Wednesday, July 12, 2017

Be wise servant Tamilstory

ஒரு ஜமீந்தார் தன்னிடம் பல்லாக்கு சுமக்க நான்கு பேரை மாத சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தி வைத்திருந்தார். தான் வெளியில் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அந்த நால்வரும் வீட்டில் அமந்திருப்பர்கள் . அப்படி பட்ட நேரத்தில் அந்த நான்கு பேரிடம் எதாகிலும் சிறிய வேலைகள் இருக்கும் என்றால் வேலை வாங்குவது அந்த ஜமீன்தாரின் வழக்கம். அந்த நான்குபேரில் ஒருவனுக்கு இப்படி வேலை வாங்குவது பிடிக்க வில்லை , அவன் மற்ற மூவரிடம் நாம் பல்லாக்குதூக்கவே வேலைக்கு வந்தோம் அனால் இந்த ஜமீன்தார் நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் மற்ற வேலைகளை செய்ய சொல்லி தொல்லை தருகிறார் . எனவே பல்லாக்கு தூக்குவதை தவிர வேறு வேலை எதைசொன்னாலும் செய்யக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டனர்.
ஒரு நாள் ஜமீன்தாரின் வீட்டில் ஒரு கோழி காணாமல் போய் விட்டது . உடனே ஜமீந்தார் அந்த நான்கு பேரையும் அழைத்து ஒரு கோழி காணமல் போய் விட்டது அது இந்த கலரில் இருக்கும் போய் அதை தேடி கண்டு பிடித்து வாருங்கள் என்றுசொல்லி அனுப்பினார், அதற்கு அவர்கள் நாங்கள் பல்லாக்கு தூக்கவே வேலைக்கு வந்தோம் இதெல்லாம் எங்கள் வேலை அல்ல என்று சொல்லி போக மறுத்தனர் . ஜமீன்தார் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை , ஜமீன்தார் நீண்ட யோசனைக்கு பிறகு சரி நீங்கள் பல்லாக்கு தூக்குங்கள் நான் என் கோழியை தேடி கண்டுபிடித்து கொள்கிறேன் என்றார் . அவர்களும் பல்லாக்கு ஆயத்தம் செய்ய ஜமீன்தார் அதிலேறி அமர்ந்து கொண்டு கோழியை தேட போனார். காலை தொடங்கி மாலை வரை தேடியும் கோழி கிடைக்கவில்லை அதிகம் களைப்படைந்த நால்வரும் புத்தி தெளிந்து அந்த ஜமீந்தாரை வீட்டில் கொண்டு போய்இறக்கிவிட்டு ஐயா நாங்கள் தவறு செய்து விட்டோம் தயவு செய்து எங்களை மன்னியுங்கள் நீங்கள் வீட்டிலேயே இருங்கள் நாங்கள் போய் அந்த கோழியை தேடி கண்டுபிடித்து கொண்டு வருகிறோம் என்று தேடி சென்றனர் .
இப்போ நம்ம கதைக்கு வருவோம் நம்மில் அநேகர் இப்படித்தான் இயேசு என்னை பரலோகத்திற்கு மட்டுமே அழைத்தார் என்று எண்ணி அவர் சொன்ன கடமைகளை செய்ய தவறி விடுகிறோம் . உதாரணத்திற்கு துதிக்க , ஆராதிக்க , ஜெபிக்க , ஊழியம் செய்ய , மற்றவர்களுக்கு உதவி செய்ய என்று எல்லா வற்றையும் விட்டு விட்டு வெறுமையே பரலோக கனவு கண்டுகொண்டிருக்கிறோம் . இதையும் செய்ய வேண்டும் அதையும் விடா திருக்க வேண்டும் என்றே ஆண்டவர் நம்மை அழைத்து இருக்கிறார் . இந்த காரியத்தை மறந்தால் நாமும் மேலே சொன்ன நால்வரில் ஒருவராகத்தான் இருப்போம் . சிந்திப்போம் செயல்படுவோம் .

