில் ஏதாவது செய்து விட்டால் ?
குட்டி நரி கடைசியாகச் சொன்னது ,
" ஒன்று செய்யலாம் , நீங்கள் தூத்தில் நின்று கொள்ளுங்கள் . நான் மட்டும் அவனோடு பேசுகிறேன். அவன் குட்டு வெளிப்பட்டதும் நீங்கள் என்னுடன் சேர்ந்து கொள்ளலாம் " என்றது. மிருகங்கள் அரை மனதுடன் சம்மதித்தன .
சற்று நேரத்திலேயே எல்லா மிருகங்களும் கடமுடாகண்டன் இருந்த இடத்துக்கு வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. குட்டி நரி மட்டும் அதற்கு அருகே சென்று ,
" கடமுடாகண்டரே , காடு முழுக்கத் தீ பரவிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லோரும் உயிரைக் காத்துக் கொள்வி வேறிடத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறோம். காட்டுத்தீயை அணைக்க உங்களால் மட்டுமே முடியும். அணைத்து முடித்த பின்பு உங்கள் இடி முழக்கம் போன்ற குரலால் ஒரு சப்தம் எழுப்புங்கள் . நாங்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து உங்களுக்குத் தொண்டு செய்கிறோம் " என்று சொல்லிவிட்டு மற்ற மிருகங்களோடு ஒளிந்து கொண்டது.
"ஐயையோ , காட்டுத் தீயா ? " எலிக்குக் கைகால் உதறல் எடுத்தது. துளை வழியாக எட்டிப் பார்த்தது . டின்னுக்கெட்டிய தூரம் வரை எந்த மிருகமும் கண்ணில் படவில்லை .
" இனிமே , இந்த வேஷம் வேலைக்காதுடா சாமி . உசுரே
போயிடும் " என்று பதறியபடி டின்னை விட்டு வெளியே வந்தது.
டின்னுக்குள் இருந்து ஒரு எலி வெளிவருவதைப் பார்த்ததும் எல்லா மிருகங்களுக்கும் கோபம் தலைக்கேறியது.
" இத்தனை நாளும் கேவலம் உனக்கா பயந்து நடுங்கினோம் ? " என்று எண்ணியபடி எலிக்கு ஆளுக்கு ஆள் தர்ம அடி கொடுத்தன. எலி அலறியபடியே ஓடி மறைந்தது. அதற்குப் பிறகு அது அந்தக் காட்டுப் பக்கம் வரவேயில்லை.

நம்மை அச்சுறுத்தும் பிசாசு கூட இந்த எலி மாதிரிதான் . மிரட்டல் எல்லாம் பெரிதாக இருந்தாலும் மிகவும் எளிதாகத் தன் சில்லரைத் தனமான செயல்களால் சிக்கிக் கொள்ளுவான். அகிலத்தை வென்றவர் நம் அருகினில் இருக்கிறார் . அவருடைய வெளிச்சத்தில் அடையாளம் கண்டு , அடித்து விரட்டுவோம் சத்துருவை.
"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்"
யாக்கோபு 4 : 7

