Tuesday, August 29, 2017

life is like this tamilstory



வாழ்க்கைப் பயணம்

அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா? எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

dog tail tamil story

நாய் வால்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? 

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...

நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. 

அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். 

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். 

இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. 

விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு. 

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.  

don't give up tamil story

மனம் தளராதே

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார். 

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார். 

thannambikkai tamil story

தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான். 

good help to all tamil story

தந்திரம்

ஒரு காட்டில் சிங்கம் ஒற்று வாழ்ந்து வந்தது. அது மிகவும் பலசாலியானதால் கர்வத்துடனும் வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடி விடும். 

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்ததது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேசவேண்டும் என் தீர்மானம் போட்டது. 

சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையடக்கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் என் கூறியது.

சிங்கமும் சரி என் கூறியது.

தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திருக்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை அது உணவாக சிங்கத்திடம் செல்லவேண்டும். மிகுந்த கவலையுடன் சென்று கொன்றுக்கும் பொது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜவிடம் சென்றது.

சிங்கராஜவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது.

சிங்கமும் காரணம் கேட்டது, அதற்க்கு முயல் "சிங்கராஜவே நான் வரும் 
வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன் அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்ட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று" 

அதற்க்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை,  இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என்றது " என கூறியது 

இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது 

முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் கர்ஜித்தது, கர்ஜனை எதிரொலித்ததும் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது,

முயலின் புத்திசாலித்தனம் நிறைவேறியது

monkey knowledge tamil story

குரங்கின் அறிவு

ஒரு நதியில் முதலை தன துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீடிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...! 

அடுத்த நல்ல ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது. 

நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "ஏன் இப்போ என வெடுக்கு போறோம் ன்னு தெரியும் ன்னு கேட்டது"

அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது. 

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.

சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாத? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற 

முதலையும் அப்படியா வாய் திரும்பி பொய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போடுசுசாம்.

true help tamil story

உதவி

ஒரு கட்டெறும்பு ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

மரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது. 

எறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு. புறாவுக்கும் நன்றி கூறியது 

மற்றொரு நாள்.

ஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.

ஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.

விரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.

கடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது. எறும்புக்கும் ன்றி சொன்னது 

அன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.

எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது. 

vida muyarchi tamil story

விடா முயற்சி

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான் 

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.  

serum paambu tamil story

சீறும் பாம்பு

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

poruppu tamil story

பொறுப்பு

ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர். 

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம். 

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது. 

ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள். 

மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். 

ஆறுமாதம் சென்றது. 

குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள். 

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள். 

""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள். 

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள். 

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள். 

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள். 

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன். 

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள். 

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள். 

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.