Forest Tamil story ஏசாயா 53 :5

காட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம் எப்பொழுதும் செழிப்பாக இருந்தது. ஆனாலும் அங்கே ஒரு பெரிய பிரச்சனையும் இருந்தது. அவர்களை வாழ வைத்த காட்டில் ஒரு வகை மரம் இருந்தது. அதன் கனி அழகானது. பலமான அதன் வாசனை அதை உண்ணத் தூண்டும். ஆனால் தப்பித்தவறி அதை உண்டு விட்டால் அவ்வளவுதான். உண்டவர்கள் பத்து நாட்கள் வரை தன்னை மறந்து வெறி பிடித்து அலைவார்கள். கண்ணில்படும் எவரையும் தாக்குவார்கள். கொடூரமாய்ப் பசிக்கும். எது கிடைத்தாலும் தின்பார்கள். பெரும்பாலும் பத்து நாட்களில் பசியில் மடிவார்கள். ஒரு வேளை புத்தி தெளிந்தாலும், அந்த கனியின் ஆசை மீண்டும் அதைப் புசிக்க வைத்து விடும். இதனாலேயே அங்கே ஒரு வழக்கம் இருந்தது. பழத்தை உண்ட வெறியோடு யாராவது கண்ணில் பட்டுவிட்டால் அவனைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஏனென்றால் அவன் திருந்த வாய்ப்பே இல்லை என்பதுடன் அவனால் பிறருக்கு ஆபத்தும் நேரிடும். வருடத்தில் ஒருவரேனும் இப்படிக் கல்லெறியப்பட்டு சாவது வழக்கமாகிப் போனது.
அந்த கிராமத்தில் அன்பான ஒரு தகப்பன் இருந்தார். அவர் தன் மகன் மீது உயிரையே வைத்திருந்தார். அவனிடம் அந்த மரத்தின் தீமைகளைப் பற்றிச் சொல்லி இருந்தார். அவனும் எச்சரிக்கையாகவே இருந்தான். ஒரு நாள் அவன் காட்டுக்குள் தேனெடுக்கச் சென்ற போது அவன் கொண்டு சென்றிருந்த கஞ்சிக் கலயம் தவறுதலாகக் கீழே விழுந்து உடைந்தது. அன்றைக்கென்று சோதனையாய் தேன் கூடு எதுவுமே கண்ணில் படவில்லை. பசி குடலைத் தின்றது. வீடு திரும்பிச் செல்வதென்றால் சில மணி நேரங்களாகும். பசி மயக்கத்தில் விஷக்கனியின் வாசனை மூக்கைத் துளைத்தது .ஒரு யோசனை தோன்றியது. தின்றால்தானே பிரச்சனை? முகர்ந்தால் கொஞ்சம் பசி அடங்குமே. முகர்ந்தபடியே ஊர் போய் சேர்ந்து விடலாம் என்ற முடிவுடன் மரத்தருகே வந்து கீழே கிடந்த ஒரு கனியைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் யோசனை சரிதான். பழத்தை முகர்ந்தவுடனே பசி குறைந்தது. வேகமாய் வீடு நோக்கி நடந்தான். பழத்தின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாய் அவனை வெறி கொள்ள வைத்தது. சிறிது நேரத்தில் தன்னை மறந்தான். தின்று விட்டான். மிருகம் கத்தியபடி ஊருக்குள் ஓடினான். கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கப் பாய்ந்தான். செய்தி ஊருக்குள் பரவியது. எல்லோரும் கல்லோடு கூடி வந்தார்கள். இல்லையென்றால் அவர்களுக்கல்லவா ஆபத்து? செய்தி அறிந்த தந்தை கதறி ஓடி வந்தார். ஊர்த் தலைவரிடம் அழுது, கெஞ்சி மகனால் யாருக்கும் ஆபத்து வராது என்று வாக்களித்தார். ஏற்கனவே மகன் இரண்டு மூன்று கற்களால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்து கிடந்தான். ஊர்த்தலைவர் சொன்னார், "ஜாக்கிரதை. அவன் உங்களையே கொல்லலாம். அது மட்டுமில்லாம மறுபடியும் பழத்தை தின்னாம அவனால இருக்கவே முடியாது". தந்தையின் நல்ல பெயரால், அந்த ஊரில் முதல் முதலாய் அவன் கல்லடிக்குத் தப்பினான்.