APPAVIN ANBU TAMIL STORY


·
பேருந்தில் எல்லாரும் தன்னையே கேலியாகப் பார்ப்பது போன்ற உணர்வு மேலிட்டது கிறிஸ்டோபருக்கு . கண்டக்டர் இவனைப் பார்த்தபடியே டிரைவரிடம் ஏதோ சொல்லியபடி குலுங்கிக் குலுங்கி சிரித்தார். பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு இளம் பெண்கள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி தங்களுக்குள் களுக்கென்று சிரித்துக் கொண்டார்கள்.
அவமானத்தில் , ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்துவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு. எல்லாம் இந்த அப்பாவால் வந்தது . காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கிற ஒருத்தனுக்குத் தெரியாதா , மூனு மணி நேரம் பஸ்ஸில் போய் , சரியான நிறுத்தத்தில் இறங்கி , மாமா வீட்டுக்குப் போய் சேருவது ?
எவ்வளவோ கெஞ்சித்தான் பார்த்தான் கிறிஸ்டோபர் ,
" அப்பா , நீங்க பஸ் ஏத்திவிடல்லாம் வர வேணாம்ப்பா . நானே ஸ்டாப்பிங்ல கரெக்டா இறங்கிடுவேம்ப்பா . மாமா நம்பர்தான் இருக்குதுல்ல ? " .
அப்பா விடுவதாக இல்லை ,
" அவன் திருச்சியில இருந்தப்ப அடிக்கடி போயிருக்கோம் , வீடு தெரியும். இப்ப தஞ்சாவூர் ட்ரான்ஸ்ஃபர் ஆகி புது அட்ரஸ்க்கு வந்துட்டான். நீ எங்கேயாச்சும் எறங்கிட்டா தவிச்சிக்கிட்டுல்ல நிக்கணும் ? நான் வந்து கண்டக்டர்கிட்ட
தெளிவா சொல்லிட்டு வந்துடுறேன் " . அப்பா இது மாதிரி விஷயங்களில் பின் வாங்குவதே இல்லை . ஆனா இப்படி மானத்தை வாங்குவார்னு யாருக்குத் தெரியும் ?
பஸ் வரைக்கும் வந்தார். முதலும் இல்லாமல் , கடைசியும் இல்லாமல் நடுவில் இருக்கும் ஒரு ஜன்னலோர இருக்கையில் அவனை உட்கார வைத்தார் . திடீரென்று இறங்கி ஓடிப்போய் சிப்ஸும் , குளிர் பான பாட்டிலும் வாங்கி வந்து அவன் கையில் கொடுத்தார். வீட்டில் கொடுத்தது பத்தாது என்று இன்னும் ஒரு நூறு ரூபாய் எடுத்து அவன் சட்டைப் பையில் சொருகினார். அது வரைக்கும் எல்லாமே சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது . பஸ் கிளம்பத் தயாராகும்போதுதான் அப்பா அப்படி நடந்து கொண்டார் .
கண்டக்டரிடம் போய் ,
" சின்னப் பையன் சார் . இப்ப தான் முதல் தடவையா போறான் . அட்ரஸ் தெரியாது. கொஞ்சம் ' சாந்தப் பிள்ளை கேட் ' வந்ததும் இறக்கி விட்ருங்களேன் ப்ளீஸ் " . அத்தோடு அப்பா நிறுத்தியிருக்கலாம் . அப்புறம் ஒன்று சொன்னார் பாருங்க.
" சார் பையனுக்குக் நேத்துலேர்ந்து கொஞ்சம் வயிறு சரியில்ல . ஏதாவது ஒரு அவரசம்னு சொன்னான்னா தண்ணி உள்ள பக்கமா கொஞ்சம் இறக்கி விட்டு அழைச்சிட்டுப் போங்க " . அவர் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டுப் போய் விட்டார். பஸ்ஸே சிரிப்பா சிரிக்கிது.
இங்கு மட்டும் கிடையாது . எங்காவது கிரெளன்டுக்கு விளையாடப் போனாலும் , எந்த இடம் ? , கூட விளையாட வருபவர்கள் யார் யார் ? , அவர்களுடைய மொபைல் நம்பர் எல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டுதான்
அனுப்புவார். அவன் கிரெளன்டுக்குப் போய்ச் சேருவதற்குள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே கால் பண்ணி ,