பத்து நாட்கள் ஓடின. மகன் வெறி தெளிந்து எழுந்தான். பழத்தைத் தின்றது நினைவுக்கு வந்தது. தான் உயிருடன் இருப்பதை நம்ப முடியவில்லை. மகன் தெளிவாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்பா ஓடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார். மகன் அழுதபடி கேட்டான் "ஏம்ப்பா இப்படி இளைச்சுட்டீங்க? அப்பா "நான் பத்து நாளா சரியா சாப்பிடலப்பா" "ஏம்ப்பா கண்ணெல்லாம் இப்படி வீங்கிக் கிடக்குது" "தூங்கவே இல்லை. அதோட தொடர்ந்து அழுதுட்டே இருந்தேன்" திடீரென்று பதறிக் கேட்டான்" என்னப்பா கையில காயம்?" "அது உனக்கு சாப்பாடு ஊட்டும் போது நீ கடிச்சது. உனக்கு அப்பல்லாம் ரொம்ப பசிக்குமே , "கழுத்தில இருக்கிற காயம்?" "தரைல தூங்கறியேன்னு தூக்கி மெத்தைல படுக்க வச்சேன். அப்ப நீ கடிச்சது". மகன் கதறி அழுதான். எனக்காக இவ்வளவு பாடுபட்டீங்களே அப்பா! எல்லாரையும் போல சாக விட்டிருந்தா இந்தப் பாடுகள் உங்களுக்கு வந்திருக்குமா? " அப்பா சிரித்தபடி சொன்னார், " நீ புத்தி தெளிந்து அழுவதைப் பார்த்ததும் என் காயத்தின் வலியெல்லாம் மறைஞ்சே போச்சுடா!" ஒரு வாரம் கழித்து மகன் மீண்டும் காட்டுக்குப் போனான். பழத்தின் நினைவு வந்து கை கால் நடுங்கியது. சகலமும் மறந்து பழத்தைக் கையிலெடுத்தான். கடிக்கப் போன வேளையில் நினைவுக்கு வந்தது அவனுக்காக அப்பா பட்ட காயங்கள். "இல்லப்பா! இனிமே நீங்க என்னால காயப்பட விடமாட்டேன்". பழத்தைத் தூக்கி வீசி வீடு திரும்பினான்.
அன்பான சகோதர சகோதரிகளே, பிசாசு உனக்குள் பாவ இச்சையைக் கொண்டு வர முயன்றால் நீங்கள் அவரது காயங்களை நினைத்துபாருங்கள், நமக்காக அவர் சிந்திய இரத்தத்தை நினைத்து பாருங்கள்..
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53 :5
நம்மை குணமாக்கி விடுவித்த நம் இயேசுவுக்கு சாட்சியாக வாழுவோம்..
பாவத்திற்க்கு விலகி ஓடுவோம்.. 

Maramum mara viyabariyum tamilstory

ஒரு பண்ணை வீட்டில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதற்கு நூறு வயதுக்கு மேல் இருக்கலாம். மர வியாபாரி ஒருவனுக்கு பெரிய வீடு ஒன்று கட்டுவதற்காக நன்கு வளர்ந்து முதிர்ந்த மரம் தேவைப்பட்டது. இந்த மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் பண்ணையின் உரிமையாளரிடம் விலை கேட்டான். அவரோ அது பழமையான மரம் என்பதால் அதை விற்க மறுத்து விட்டார். வியாபாரிக்கு அந்த மரம்தான் தனது வேலைக்கு முற்றிலும் பொருத்தமானது என்று பட்டது. எனவே கொஞ்சம் கூடுதலான தொகையையே கொடுப்பதாகக் கூறினான். அதற்கும் உரிமையாளர் சம்மதிக்கவில்லை. கடைசியாகத் தன்னுடைய நிலையை அவரிடம் கூறிக் கெஞ்சினான். அவருக்கும் பாவமாக இருந்தது. இருந்தாலும் பல தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கும் மரத்தை வெட்ட அவருக்கு மனதில்லை. "ஐயா! உன் நிலை எனக்கும் புரிந்தது. இருந்தாலும் வீட்டில் ஒரு நபர் மாதிரி இருக்கும் மரத்தை எப்படி வெட்டி சாய்க்கமுடியும்? நீ வேறு இடத்தில் தேடிப்பார்" என்றார். வியாபாரிக்கு ஒரு யோசனை தோன்றியது,
" முதலாளி! என் வேலை ஆரம்பிக்க இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதற்குள் உங்கள் மரத்தின் ஆயுள் முடிந்து மரம் பட்டுப்போய்விட்டால் நான் மரத்தை வெட்டிக் கொள்கிறேன். அட அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் நான் அதுவாகவே எப்போது காய்ந்து போகிறதோ அப்போது வந்து வெட்டிக் கொள்கிறேன். எப்படி ஆனாலும் இந்த மரத்தை எனக்கு மட்டுமே விற்க வேண்டும். சரியா? "
என்றான். அவனது கோரிக்கை வினோதமாகப் பட்டாலும் முதலாளி சரி என்று தலையசைத்தார்.