" கிறிஸ்டோபர் வந்தாச்சா ,
வந்தாச்சா "ன்னு கேட்டுக் கொண்டே இருப்பார் . பசங்க கலாய்ப்பார்கள் ,
" ஏன்டா , நீ வெளிய வரும்போது உங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்குவியா , இல்ல ஃபார்ம் Fill up பண்ணிக் கொடுப்பியா ? " .
கண்டர் அருகில் வந்ததும் டிக்கெட் காசை எடுத்து நீட்டினான் . அவர் ,
" யப்பா தம்பி , வயிறு எதாச்சும் கோளாறு பண்ணா உடனே சொல்லிடுப்பா , நிறுத்திடுறேன் . பல பேரு வர்ர பஸ்ஸு "
சொல்லிவிட்டு ஏதோ பெரிய ஜோக்கை சொல்லி விட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார். கிறிஸ்டோபர் தலையைக் குனிந்து கொண்டான்.
எங்க போனாலும் இந்த அப்பாவால மானக்கேடுதான். பாசம் என்ற பெயரில் இப்படித்தான் மானத்தை வாங்குவதா ? வேண்டுமென்றே மொபைலை switch off செய்து வைத்தான். " மூனு மணி நேரத்துக்குள்ள முன்னூறு Call வரும் " . திடீரென்று கண்டக்டர் எழுந்து அவன் பக்கத்தில் வந்தார்.
" தம்பி , அப்பா lineல இருக்கார் . உன் மொபைல் ஆஃப் பண்ணிருக்காமே ? என் நம்பருக்குக் கூப்பிடுறார். இந்தா பேசு " .
" அடக் கடவுளே ! " தலை சுற்றியது அவனுக்கு.
******
அவன் ஸ்டாப்பிங்கில் இறங்கும் போதே மாமா தயாராக நின்று கொண்டிருந்தார்.
" நூறு கால் பண்ணிட்டாருடா உங்கப்பா .
இன்னும் உன்னைப் பச்சக் குழந்தையாவே நினைச்சுக்கிட்டு இருக்காரு . நாளைக்கு காம்பெடிஷன்ல ஜெயிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் " என்றபடி வண்டியில் ஏறினார் .
தஞ்சாவூர் வந்த காரியமே அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அப்பா அடித்த கூத்தில் எல்லாமே மறந்து போயிருந்தது. கிறிஸ்டோபர் ஒரு சாக்பீஸ் சிற்பி . சிறு வயது முதலே அதை ஆர்வமாய்க் கற்றுக் கொண்டிருந்தான். தலைவர்கள் , மலர்கள் , மிருகங்கள் இப்படி எல்லாவற்றையுமே சாக்பீஸில் அழகாய் செதுக்கி விடுவான் . ஏராளமான பரிசுகளும் வாங்கிக் குவித்திருந்தான் .
அடுத்த நாள் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய சிற்பப் போட்டி இருந்தது . அதற்காகத்தான் வந்திருக்கிறான். அவன் இது வரை உருவாக்கிய தலை சிறந்த படைப்புகளையும் கொண்டு வந்திருந்தான் . மாமா , அத்தை எல்லாரும் பார்த்து வியந்து பாராட்டினார்கள் . குட்டிப் பயல் ஜெபா கூட ,
" ஐ , சூப்பர் " என்றான் .
" அவன் கைல குடுத்திடாதடா . நொறுக்கி மாவு மாவா ஆக்கிடுவான் . பாத்து " என்றார் அத்தை .
********
போட்டி முடிந்து வெற்றியுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் கிறிஸ்டோபர் . அவன் உருவாக்கிய
' அப்பாவும் மகனும் ' என்ற சிற்பத்துக்கு
முதல் பரிசு ரூ . 5000 கிடைத்தது. நாளை பத்திரிக்கைகளில் படம் கூட வரும்.
அதற்குள் அப்பா ஆயிரம் முறை அழைத்து விட்டார்.
" இருக்கட்டும் . ஊருக்குப் போன உடனே அம்மாவிடம் சொல்லி ஒரு வழி பண்ணனும் " .
அவன் வீடு வந்து சேரும்போது அப்பா வெளியே சென்றிருந்தார் . சந்தோஷமாய் வந்த அம்மாவிடம் , அப்பா செய்ததையெல்லாம் சொல்லிப் பொறுமித் தள்ளிவிட்டான். அம்மாவோ விழுந்து விழுந்து சிரித்தார் .
" என்னம்மா நான் இவ்ளோ சீரியசா சொல்றேன். நீங்க பாட்டுக்கு சிரிக்கிறீங்களே ? " என்றான்.
" அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்காங்கடா . உன்னை அனுப்பிட்டு நே்தது எவ்ளோ நேரம் ஜெபம் பண்ணாங்க தெரியுமா ? " . அம்மாவின் பதில் அவனை திருப்திப்
படுத்தவில்லை . அவனுடைய ஆதங்கம் அடங்காமல் புரண்டு கொண்டே இருந்தது . காசோலையை அம்மாவிடம் கொடுத்தான்.
அம்மா அவன் bagகிலிருந்த பழைய துணிகளை எடுத்துத் துவைக்கப் போட்டார் .
" டேய் , எங்கடா உன் statue box சைக் காணும் " என்றார் . ஒரு நொடியில் பொறி கலங்கிப் போனது கிறிஸ்டோபருக்கு .
" எங்கே போனது ? யாரைக் கேட்பது ? எத்தனை நாட்களாய்ப் பார்த்துப் பார்த்து செதுக்கிப் பாதுகாப்பாய் வைத்திருந்த சிற்பங்கள் ! " கிறிஸ்டோபர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. திடீரென்று அவனுக்கு நினைவு வந்தது .
" ஊர் திரும்பும்போது சிற்பங்கள் இருந்த பெட்டியை மாமா வீட்டில் இருந்த மேஜைமேல் வைத்தோமே " .
இப்போது வேறு கவலை வந்து விட்டது. அத்தை சொன்னது ஞாபகம் வந்தது ,
" அவன் கைல குடுத்திடாதடா . நொறுக்கி மாவு மாவா ஆக்கிடுவான் . பாத்து "
ஐயோ , ஜெபாப் பயல் கையில் கிடைத்திருந்தால் ? நினைக்கவே பயம் வந்தது . அழுகையை அடக்க முடியவில்லை. அம்மா அவன் அழுவதைப் பார்த்துப் பதறி விட்டார்.
" அழாதடா, கர்த்தர் அதை பத்திரமா உன் கையில் கொடுப்பார் . ஜெபம் பண்ணு "
என்றார்.
மாமாவுக்கு ரிங் போகிறது . ஆனால் கட் பண்ணி விடுகிறார். என்ன காரணமோ ? ஒரு வேளை ஜெபா எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கி விட்டானோ ? அதை சொல்ல விரும்பாமல்தான் கட் பண்றாரோ ? எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கி பாதுகாத்து வச்ச சிற்பங்கள் ? எல்லாம் போச்சே . மனம் உடைந்து போய் அம்மா மடியில் முகம் புதைத்து அழுதான் .
சற்று நேரத்தில் அவனது மொபைல் ஒலித்தது . மாமாதான் .
" ஒரு அடக்க ஆராதனைல
இருந்தேன்டா . அதான் அட்டென்ட் பண்ண முடியலை . உன்னோட பொம்மையெல்லாம் இருந்த பாக்சை டேபிள் மேலயே வச்சிட்டுப் போயிட்ட போலருக்கு . அத்தை பாத்துட்டு எடுத்து பத்திரமா வச்சிருக்கா. நான் ரெண்டு நாள்ல அங்க வருவேன் . வரும்போது எடுத்துட்டு வரேன் . மொபைல அம்மாட்ட குடு " என்றார் . கொடுத்தான்.
கை கால்களில் இன்னும் நடுக்கம் நிற்கவில்லை .
" நன்றி ஏசப்பா " என்றான். கண்ணீரும் நிற்கவில்லை. அம்மா அதற்குள் பேசி முடித்திருந்தார்.
ஆதரவாக அவன் தலையைக் கோதி அம்மா சொன்னார் .
" ஏதோ சில நாள் , சில மணி நேரம் , கஷ்டப்பட்டு உருவாக்கின சிற்பத்துக்கே இவ்ளோ அக்கறை எடுத்துத் தவிச்சுப் போனியே , இத்தனை வருஷம் எத்தனையோ பாடுகள் பட்டு உன்னை வளத்து ஆளாக்கின அப்பாவுக்கு உன்மேல் எவ்வளவு அக்கறை இருக்கும். உடைஞ்சு போற சாதாரண பொருளுக்கே இத்தனை தவிச்சுப் போனியே , அவருடைய ரத்தமும் , சதையுமா இருக்குற உனக்காக அவர் தவிக்கிற தவிப்பு உனக்கு சங்கடமா இருக்குதா ? "
நெற்றிப் பொட்டில் அறைபட்டது
போன்ற உண்மையில் அவனது மனஸ்தாபமெல்லாம் நொறுங்கிப் போனது. அப்பாவை அணைத்துக் கொண்டு வெற்றிச் செய்தியைச் சொல்ல ஆயத்தமானான்.
 