அவன் சொன்னதுடன் நிற்காமல் ஒரு பணமுடிப்பையும் அவர் கையில் திணித்து,
"இந்த மரத்தை நான் வாங்கிட்டேன். மறுக்காமல் இந்த கிரயத்தை வாங்கிக்குங்க முதலாளி" என்றான் .
"பைத்தியமா இவன்? என்னைக்கு இந்த மரம் காஞ்சு போறது , என்னைக்கு இவன் வெட்டுறது. சரி! பணத்துக்குப் பணமும் ஆச்சு. இவன் இனி தொல்லையும் இருக்காது " என்று எண்ணியபடி பணத்தை வாங்கிக் கொண்டு சொன்னார்
" இனி இந்த மரம் என்னைக்குப் பட்டுப் போகுதோ அன்னைக்கே உனக்கு சொந்தம் " .
வியாபாரிக்கு வாயெல்லாம் பல். 
" முதலாளி! நம்ம ஒப்பந்தத்துக்கு அடையாளமா ஒன்னே ஒன்னு வேணும். இந்த மரத்தோட அடிப்பகுதியிலேர்ந்து ஒரு அடி அகலத்துக்கு மரத்தோட பட்டையை மட்டும் சுத்தி உரிச்சு எடுத்து வச்சுக்குறேன். அனுமதி கொடுப்பீங்களா ? " என்றான்.
முதலாளி அவன் முதுகில் தட்டி,
" என்னை நம்பி மரத்துக்கு உண்டான முழுக் கிரயத்தையுமே குடுத்திட்ட.
இந்தப் பட்டையைக் கூடவா உன்னை நம்பி தராம இருப்பேன். தாராளமா எடுத்துக்கய்யா" என்றார்.
அவனும் சரியாக ஒரு அடி அகலத்தில் மரத்தைச் சுற்றிலும் பட்டையை உரித்து எடுத்துக் கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டுக் கிளம்பினான்.
"ம்ம்ம். இந்தக் காலத்துலேயும்கூட இப்படி ஒரு அப்பாவி. பாவம்!" என்றபடி பணத்தை மடியில் கட்டிக்கொண்டார்.
உண்மை என்ன தெரியுமா ?
மரத்தின் பட்டைதான் அதற்குத் தொப்புள் கொடிமாதிரி. அதற்கு வேண்டிய சத்துக்கள் எல்லாம் அதன் வழியாகத்தான் கடந்து செல்லும். சரியாய் ஓரிரு மாதங்களிலேயே மரம் வேண்டிய ஊட்டம் கிடைக்காமல் பட்டுப் போனது. வியாபாரியும் வந்து மரத்தை வெட்ட ஆரம்பித்தான். முதலாளிக்கு மட்டும் நூறு வருஷத்து மரம் திடீரென்று காய்ந்து போன அதிசயம் இன்னும் புரியவே இல்லை.
செல்லமே! நூறு வருஷத்து மரமாய் இருந்தாலும் வேரோடு தொடர்பு அற்றுப் போகும்போது காய்ந்து போகிறது. 
"ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்"
2 பேதுரு 3 :17 .

Fish and danger tamilstory

ஒரு குளத்தில் சில மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. பாசி களில் புகுந்தும், கற்களிடையில் மறைந்தும், சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன.
திடீரென ஓரிடத்தில் "ச்சலக்" என்ற சத்தத்துடன் ஒரு இரை வந்து விழுந்தது. ஆவலோடு எல்லா மீன்களும் ஓடிச் சென்றன. அதில் முந்திச் சென்ற மீன் அந்த இரையைக் கவ்விக் கொண்டது. அந்த நொடியே அந்த மீன் வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது.
அம்மீனை காணவில்லை. கொஞ்சநேரம் அந்த தொலைந்த மீனை தேடிய மற்ற மீன்கள் மீண்டும் விளையடத் தொடங்கின. 
சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு "ச்சலக்" சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தன மீன்கள். அதே இடத்தில் மீண்டும் ஒரு இரை விழுந்திருந்தது. எல்லா மீன்களும் ஓடிச்சென்றன. அதிலும் முந்திச் சென்ற மீன் அந்த இரையை கவ்விக் கொள்ளவே அம்மீனும் வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது. 
முன்னர் போலவே மிகுதியான மீன்கள் கொஞ்சநேரம் தொலைந்த மீனை தேடிவிட்டு மீண்டும் விளையாடத் தொடங்கின. 
மூன்றாம் தடவையும் "ச்சலக்" சத்தத்துடன் இரை வந்து விழுந்தது. மூன்றாவதாகவும் ஒரு மீன் அதைக் கவ்விக் கொண்டு மேலே சென்று மறைந்தது. 
இப்படியே நான்காவது , ஐந்தாவது மீன்களும் இரையை கவ்விக் கொண்டு மேலே சென்று மறைந்தன. 
இப்போது அந்த மீன் கூட்டத்தில் மிகுதியாக இருந்த இரண்டு மீன்களையும் பயம் வந்து கவ்விக் கொண்டது. மற்ற மீன்களெல்லாம் மறைந்து போவதற்கு என்ன காரணம் என சிந்திக்கத் தொடங்கின. 
அப்போதுதான் “தூண்டில்” என்ற ஒன்றைக் குறித்து அவைகளுக்கு ஞாபகம் வந்தது. “இனிமேல் அவ்விடத்தில் வந்து விழும் இரையை தின்பதில்லை” என முடிவு செய்தன . 
மீண்டும் முன்னர் போலவே "ச்சலக்" சத்தம் கேட்டது. மீன்கள் திரும்பிப் பார்த்தன. இனி அந்த இரையை உண்பதில்லை எனத் தீர்மானித்த மீன்கள் அருகில் சென்று அந்த இரையை உன்னிப்பாக பார்த்தன. தூண்டிலும் இரையும் வெவ்வேறாக தெளிவாக தெரிவது போல இருந்தது. 
“அந்த தூண்டிலை பிடிக்காமல் இரையை மட்டும் பிடித்தது. பிய்த்து தின்றால் என்ன?...” 
ஒரு மீன் மற்ற மீனை பார்த்து கேட்டுக் கொண்டே தூண்டிலில் வாய் படாமல் இரையை மெதுவாக கவ்வி இழுத்தது. 
எதிர்பாராமல் திடீரென தூண்டில் அதன் வாயில் படவே வசமாக கொழுவிக் கொண்டது. சில நொடிகள் இழுத்து கழட்டிக் கொள்ளப் பார்த்தும் முடியாமல் போகவே. அந்த மீனும் மேலே இழுபட்டுச் சென்று மறைந்தது. 
தனிமையாக குளத்தினுள் நின்ற மீன் தீர்க்கமாக முடிவு செய்தது. இனிமேல் அந்த இரையை தொடக்கூடாது என்று. ஆனால் அந்த மீன் அவ்விடத்திலே நின்று இரை மீண்டும் விழுகிறதா என கவனித்தது . 