சொல்ல முடியாத அளவுக்குப் பாடுகளை சகித்து நம்மை சொந்தமாக்கிக் கொண்ட தேவன் நம் மீது கொண்டிருக்கும் அன்பு எத்தனை பெரியதாக இருக்கும் ?
" கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் "
எபேசியர் 5 : 2

Friday, October 21, 2016

NAAI SANTHAI TAMIL STORY

நாய் சந்தை

ஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான்.

ஏழையின் வீட்டருகே வசிக்கும் அவன், புதாவில் நடக்கும் சந்தைக்குச் சென்று விட்டு, மூட்டை நிறைய காசுகளுடன் வந்து கொண்டிருந்தான்.

“இன்று நல்ல வியாபாரம் போல் தெரிகிறதே” என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான் குடியானவன்.

உடனே பணக்காரனான அவன், ஏழையைச் சீண்டிப் பார்க்க எண்ணினான்.

“ஆமாம்.. ஆமாம்.. இன்று நான் அரசனுக்கு ஒரு டஜன் நாய்களை விற்றுவிட்டு வருகிறேன்” என்றான்.

“அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டான் குடியானவன்.

“அரசர் நாய்களுக்கு நிறைய காசுகள் தருகிறார் என்பது உனக்குத் தெரியாதா?” என்று மேலும் கூறிச் சீண்டினான் பணக்காரன்.

“அடடா.. எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று வருத்தப்பட்டான் குடியானவன்.

“புதாவில் நாய்ச் சந்தை நடக்கிறது” என்று கூறி விட்டு தனக்குள் சிரித்துக் கொண்டே சென்றான் பணக்காரன்.

இதைக் கேட்ட குடியானவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவனுக்கு பல நாய்கள் திரிந்து கொண்டு இருக்கும் இடம் தெரியும். அதனால் அடுத்த நாள், மிகவும் கஷ்டப்பட்டு, சில நாய்களை வளைத்துப் பிடித்துக் கொண்டு புதாவை நோக்கிப் பயணித்தான்.

நாய்கள் அனைத்தையும் மேய்த்துக் கொண்டு செல்வது அத்தனை எளிதாக இல்லை. இருந்தாலும் மிகுந்த பிரயாசைப்பட்டு, அவற்றை பிடித்துச் சென்று புதாவை அடைந்தான்.

அங்கு அரண்மனை வாசலை அடைந்தான். நாய்கள் மிகவும் சத்தமாகக் குரைத்தன. இங்குமங்கும் ஓடின. கட்டியிருந்த கயிற்றுக்குள் சிக்கிக் கொண்டன. இருந்தாலும் குடியானவன் அவற்றை கட்டியிழுத்து கொண்டு, அரண்மனை முற்றத்தை அடைந்தான்.

நாய்களுடன் வந்த குடியானவனைப் பைத்தியகாரன் என்று கருதி, சேவகர்கள் விரட்ட ஓடி வந்தனர்.

அப்போது முற்றத்தில் நடப்பவற்றை அரசன் மத்தயஸ் பார்க்க நேர்ந்தது. அவர் நீதிமான். அறிஞர். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் மிகுந்த சாமர்த்தியசாலி.

“இந்த நாயோடு வந்த குடியானவன் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்” என்று அரசர் எண்ணினார். குடியானவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்.

புதாவில் நாய்ச் சந்தைக் கதையைக் கேட்டதுமே, குடியானவன் பக்கத்து வீட்டுக்காரனின் கொடூரமான எண்ணம் அரசருக்கு விளங்கியது.

“நல்லது.. உனக்கு அதிர்ஷ்டம் தான். இன்று தான் புதாவில் நாய்ச் சந்தை” என்று கூறி, குடியானவனுக்கு ஒரு பை நிறைய பொற்காசுகளைத் தந்தார். நாய்களை வாங்கிக் கொண்டார்.

குடியானவன் வீட்டை அடைந்ததுமே, முதலில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நன்றி சொல்லக் கிளம்பினான்.

“இப்போது நானும் பணக்காரனாகி விட்டேன். எல்லாம் புதாவின் நாய்ச் சந்தையால் வந்ததே. உன்னுடைய பெருந்தன்மையான அறிவுரையால் வந்தது” என்று மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டுத் திரும்பினான் குடியானவன்.

இதைக் கேட்ட பணக்காரனுக்கு ஆச்சரியம். தான் விளையாட்டாகச் சொன்னது உண்மையானது கண்டு, தானும் அரசரிடம் சென்று பொற்காசுகளைப் பெற எண்ணினான்.

உடனே, மறுநாளே, ஊர் முழுதும் சுற்றி, பார்த்த நாய்களையெல்லாம் வாங்கிச் சேர்த்தான். மிகவும் கஷ்டப்பட்டு, குரைக்கும் நாய்களையெல்லாம் கட்டி இழுத்துக் கொண்டு புதாவின் அரண்மனையை அடைந்தான்.

அரண்மனை முற்றத்தில் நாய்களின் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதுமே அரசருக்கு தான் பார்க்கப் போவது என்ன என்று தெரிந்துவிட்டது. வாசலில் நாய்கள் சூழ பணக்காரன் நின்றிருப்பதைக் கண்டார்.

“சேவகர்களே.. நாய்களோடு வந்தவனை வெளியேத் தள்ளுங்கள்!” என்று ஆணை பிறப்பித்தார்.

“நான் புதாவின் நாய்ச் சந்தைக்காக வந்தேன்” என்று கத்தினான் பணக்காரன்.

“நல்லது.. நீ தாமதமாக வந்து விட்டாய். புதாவில் ஒரேயொரு முறை தான் நாய்ச் சந்தை நடந்தது. அது முடிந்து விட்டது” என்று கூறினார் அரசர்.

பணக்காரன் ஏமாற்றத்தோடு தன் தவற்றினை புரிந்து கொண்டு ஊர் திரும்பினான்.

Thursday, October 20, 2016

KURUVI SEITHA UDHAVI TAMIL STORY

குருவி செய்த உதவி

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத்தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், " ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்" என்றான்.

"என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.

சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், "நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி" என்று வருத்தத்துடன் கூறினான்.

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.

இதைப் பார்த்த அவன் மனைவி "நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்" என்று கணவனிடம் சொன்னாள்.

"பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்" என்றான் அவன்.

கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான். சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

"இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?" என்றாள் மனைவி.

அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.

அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. "இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. "இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது "இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி" என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.

என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், "இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை" என்றான்.

"வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்" என்றாள் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.

உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.

அவனிடம் வந்த அவர், "டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்" என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.

தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அதில் தங்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.

அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

"பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார். பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.

கால் சரியான அந்தக் குருவி கூட்டை விட்டுப் பறந்து போனது.

"மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனை விட செல்வன் ஆவேன்" என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. "ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு" என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.

அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.

அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.

கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

Tuesday, October 18, 2016

SINGATHIRKU VAALAI PALAM TAMIL STORY

சிங்கத்திற்கு வாழைப்பழம்

ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது.

அமரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதைப் பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.

ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப் பார்த்தது. அன்றும் அதே பார்சல்!. கொடுத்த ஆசாமியைக் கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடிச் சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

பார்சல் கொடுத்தவன் பணிவாகச் சொன்னான் ... ஐயா! தாங்கள் சிங்கம் என்பது எனக்குத் தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!

ELUMICHAGAI ALAVU SAATHAM TAMIL STORY

எலுமிச்சங்காய் அளவு சாதம்

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்ற தேசாந்தரி ஒருவன் இடையிலிருந்த உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று, "ஒரு தங்கக் காசு தருகிறேன். ஒரு எலுமிச்சங்காய் அளவு சாதம் போட்டாலும் பரவாயில்லை" என்றான்.

அந்த உணவு விடுதியிலிருந்த பெண்மணி தேசாந்திரியிடமிருந்து ஒரு தங்கக் காசை வாங்கிக் கொண்டாள்.

தேசாந்திரியோ கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.

அவன் முன்னால் ஒரு வாழை இலையைப் போட்டாள் அந்தப் பெண்மணி. பின்னர் இலையில் ஓர் எலுமிச்சங்காய் அளவு சாதத்தை வைத்துச் சிறிது குழம்பு விட்டுச் "சாப்பிடு"! என்றாள்.