மீண்டும் "ச்சலக்" சத்தத்துடன் இரை வந்து விழுந்தது. மீன் அருகில் செல்லவில்லை. தனது கடைமையை அந்த மீன் உணர்ந்தது.
அந்தப்பக்கமாக வரும் எல்லா மீன்களிடமும் முன்னால் தூண்டில் இருப்பதை கூறி எச்சரிக்கை செய்தது. தூண்டிலின் ஆபத்து தன்மையை எடுத்துக் கூறியது. தன்னோடிருந்த மீன்கள் இழுத்துக் கொள்ளப்பட்ட வகையை மற்ற மீன்களுக்கும் கூறி அந்த மீன்களை எச்சரிக்கை செய்வதை தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தது. 
சில மீன்கள் எச்சரிப்பை உணர்ந்து தப்பிக் கொன்டாலும் பல மீன்கள் எச்சரிக்கை செய்த மீனை "பைத்தியம்" என்று கூறி தூண்டிலில் அகப்படத்தன் செய்தன. 
ஆபகூக் : 01: 15 இல் " அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக் கொள்கிறான்" என்று வேதம் சொல்கிறது. 
பிசாசு நம்மையெல்லாம் தன் பக்கம் இழுத்துக் கொள்வதற்கு நமக்கு தூண்டில் போடுகிறானாம். அந்த தூண்டிலில் குத்தப்பட்டுள்ள இரை என்ன தெரியுமா? 
ஒரு வேளை அது ஒரு நல்ல தொழிலாக இருக்கலாம், ஒருவேளை கைநிறைய வரக்கூடிய வருமானமாக இருக்கலாம் அல்லது பொருளோ, உணவோ, உடையோ எதுவாகவும் இருக்கலாம். உங்கள் கண்ணை கவர கூடிய எதுவாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என நீங்கள் விரும்பும் ஒருவராக கூட இருக்கலாம். 
நானும் நீங்களும் இன்று தேவனால் எச்சரிக்கை செய்யப் படுகின்றோம். 
அந்த மீன்களுக்கு முன்பதாக அவை விரும்பக்கூடிய இரை வந்தது போல, நாம் விரும்பும் ஆசீர்வாதம் நமக்கு முன் காணப்படும் போது அது தேவனிடம் இருந்து வந்ததா? அல்லது அது சாத்தான் போடும் தூண்டிலா? என நிதானித்து பார்க்க வேண்டும். 
உதாரணமாக – ஒரு நல்ல தொழிலை எடுத்து கொள்வோம் அது அதிக சம்பளத்தை உடையதாக இருக்கலாம். 
சம்பளத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன் அந்த வேலை என்னை தேவனை விட்டு பிரிக்குமா? என யோசிக்க வேண்டும் அந்த வேலையால் என்னை சாத்தான் தன் பக்கம் இழுத்து விடுவானா? என்று யோசிக்க வேண்டும். 
நீங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு செல்லாமலிருக்கவும், உங்களை பின் வாங்கச் செய்யவும் அந்த வேலை உங்களை தூண்டும் என உணர்ந்தால் எவ்வளவு சம்பளமாக இருந்தாலும் அதை உதறிவிட்டால் நீங்கள் தான் ஒரு உண்மையான விசுவாசி. விசுவாசியுங்கள், ஜெபியுங்கள் அதைவிட நல்லதொரு வேலையை தர நம் தேவனால் முடியாதா? 
வாழ்க்கைத் துணையை தேடும் போதும் அப்படித்தான். ஒருவேளை அது தேவன் தரும் ஆசீர்வாதமாகவும் இருக்கலாம். அல்லது சாத்தானின் தூண்டிலாகவும் இருக்கலாம். அந்த ஜந்து மீன்களையும் போல ஓடிப் போய் கவ்விக் கொள்ளாமல் கடைசி இரண்டு மீன்களைப்போல உன்னிப்பாக கவனித்து ஆவியில் சோதித்துப் பார்த்து நலமானதாக இருந்தால் பிடித்துக் கொள்ளுங்கள்.
தூண்டில் இருப்பது தெரிந்தும் அந்த இரண்டு மீன்களில் ஒன்று செய்தது போல. நான் மாட்டிக் கொள்ளமாட்டேன், பக்குவமாக கையாளுவேன் என்றெல்லாம் நினைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 
கடைசியாக தப்பிப்பிழைத்த மீனைப் போல, பலர் தூண்டிலில் பிடிபடுவதை கண்ணால் பார்த்தவர்கள் செய்யும் எச்சரிக்கைகளுக்கு செவிகொடுங்கள். அது உங்கள் நண்பர்களாகவோ பெற்றோராகவோ யாராகவோ இருக்கலாம். 
அவர்களை “பைத்தியம்” என்று கூறி தூண்டலைக் கவ்விக் கொண்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

Care others always tamil story

பிரச்சினை எப்போது வருமென்று தெரியுமா?
================================
ஒரு வீட்டில் எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
எலி வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......
அடுத்தவருக்கு முடிந்தவரை உதவிடுங்கள்

parrot and cat ஏசாயா 28 :16 tamilstory

ஒரு வீட்டில் நிறைய கிளிகளை வளர்த்தார்கள். அவற்றிற்கென வீட்டில் கம்பிவலையினால் செய்யப்பட்ட பெரிய கூண்டும் இருந்தது.
ஆனாலும் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் ஏதாவது ஒரு வழியில் திடீரென பூனை வந்து ஓரிரு கிளிகளைப் பிடித்து விடுவதும் நடந்து கொண்டு தான் இருந்தது.
கிளிகள் எப்போதும் கீச்மூச்சென்று கத்திக்கொண்டே இருந்ததால் பூனை வருவதை வீட்டுக்காரரால் கணிக்கமுடியவில்லை. 
அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கிளிகளுக்கெல்லாம்
"பூனை, பூனை " என்று கத்த பயிற்சி கொடுத்தார்.
கிளிகளும் அதை நன்றாகவே கற்றுக் கொண்டன. ஆனால் சில சமயங்களில் திடீர் திடீரென்று பூனையே வராதிருக்கும்போதும் "பூனை , பூனை " என்று சம்மந்தமே இல்லாமல் கத்தின. வீட்டுக்காரர் உடனே தடியுடன் ஓடி வருவார்.அங்கே பூனையே இருக்காது இருந்தாலும் அவை நாளடைவில் பழக்கப்பட்டு விடும் என எண்ணி சமாதானப்படுத்திக் கொண்டார்.
கிளிகள் இப்போது நன்றாகப் "பூனை, பூனை " என்று கத்த பழகிவிட்டன. வீட்டுக்காரருக்கு நிம்மதி. இனி பூனை வந்தால் கிளிகள் கத்திக் காட்டிக் கொடுத்து விடுமே! 
ஒரு நாள் இரவு கிளிகள் இருந்த கூண்டு சரியாக மூடப்படவில்லை. அந்த சமயத்தில் பூனை உள்ளே நுழைந்து விட்டது. பூனையைக் கண்டதும் கிளிகள் தாம் கற்றுக் கொண்ட பூனை என்ற வார்த்தையை மறந்து போயின. தங்களின் பழைய சுபாவப்படி கீச்மூச்சென்று கத்தத் தொடங்கின. எனவே பூனை வந்ததை வீட்டு எஜமான் அறிந்து கொள்ளவில்லை.
பூனை இந்த முறை இன்னும் கூடுதலான கிளிகளைப் பிடித்துக் கொன்றது.
சும்மா இருக்கும் போதெல்லாம் கர்த்தருடைய வார்த்தைகளை உச்சரிக்கிறோம். ஆனால் பிரச்சினை வந்தால் மட்டும் சகலமும் மறந்து பழையபடி புலம்ப ஆரம்பித்து விடுகிறோம். இனியாவது வார்த்தைகளைக் கொண்டு பிரச்சினைகளை ஜெயிப்போமா ?
" விசுவாசிக்கிறவன் பதறான் "
ஏசாயா 28 :16

monkey nature ரோமர் 8 :13

முதலாளி ஒருவருக்குப் பல விதமான மிருகங்களை வளர்ப்பதில் மிகு‌ந்த ஆர்வம் இருந்தது. அதற்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி, வேலியிட்டு , அவற்றைப் பராமரிக்க சில வேலையாட்களையும் நியமித்திருந்தார். 