அதிகமான பசியில் இருந்த தேசாந்திரி ஏமாற்றத்துடன் "என்ன இது? அநியாயமாக இருக்கிறதே! ஏதோ பேச்சுக்காக ஒரு எலுமிச்சையளவு சாதம் என்று சொன்னால் ஒரு தங்கக் காசுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு மட்டுமே சாப்பாடா?, நான் பட்டினியாகவே இருந்து விட்டுப் போகிறேன். உன் சாப்பாடு வேண்டாம். என் காசைத் திருப்பிக் கொடு" என்றார்.

அந்தப் பெண்மணியோ தான் வாங்கிய பணத்தைத் திரும்பத் தரமுடியாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.

அந்த தேசாந்திரிக்கு பெருத்த ஏமாற்றமாகிப் போனது. பசியும் கோபமும் சேர்ந்து கொண்டது. அவர் மரியாதை ராமனைப் பற்றி கேள்விப்பட்டார். நேராக மரியாதை ராமனிடம் சென்று தன் வழக்கைக் கூறினார்.

"அய்யா, ஒரு பேச்சுக்காக அந்த அம்மாவிடம் ஒரு எலுமிச்சை அளவு சாதம் போட்டால் ஒரு தங்கக் காசு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்தப் பெண்மணியோ என்னிடம் ஒரு தங்கக் காசை வாங்கிக் கொண்டு உண்மையாகவே எலுமிச்சங்காயளவு சாதம் போட்டார்கள். சாதம் வேண்டாம் காசைத் திரும்பக் கொடுத்து விடுங்கள் என்றால் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்" என்றார் தேசாந்திரி.

"இவர் சொல்வது உண்மை தானா?" என்று உணவு விடுதிப் பெண்மணியிடம் கேட்டான் மரியாதைராமன்.

அந்தப் பெண்மணியும் ஆமாம் என்றாள். மேலும் "அவர்தான் எலுமிச்சங்காய் அளவுள்ள சாதம் போடு என்றார். நான் அதைத்தான் செய்தேன்" என்றாள்.

உடனே மரியாதை ராமன் "நீங்கள் இவருக்குப் போட்ட சாதத்தைக் கொண்டு வந்து காட்ட முடியுமா?" என்றான்.

அந்தப் பெண்ணும் இலையில் அப்படியே இருக்கிறதென்று சொல்லி இலையில் போட்டபடியே இருந்த அந்த சாதத்தை அப்படியே கொண்டு வந்து காட்டினாள்.

இலையில் இருந்த சாதத்தைக் கூர்ந்து பார்த்த மரியாதை ராமன், "ஒரு சாதம் கூட எலுமிச் சங்காயளவு இல்லையே?" என்றான்.

"எலுமிச்சங்காயளவு சாதமா?" என்று வாயைப் பிளந்தாள் அந்தப் பெண்மணி.

"ஆமாம் இவர் எலுமிச்சங்காயளவுள்ள சாதம் தானே போடச் சொன்னார். நீ மிகச்சிறிய வடிவமாக இருக்கும் பல சாதங்களைக் கொண்டு வந்து எலுமிச்சங்காயளவு போட்டிருக்கிறாய். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீ ஒப்புக்கொண்டபடி எலுமிச்சங்காயளவுள்ள சாதத்தைப் போட முடியுமானால் போடு. இல்லையேல் இவருக்கு ஒரு தங்கக் காசைத் திருப்பிக் கொடுத்து விடு." என்றான் மரியாதைராமன்.

ஒவ்வொரு பருக்கையும் எலுமிச்சங்காயளவு இருப்பதைப் போல சாதத்தை போட முடியாத உணவுவிடுதிப் பெண்மணி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தேசாந்திரிக்கு தங்கக் காசைத் திருப்பிக் கொடுத்தாள்.

உணவு விடுதிப் பெண்ணின் பேராசையை சமயோசிதமாக கையாண்டு தீர்வு சொன்ன மரியாதை ராமனை அனைவரும் பாராட்டினார்கள்.

Saturday, October 8, 2016

kaathu ketkaatha thavalai tamil story

காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.