தினமும் காலையிலும், மாலையிலும் நடைப் பயிற்சி போல அங்கே சென்று வருவார். 
ஒரு முறை அங்கு ஒரு குட்டிக் குரங்கையும் கொண்டு வந்தார்கள். முதலாளி அதைப் பார்த்ததுமே அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. அதை மட்டும் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக வளர்க்கும்படி கட்டளையிட்டார். அது அவர்சொன்னபடியே வளர்க்கப் பட்டது. 
மறுநாள் ஒரு வேலை நிமித்தமாக முதலாளி சிறிது நாட்கள் வெளியூர் செல்ல நேரிட்டது. வேலை முடிந்து அவர் திரும்பி வர ஒரு மாதம் ஆனது. வந்தவுடன் வழக்கம் போலவே மிருகங்கள் வளர்க்கும் இடத்திற்கு சென்றார். 
ஒவ்வொன்றாய்ப் பார்வையிட்டுவிட்டுக் குரங்கை எடுத்து வரச்சொன்னார். பணியாளர் ஓடிப்போய் குரங்கைத் தூக்கி வந்து முதலாளியிடம் கொண்டு வந்தார். குரங்கை முதலாளியின் காலடியில் விட்டு விட்டு ஒரு குச்சியை எடுத்து அதன் முதுகில் சுரீரென்று ஒரு அடி கொடுத்தார். குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கி நின்றது. இதைப் பார்த்ததும் முதலாளிக்குக் கோபம் வந்துவிட்டது. 
" அட மூர்க்கனே! வாயில்லா ஜீவனை இப்படியா துன்புறுத்துவாய்? இனிமேல் இப்படி நடந்து கொண்டால் உன்னை கடுமையாக தண்டிப்பேன்" என்றபடி நடுங்கியபடி நின்ற குரங்கைத் தடவிக் கொடுத்தார். பணியாளர் ஏதோ சொல்ல வந்தார். ஆனால் சொல்லவில்லை. 
குரங்கு நட்புடன் அவரைப் பார்த்தது. முதலாளி பணிக்குத் திரும்பினார். அன்று முழுவதும் அவருக்கு அடிபட்டு அலறிய குரங்கின் முகமே அடிக்கடி நினைவில் வந்தது. அதன் மேல் ஒரு பரிதாபம் உண்டானது.
மறுநாள் இதற்காகவே கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து அங்கே சென்றுவிட்டார். 
பணியாளரிடம் குரங்கை எடுத்து வரச்சொன்னார். குரங்கு கொண்டு வரப்பட்டது. இந்த முறை அது அவரது கையையும், ஆடைகளையும் மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. அவருக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. 
மறுநாள் வந்தபோது குரங்கு அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தது. முதலாளி அதையும் ரசித்தார். அடுத்த நாள் மீண்டும் அவர் குரங்கைக் கொண்டு வரச்சொன்னார். இந்த முறை குரங்கு நேராக அவர் தலையில் ஏறியது. அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து வீசிவிட்டு அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தது. முதலாளி வலி தாங்க முடியாமல் அலறினார். பணியாளர் ஓடிவந்து பிரம்பால் குரங்குக்கு சுள்ளென்று ஒரு அடி கொடுத்தார். குரங்கு வீலென்று அலறிய படியே நடுங்கிக் கீழே இறங்கி அடக்கமாய் நின்றது. 
பணியாளர் சொன்னார்,
" ஐயா! குரங்கை இப்படி வளர்த்தால்தான் அது அடங்கி இருக்கும் ". 
நமது சரீரமும், மனமும் இப்படிப்பட்டவைதான். உபவாசத்தாலும், இரவு ஜபங்களாலும், வசனத்தாலும் அவ்வப்போது அடி கொடுக்காமல் விட்டு விட்டால் அது நம் தலையில் ஏறி அமர்ந்து கொள்ளும். அவமானம் படுத்திவிடும். கவனமாய் இருப்பாயா?
" ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் "
ரோமர் 8 :13